தமிழ்மணி

இந்திய விடுதலைப் போரில் இராமாயணம்!

7th Nov 2021 08:17 PM | -முனைவர் சொ.அருணன்

ADVERTISEMENT

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பலரும் பலவிதங்களில் பங்கேற்றனர். ஆயுதம் தாங்கியோர், அறப்போராட்டங்களில் ஈடுபட்டோர், புரட்சிக் கருத்துகளைத் தம் படைப்புகளில் தந்து மக்களை உணர்ச்சியெழச் செய்தோர் எனப் பலவகை.

மகாகவி பாரதியார் இந்திய மக்களிடம் நன்கு அறிமுகமாகியிருந்த பாரதக் கதையின் உட்கருத்தை விடுதலைப் போராட்டக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இந்தியத் தாயைப் பாஞ்சாலியாகவும், பாண்டவர்களை இந்தியர்களாகவும் ஆங்கிலேயரைக் கெளரவர்களாகவும் மாற்றிப் பாஞ்சாலி சபதக் காவியம் புனைந்தார்.

சூதில் தோற்றுப் போய் பாஞ்சாலியைப் பணயம் வைத்ததைப் போல் வாணிகம் என்ற பெயரில் வந்த ஆங்கிலேயரிடம் இந்தியத் திருநாட்டை அடிமையாக்கிவிட்ட தன்மையைச் சுட்டி, மக்கள் மனத்தில் வீர உணர்வினை ஏற்படுத்தினார். இது மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றால், இராமாயணக் கதையும் இந்திய விடுதலைக்குப் பயன்பட்டிருக்கிறது.
தென்திசையிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு தொடங்கிய வீரபாண்டிய  கட்டபொம்மனின் உயிர்த் தியாகத்தைத் தொடர்ந்து நெல்லைச் சீமை கொதித்துப் போயிருந்தது. இளையவனாகிய ஊமைத்துரையும் பாளையங்கோட்டையில் சிறைப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் பாஞ்சாலங்குறிச்சி மக்களின் உள்ளங்கள் குமுறிக் கொண்டிருந்தன.

ADVERTISEMENT

சிவகங்கைச் சீமையில் சாமியப்பன் என்னும் கூத்துக் கலைஞர் நடத்தும் "இலங்காதகனம் தோற்பாவைக் கூத்து' வெகு சிறப்பாக இருக்கும். இவர் பெரிய
மருதுவின் பேரன்பைப் பெற்றவர். இலங்காதகனத்தைப் புரட்சிக் கதையாக மாற்றி மக்களின் உள்ளத்தில் வீர உணர்வைத் தூண்டுகிறவர். சாமியப்பனின் கூத்தில் ராவணன் வெள்ளையரக்கனாக மாறிவிடுவான். சின்ன மருது இலக்குவனாகவும், ஊமைத்துரை அனுமனாகவும் மாறுகிற வேளையில், சீதை தமிழ்த் தாயாக உருக்கொள்வாள். வெள்ளையரக்கனின் கூலியாட்கள் அரக்கிகளாகித் திரிவார்கள்.

ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கப் புரட்சி வீரர்கள் முயன்று கொண்டிருந்த வேளையில் சாமியப்பன் இலங்காதகனம் கூத்து நடத்துகிறார். அது உண்மையிலேயே பாளையங்கோட்டை சிறைத் தகனமாக மாறிவிட்டதை யோகி சுத்தானந்த பாரதியார் தனது "சுதந்திரக் கனல்' நூலில் பதிவு செய்துள்ளார்.

சீதையை அரக்கிகள் மிரட்டுகிறார்கள். ராவணன் சீதையிடம் வாதாடுகிற காட்சி மெகாலே கப்பம் கேட்ட கதையைப் போலிருக்கிறது. வருத்தம் தாளாத அவள் ஒரு கொடியில் தூக்குப் போட்டுக்கொள்ள முயலும் காட்சி கட்டபொம்மனின் தூக்குச் சம்பவத்தை மக்களுக்கு உணர்த்தி, சுதந்திரக் கனலை மேலும் அதிகமாக மூட்டி விடுகிறது.

ஆனால், கும்பெனி  படைவீரர்களும், துரைமார்களும் குடித்துக் கும்மாளமிட்டபடி மாடியில் இருந்து கூத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னரே கூலியாட்களாகவும், பலவித வேடங்கள் தரித்துச் சூழ்ந்திருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் ஆயுதங்களுடன் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர்.

இடுதீ இடுதீ இராவணன் கோட்டையில்
இடுதீ இடுதீ - மாருதி வீரா
என்று சாமியப்பன் பாடியபோது, 
விடுதலைத் தீயிடு விடுதலைத் தீயிடு
வெள்ளைக் கோட்டையிலே

என்று ஆயிரம் குரல்கள் எதிரடி பாடினவாம். கண நேரந்தான். மக்கள் மனத்தில் எழுந்த சுதந்திரக் கனல் மக்களைப் புரட்சி வீரர்களாக்கி, அந்தக் கோட்டையைச் சுட்டெரித்து, ஊமைத்துரையை விடுதலை செய்துவிட்டது. உண்மையாகவே இலங்காதகனம் நிகழ்ந்துவிட்டதால் கூத்து நிறுத்தப்பட்டு, வந்த வேலை முடிந்ததைப் போல சாமியப்பன் பாவைகளைப் பெட்டியில் அடைத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.

இந்திய விடுதலைப் போருக்கு இராமாயணக் கதையும் சாமியப்பன் போன்ற கலைஞர்களால் மக்கள் மனத்தில் வீர உணர்வைத் தூண்டுவதாக அமைந்ததை இந்த வரலாறு தெளிவாகப் புலப்படுத்துகிறது.

Tags : tamilmani Ramayana in the Indian Liberation War!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT