தமிழ்மணி

பந்தாடிய வெள்ளத்திற்குப் பாடிய சிந்து, கும்மி

21st Nov 2021 08:07 PM | தி.செல்லப்பா ப.சோமசுந்தர வேலாயுதம்

ADVERTISEMENT

 

இயற்கைச் சீற்றங்கள் நடப்பது இன்று நேற்றல்ல... அது காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றன என்பதற்கான சான்றுகள் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன.

1923-ஆம் ஆண்டு,  "திருநெல்வேலி சந்திப்பு' என இன்று வழங்கப்படும் அன்றைய வீரராகவபுரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தில் மக்களின் உடைமைகள் முற்றாகப் பறிபோயின. இதற்குக் கால்நடைகளும் தப்பவில்லை. ரயில் நிலையத்தில் நின்றிருந்த எஞ்சினை வெள்ளம் புரட்டிக் கீழே தள்ளியதாகவும் தெரிய வருகிறது.

கலெக்டர் அலுவலகத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்து அன்றைய வெள்ளை -ஆங்கிலேயர்கள்) அலுவலர்களை இடம்பெயர வைத்ததாம். அன்றைக்கு ஒரு ரூபாய்க்கு மூன்றே முக்கால் படி அரிசி விற்றதாகவும், வெள்ளத்திற்குப் பின்னர் மூன்றுபடி விற்று,  பின்னர் இரண்டே முக்கால் படியும் விற்றதாம்.

ADVERTISEMENT

1923-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையினால் தாமிரவருணியில் வந்த வெள்ளத்தை நினைவில் கொண்டு சிந்துக் கவியாகவும், கும்மியாகவும் "பெருவெள்ளச் சிந்தும் உடைப்புச் சிந்தும்' எனும் பெயரில் இயற்றியவர், பாளையங்கோட்டையைச் சார்ந்த எஸ்.ஏ.அளகர்சாமி பாகவதர். இதை இந்நூலின் கடைசி பாடல் எடுத்துரைக்கிறது.

"ஆதிசிதம்பரத்தே கிளியே' என்ற வர்ணமெட்டில் அமைந்த சிந்துப் பாடல் வரிகள் இவை:

திருநெல்வேலி ஜில்லாவில் - கிளியே
தாம்பிரவர்ணி நதியில்
வெள்ளம் வந்த கதையை
துள்ளலாய்ப் பாடுவேண்டி - கிளியே     -பா.1)
வள்ளல் கிருபையினால் - அன்னமே
வந்த விபரீதங்கேள்
மெள்ள, மெள்ளக்கதையை - அன்னமே
சள்ளைச லுப்புமற்று         -பா.2)
கார்த்திகை மாசம்தன்னில் - கோமதி
கடாசித்தே தியன்று
இரா, பத்து மணிக்கி - கோமதி
ஏராளமாக வேதான்         -பா.3)
சனிக்கிளமை தன்னில் - தங்கமே
மழையும் பெய்ததினால்
களை எடுத்ததுபோல் - தங்கமே
பிளைகள் வந்துதடி         -பா.4)
ஆற்றுப்பாலம் தன்னில் - காமாச்சி
கண்வாய்கள் பொழிந்து
தண்ணீர் போச்சுதடி - காமாச்சி
பண்ணின பாவத்தினால்         -பா.5)
மலையாளத்தைவிட்டு - மன்னவா
வந்தமெயில் வண்டி
சேர்மாதேவியிலே - மன்னவா
நிலையாய் நின்றதுதாமே!         -பா.6)
பேட்டை ஸ்டேஷனிலே- கோட்டிக்காரி
மாட்டையும் ஏற்றிவந்த
டக்கு ரெயில்வண்டி - கோட்டிக்காரி
பக்கென்று நின்றுதடி          -பா.7)
இவ்வாறு 25 பாடல்கள் உள்ளன.

கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில...

கும்மியடிப் பெண்ணே கும்மியடிநீயும்
கூந்தல் குலுங்கக் கும்மியடி
நம்மையாளும் சீத்தாராமனை
நாடிப்பாடிக் கும்மியடி         -பா.1)
பெருத்த வெள்ளங்கள் வந்ததினாலே
பொருத்தமான வீராபுரத்தில்
நிருத்து விற்கின்ற திராசுகளைக்கூட
எடுத்துப் போச்சே அந்த வெள்ளம் !     -பா.2)
ரயில்ரோட்டையும் வெள்ளம்வந்தறுத்து
மெயில் வண்டிகளும் போகாமல்
இஞ்சினையுங்கூட உருட்டிப்பிரட்டி
பஞ்சுபோலல்லோ சாய்த்துதடி     -பா.16)
ஆடுகளோடு நாயும் பன்றியும்
அந்த வெள்ளத்தில் போனதுடன்
மாடுகள் எருமை மரச்சாமானும்
குடமும் கொப்பரை போச்சுதடி     -பா.17)
வெள்ளம் வந்தபின்பு மூணுபடியும்
அதன்பின் ரெண்டயமுக்காலும்
பிந்தினநாளில் ரெண்டரையாகவும்
விற்கவும் விதித்தார் ஆண்டவரும்      -பா.25)
வாசம் கமழ்கின்ற பாளையங்கோட்டை
மாநகரில்மதி பாகவதன்
அய்யாசாமிபெற்ற அளகர்சாமிபாட்டை
ஏற்றுக்கொள்ளும் புவிமேலோரே!     -பா.30)

Tags : tamilmani இயற்கை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT