தமிழ்மணி

ஒரே ஒரு சொல்லில் ...

7th Nov 2021 08:20 PM | -ச.ஸ்ரீமூலநாதன்

ADVERTISEMENT

 

நம்பிக்கை என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உண்டு. தினசரி வாழ்க்கையே நம்பிக்கையில்தானே தொடங்குகிறது. இறைவனை நம்பாதவர்கள்கூட உடலினுள் இருக்கும் உயிரை நம்புகிறார்கள். பல் வலியோ, சிறு காயமோ ஏற்பட்டால் "உயிரே வலிக்கிறது' என்றுதான் சொல்வார்கள். உடல் வலி என்று உணருவதில்லை.

ஆன்மா எனப்படும் உயிர் கருவில் உருவாகும் தருணத்திலேயே அவ்வுடலை விட்டு நீங்கும் தருணமும் நிச்சயிக்கப்படுகிறது. கம்பர் பெருமான், வாலியின் வாயிலாகச் சொல்வது "தோன்றலும் இறத்தல் தானும் துகள் அரத் துணிந்து நோக்கின் மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே!' (பா.4088) என்கிறார்.

உயிர் பிரியும் காரணங்களில் ஒன்று மூப்பு. இந்த மூப்பு நிலைமையை அருண கிரிநாதர், திருச்செந்தூர் திருப்புகழில் "தொந்தி சரிய' என்ற பாடலில் உயிரின் பயணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். "குடல் சரிகிறது; மயிர்கள் வெள்ளையாக மாறுகின்றன; பற்கள் விழுகின்றன; முதுகு வளைகிறது; இதழ் தொங்குகிறது: நடப்பதற்கு கம்பு தேவைப்படுகிறது. "தொண்டு கிழம்' என மகளிரின் கேலிச் சிரிப்பு வாட்டுகிறது; இருமல் பெருக்கெடுக்கிறது; பேச்சுக் குழறுகிறது; விழிகள் குருடாகின்றன; காதுகள் செவிடாகின்றன; பிணிகள் துரத்துகின்றன; கடன் தொல்லைகள் மைந்தற்கு மாற்றப்படுகின்றன; துயரம் மேலோங்குகிறது; மனைவி உடல் மேல் விழுகிறாள்; எம தூதர்கள் கயிற்றினால் இழுக்கிறார்கன்; மலம் ஒழுகுகிறது. இவை அனைத்தும் சூழ்ந்துவர மரணம் நெருங்குகிறது... நெருக்குகிறது...

ADVERTISEMENT

மேற்சொன்ன காரணங்களைத் தாண்டி 'பிறவாமை' என்னும் முக்தியைப் பெற அந்தத் தருணத்தில் விரைவாக வந்து காப்பாற்ற வேண்டும் என்று அருணகிரியார் முருகனை வேண்டுகிறார். முருகன் வந்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட அவர் பாடிய சொல் "உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்'. உயிர் போவது என்பது சாதாரண வழக்கு. இது வேறொரு பிறவி வரும் என்பதற்கு முன்னெச்சரிக்கை. தக்க சமயத்தில் இறைவன் வந்தால் உயிர் மங்கும், மட்டுப்படும். அதன் பயணம் முடிவாகும். இப்படி மங்கிய உயிரை இறைவன் தனது மலரடியில் இணைத்துக் கொள்கிறான். வினைகள் முடியாத உயிர்களை கடவுள் "போக்கி' மீண்டும் "ஆக்குகிறான். "இறந்து, இறந்து இழிந்து ஏறுவது' (கம்பர்-5900) அருணகிரிநாதரின் சொல்லாகிய "மங்கும்' என்பது உளர்த்தக்கது.

கம்பரும் இதே சொல்லைக் கையாண்டிருக்கிறார். சுந்தர காண்டத்தில் இலங்கையில் சீதையைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய அனுமன், ராமனிடம் கூறும்போது "தாயார் இன்னும் இங்கு ஒரே ஒரு மாதம்தான் மேலும் காத்திருப்பேன், அதற்குள் எம்பிரானுக்கு என்னைக் காப்பாற்ற மனமில்லையாகின், நான் மங்குவேன் உயிரோடு' என்றாள்.

திங்கள் ஒன்று இருப்பென் இன்னே;
திருவுளம் தீர்ந்த பின்னை மங்குவென்
உயிரோடு என்று உன்
மலரடி சென்னி வைத்தான் (யா.5051-

இறைவன் அருளை முற்றும் பெற்ற கம்பரும், அருணகிரிநாதரும் வழங்கிய ஒரே ஒரு சொல்லில் பேருண்மையைப் பொதித்துள்ளார்கள்.

Tags : tamilmani In one word ...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT