தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (21-11-2021)

21st Nov 2021 08:11 PM

ADVERTISEMENT


என் இனிய நண்பரும், கோவை அஸ்வின் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் எல்.பி. தங்கவேலுவின் மகன் அக்ஷய், பரமத்தி வேலூர் தொழிலதிபர் ராஜகோபாலனின் மகள் அபர்ணா திருமண வரவேற்பு கோவை ஆனைகட்டியில் நடைபெற்றது. கொங்கு வேளாளர் திருமண முறைகள் குறித்து நிறையவே படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இதுவரை அந்தச் சடங்குகளை நான் நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்பை அந்தத் திருமணம் எனக்கு ஏற்படுத்தித் தந்தது.

டாக்டர் எல்.பி. தங்கவேலுவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரையும் அந்தத் திருமண நிகழ்வில் சந்திக்க முடிந்தது. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், "சக்தி' குழுமத் தலைவர் ம.மாணிக்கம், பண்ணாரி சர்க்கரை ஆலை அதிபர் பாலசுப்பிரமணியம், டி.ராஜ்குமார் என்று அருட்செல்வரின் குடும்பத்தினர் அனைவருமே வந்திருந்தார்கள். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரின் நல்லாசியுடன் நடந்த அந்தத் திருமண நிகழ்வில், மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, 

"இயகோகா' சுப்பிரமணியம்,  முன்னாள் பழனி எம்.எல்.ஏ. வேணுகோபால் என்று பலருடனும் மனம்விட்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டதில் அப்படி என்ன சிலாகித்துச் சொல்ல இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கிறது. சுமார் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு பொது நிகழ்வில் பலரையும் பார்த்தும், பேசியும் அடையும் மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, மீண்டும் உலகம் இப்படியெல்லாம் திரும்புமா என்கிற ஏக்கத்திற்குக் கிடைத்த விடை என்பதுதான் அதன் சிறப்பு.

ADVERTISEMENT

கொங்கு வேளாளர் திருமண நிகழ்வு குறித்து கிருஷ்ணராஜ் வாணவராயர், எனக்கும்,  டாக்டர் தங்கவேலுவின் சம்பந்தி ரா.அர்ஜுன மூர்த்திக்கும் விரிவாகவே விளக்கினார்.  இப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அடிப்படையில் பண்டைய பாரம்பரியச் சடங்குகள் பல இன்னும்கூட மாறாமல் நடப்பதை அவர் சுட்டிக்காட்டி விவரித்தார். அதாவது, செருப்புத் தைப்பவர், முடி திருத்துபவர், துணி வெளுப்பவர் என்று சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அந்தத் திருமணச் சடங்கில் முக்கியமான பங்களிப்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டியபோது, முன்னோர்களின் பரந்து விரிந்த மனிதநேயப் பார்வை வியப்பை ஏற்படுத்தியது.

""நீதிக் கட்சியும், திராவிட இயக்கங்களும் உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொங்கு வேளாளர் சமுதாயம் சமூக நீதியையும், சமத்துவ உணர்வுகளையும், சுயமரியாதைத் தத்துவங்களையும் வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்து வருகிறது'' என்கிற அவரது கூற்றை அந்தத் திருமணச் சடங்குகள் உறுதிப்படுத்தின. 

சொல்லப் போனால், சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய, அதாவது ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு முன்பு வரை இந்தியத் திருமணங்கள் அனைத்துமே இதுபோல சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதைக்குரிய பங்களிப்பு வழங்கின என்பது தெரிகிறது. நாகரிகம் என்கிற பெயரில் உயர்வு - தாழ்வுகள் மனதளவில் குடியேறி,  அந்தச் சம்பிரதாயங்களுக்கு விடைகொடுத்து விட்டன. கொங்கு வேளாளர் சமுதாயத்தில் அந்தத் தவறு நிகழவில்லை.

கொள்ளை நோய்த்தொற்று அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று, மீண்டும் சமுதாயத்தில் கலகலப்பு ஏற்படுவதன் அடையாளமாகத்தான் நான் டாக்டர் தங்கவேலு இல்லத் திருமணத்தைப் பார்க்கிறேன். நமது கவனம் குறைகிறதோ, நோய்த்தொற்று அதிகரிக்கிறதோ என்கிற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், மனித இனம் ஒரேயடியாக முடங்கிப் போய்விடவில்லை என்பது மகிழ்ச்சியான 
செய்திதானே..!

----------------------------------------------------

அந்தத் திருமண நிகழ்வில் "சக்தி' குழுமத் தலைவர் ம. மாணிக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தபோது, சென்னையைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த மழை குறித்தும், தெருவெல்லாம் பெருகி ஓடும் பெருவெள்ளம் குறித்தும் பேச்சு வந்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஏரிகளும், குளங்களும், பஸ் நிலையங்களாகவும், குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டதுதான் தெருவில் தேங்கிக் கிடக்கும் மழை வெள்ளத்துக்குக் காரணம் என்கிற சேர்மன் மாணிக்கத்தின் கருத்தில் நிறையவே உண்மை இருக்கிறது. பிரச்னைக்கு வழிகாண வேண்டுமே தவிர, இனிமேல் அந்தத் தவறுகளைத் திருத்த முடியாது. 

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை எப்படி இருந்தது என்பது குறித்துத் திரும்பியது எங்கள் உரையாடல். அப்போது எனக்கு நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய "தியாகராயநகர் அன்றும் இன்றும்' புத்தகம் நினைவுக்கு வந்தது. "பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள். அன்றைய சென்னை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அன்றைய மாம்பலம் அதாவது இன்றைய "தி.நகர்' என்று அழைக்கப்படும் தியாகராய நகர் எப்படி இருந்தது என்று தெரிந்து கொண்டாலே போதும்.

சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தி. நகர் பனகல் பூங்கா அருகில் உள்ள நல்லி துணிக்கடைக்குச் சென்று "தியாகராய நகர் அன்றும் இன்றும்' புத்தகத்தின் பிரதி ஒன்றை வாங்கிப் படித்தேன். முன்பே படித்த புத்தகம்தான். யாருக்கோ படிக்கக் கொடுத்தேன், திரும்ப வரவில்லை.

-
---------------------------------------------------


முன்பொரு முறை எங்கள்  முதுநிலை உதவி ஆசிரியர் நா. செந்தில் குமார் நான் படிப்பதற்காக  அசோகமித்திரன் எழுதிய "அழிவற்றது' சிறுகதைத் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தார். நீண்ட நாளாக அந்தப் புத்தகம் எனது பெட்டியிலேயே இருந்தது. தினமணி, ஓம்சக்தி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பு மலர்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு அது. தனித்தனியாக அதில் வெளிவந்திருக்கும் பல கதைகளைப் படித்திருந்தாலும், இப்போது ரயில் பயணத்தில் அந்தக் கதைகளைத் தொகுப்பாகப் படித்தபோது புதிதாகப் படிக்கும் உணர்வு ஏற்பட்டது.

சாதாரணமாக சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கும்போது பத்தில் ஒன்றாவது சுமாராகத்தான் இருக்கும். விருந்து சாப்பாட்டில் சிறிய கல்போல அந்தக் கதை சலிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தி, ஏனைய கதைகளின் சிறப்பைக் குறைத்துவிடும். "அழிவற்றது' தொகுப்பில் பதினேழு சிறுகதைகள். முத்தாரம் போல ஒன்றை ஒன்று விஞ்சும்படியான ரகம்.

இத்தனை நாள்கள் படிக்காமல் இருந்ததற்கு என்னைநானே கடிந்து கொண்டேன்.


மழையில் சென்னை மிதந்தபோது,  "உரத்த சிந்தனை' ஆசிரியர் உதயம் ராம் எழுதிய கவிதை, "சக்தி' குழுமத் தலைவர் ம. மாணிக்கம் பேச்சு வழக்கில் சொன்னது எழுத்து வடிவம் பெற்றது போல அமைந்திருந்தது அவரது கவிதை வரிகள்.

ஏரிகள் ஏரியாக்கள் ஆயின
பெருமழை பொழிந்ததும்
ஏரியாக்கள் மீண்டும்
ஏரிகளாயின.

Tags : tamilmani This Week Kalarasiga
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT