தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (07-11-2021)

7th Nov 2021 08:29 PM

ADVERTISEMENT

 

கோவை கம்பன் கழகத்தின் முன்னாள் செயலாளர் பெரியவர் நா. நஞ்சுண்டனின் மறைவைவிட என்னை அதிக துக்கத்திலும் சோகத்திலும் ஆழ்த்திய செய்தி அவருடைய மகனின் கையறு நிலைதான். எத்தனை எத்தனையோ இளம் பேச்சாளர்களைக் கோவை கம்பன் கழகத்தின் மூலமாகவும், இளங்கோவடிகள் மன்றத்தின் மூலமாகவும் உருவாக்கிய பெரியவர் நா. நஞ்சுண்டனின் இறுதிச் சடங்குகளை முறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றுவதற்கான வசதியின்மையால் அவருடைய மகன் சிரமப்படுகிறார் என்று கேள்விப்பட்டபோது மன வேதனையடையாமல் எப்படி இருக்க முடியும்?

மறைந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் தேவைதானா என்று சிலர் கேட்கக்கூடும். அது அவரவர் தனிப்பட்ட கருத்தைப் பொறுத்தது. ஒருவருக்கு வேண்டாம் என்று படுவதாலேயே அதை இன்னொருவர் செய்வது தவறு என்றும், அனைவரும் தங்களது கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, தனி உரிமைக்கும் எதிரானது. இந்த விஷயத்தில் என் தாய்வழிப் பாட்டனாரின் கருத்துதான் எனது கருத்தும்.

என் தாய்வழிப் பாட்டனாருக்கு ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கை கிடையாது. அவருக்கு இறை நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், அவர் கோயில்களுக்குப் போவதில்லை.  எங்களை அவரது காரில் கோயிலுக்கு அழைத்துச் சென்றாலும்கூட, நாங்கள் பாட்டியுடன் கோயிலுக்குச் செல்வோம், அவர் வெளியே காத்திருப்பார். மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர் பல ஏழை மாணவர்களை, குறிப்பாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளைப் படிக்க வைத்தார் என்பது எனக்குத் தெரியும்.

ADVERTISEMENT

அவர் தன் பெற்றோருக்கான வருடாந்திர சிராத்தச் சடங்குகளை கடைசிவரை முறைப்படி தவறாமல் செய்து வந்தார். அது குறித்து நான் அவரிடம் ஒரு முறை கேட்டபோது அவர் சொன்ன பதில் என்னை சிலிர்க்க வைத்தது. 

""தனிப்பட்ட முறையில் எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கு யாரும் சிராத்த காரியங்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால்,  எனது பெற்றோருக்கு அதில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் ஆசார அனுஷ்டானங்களைக் கடைசிவரை கடைப்பிடித்தார்கள். அவர்களது நம்பிக்கையைப் புறக்கணிப்பது தவறு. தங்களது ஈமச் சடங்குகளையும், பித்ரு காரியங்களையும்  செய்வதற்காக மகன் பிறந்திருக்கிறான் என்று சந்தோஷப்பட்டு என்னைப் போற்றி வளர்த்த அவர்களது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நான் புறக்கணிக்கத் தயாராக இல்லை!'' என்பதுதான் அவரது விளக்கம்.

பெரியவர் நா.நஞ்சுண்டன் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்திருந்தவர். அவருடன் தொடர்புடையவர்கள் மனமிருந்தால்  அவருடைய மகனைத் தொடர்பு கொள்ளவும். இது தகவலல்ல,  வேண்டுகோள்!

-------------------------------

"கவிக்கோ' அப்துல் ரஹ்மான் மறைந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன.  வரும் நவம்பர் 9-ஆம் தேதி அவரது 84-ஆவது பிறந்த தினம் வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டை சிஐடி காலனியில் உள்ள "கவிக்கோ' மன்றத்தில் காலை 10 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அன்று மாலையில் "கவிக்கோ இலக்கியக் கழகம்' என்கிற அமைப்பு தொடங்க இருக்கிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம.இராசேந்திரனால் தொடங்கி வைக்கப்படும் அந்த அமைப்பின் முதல் சிறப்பு சொற்பொழிவாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரை நிகழ்த்த இருக்கிறார்.

மீண்டும் முன்புபோல இலக்கிய நிகழ்வுகள் சென்னையில் நடைபெறுவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும்; அமைய வேண்டும். எத்தனை நாள்தான் பார்வையாளர்கள் இல்லாத காணொலி நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருப்பது?

-------------------------------

எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சேர்த்து பதினெண்மேல்கணக்கு என்றும், நாலடியார் தொடங்கி நான்மணிக்கடிகை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை என்று தொடங்கி திருக்குறள் உள்ளிட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு என்றும் வகைப்படுத்தப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைத் தவிர ஏனைய நூல்கள், மேற்கணக்கு நூல்கள் போலப் பரவலாக வாசிப்புக்கும், விரிவான ஆய்வுக்கும் உள்ளாகவில்லை என்பதுதான் உண்மை.

மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முதுமுனைவர் ப.திருஞானசம்பந்தம் எழுதியிருக்கும் பதினெண்கீழ்க்கணக்கு குறித்த ஆறு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, ஆய்வு செய்யப்படாத பல செய்திகளை நுட்பமாக உற்று நோக்கிப் பதிவு செய்கிறது. 1885 முதல் 1944 முடிய ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் நடைபெற்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்று வரையறுப்பது குறித்த  விவாதம் இன்றும்கூட முடியாமல் இருப்பதையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

""பதினெண் மேற்கணக்கின் ஒவ்வொரு நூல் தொகுப்பு மரபிலும் ஓர் அரசியல் பின்புலம் உள்ளதை உணர முடிகின்றது. ஆனால், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு மரபு இதிலிருந்து மாறுபட்டது. மேற்கணக்கில் ஒவ்வொரு தொகை நூலும் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டதன் தொகுப்பாக இருக்க, கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புலவர்களால் பாடப்பட்டவை'' என்று தொடங்கி,  தமிழ்விடு தூதில் தொடங்கி பல்வேறு நூல்களில் பதினெண்கீழ்க்கணக்கு குறித்த இலக்கியப் பதிவுகளை ஆய்வு செய்து பதிவிட்டுள்ளார் ப. திருஞானசம்பந்தம்.

இதில் இடம்பெற்றிருக்கும் ஆறு கட்டுரைகளும்,  ஒவ்வொன்றும் முனைவர் பட்ட ஆய்வுபோல விரிவாகவும், தெளிவாகவும் அமைந்திருப்பதுதான் சிறப்பு. ஏற்கெனவே 2015-இல் "பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி' என்கிற புத்தகமும், 2018-இல் "பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்' என்கிற புத்தகமும் ஆசிரியரால் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இப்போது வெளிவந்திருக்கும் "பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பும் வாசிப்பும்', அவரது ஆழங்காற்பட்ட  வாசிப்பையும், புரிதலையும் வெளிப்படுத்துகிறது.

""பதினெண்கீழ்க்கணக்கு பற்றி இத்தனை செய்திகளா என்கிற திகைப்பை ஏற்படுத்தும் இந்த நூல் நெட்டோட்டமாகவும் மேலோட்டமாகவும் பார்ப்பதற்குரிய நூலன்று'' என்கிற அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் ம.பெ.சீனிவாசனின் மதிப்பீடு மெத்தச் சரியானது. அவர் கூறுவதுபோல, "ஆசிரியரின் உழைப்புக்கும் ஆய்வுத்திறத்திற்கும் மதிப்பளித்து வரியடைவே படித்து மனதில் பதிந்துகொள்ள வேண்டிய கருத்துக் களஞ்சியமாக' இந்த நூல் திகழ்கிறது.


கவிஞர் இரமேசு. கருப்பையாவின் "யானை பற்றிய சில கேள்விகள்' கவிதையின் கடைசி சில வரிகள் இவை.

யானை எப்போது வீட்டுக்குப் போகும்?
யானைக்கு வீடு இல்லை, 
ஏன், வீட்டைத் தொலைத்து விட்டதா?
இல்லை, அதன் காட்டைத்
தொலைத்து விட்டோம்!

Tags : tamilmani This Week Kalarasigan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT