தமிழ்மணி

பெயரற்றோர் பேசும் புகழ்மிக்க வரிகள் 

7th Nov 2021 08:13 PM | -இரா.கதிரவன்

ADVERTISEMENT

 

பெரும் புலவர்கள், காலத்தை விஞ்சி நிற்கும் அவர்களது படைப்புகளில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உயிர் ஊட்டியிருப்பர். ஒரு முதன்மைப் பாத்திரம் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை, "ஊன்று பாத்திரம்' என அழைக்கப்படும் சிறு பாத்திரம் அல்லது ஒரே ஒரு காட்சியில் தோன்றி மறையும் துணைக் கதாபாத்திரம் ஏற்படுத்துவதையும் பார்க்க முடியும்.

மேலும், சிறு கதாபாத்திரம்தானே என ஒதுக்கித்தள்ள முடியாத முக்கியத்துவம் பெற்ற மிக முக்கிய வரிகளைச் சொல்லும்படியாகவோ, கதைப் போக்கினை உணர்த்துவதாகவோ, கதைப்போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகவோ அத்தகைய ஊன்று பாத்திரங்கள் அமையும். மிகக்குறைந்த வரிகளைப் பேசினாலும், காலத்தை விஞ்சி நிற்கும் புகழ்மிக்க வரிகளை உச்சரிக்கும் சில பெயரற்ற கதாபாத்திரங்களும் உள்ளன.

தமிழ்க் காப்பியங்களிலும் இத்தகைய பாத்திரங்களைக் காணலாம். (எ.கா) பாஞ்சாலி சபதம்; ஒரேவொரு காட்சியில் தோன்றும் தேர்ப்பாகன் நம் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கிறான். பாஞ்சாலி பணயம் வைக்கப்படுகிறாள். அவள் வரமறுக்கும் காரணத்தால், மறுபடியும் தேர்ப்பாகனை அனுப்புவர். அப்பொழுதும் பாஞ்சாலி வரமறுப்பதால், மீண்டுமொருமுறை அனுப்பும்போது, தேர்ப்பாகன் மறுத்துக் கூறும் வரிகள் நம் நெஞ்சைவிட்டுஅகலாதவை.

ADVERTISEMENT

நூறு தரம் சென்றழைப்பினும் - அவர்
நுங்களைக் கேட்கத் திருப்புவார் - அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி - சொல்லில்
அக்கணமே சென்றுரைக்கிறேன்...

இதன் மூலம் தேர்ப்பாகனின் சங்கடமும், ஈர நெஞ்சும், நியாய உணர்வும் தெரியவரும். சாமான்ய மனிதனின் உள்ளத்தில் எழும் அனுதாப உணர்வை வெளிப்படுத்தும் வரிகள் அவை.

இன்னொரு காட்சி, சிலம்பில். கண்ணகியின் வருகையை மன்னனிடம் உரைக்கும் முன், வாயிற்காப்போன் கூறும் வாழ்த்துரை வரிகள் மறக்க
இயலாதவை.

வாழி எம் கொற்கை வேந்தே வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி!

குறிப்பாக இந்தக் கடைசி வரி கூறும் செய்தி, வெறும் வாழ்த்துச் செய்தி மட்டுமன்று. பாண்டியனுக்குக் கிடைக்கும் இறுதி வாழ்த்தும்கூட! இதுவரை பாண்டியனை எந்தப் பழியும் வந்து அண்டியதில்லை என்பதே பொருளானாலும், இனி தீராப்பழி வந்து பாண்டியன் மீது படிய உள்ளது என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறார் இளங்கோவடிகள். அத்தகைய பொருள் பொதிந்த வரிகளை, ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் ஒரு துணைப் பாத்திரத்தின் வாயிலாகவே தெரிவிக்கிறார்.

அலுவல் தொடர்பாக சில அலுவலகங்களுக்குச் சென்றால், அதிகாரி நம்மை முகமன் கூறி வரவேற்று, மதிப்போடு பேசுபவராக இருப்பார். ஆனால், அந்த அலுவலகப் பணியாள் (பியூன்), பார்வையாளரைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பேசுவது என்பது பல அலுவலகங்களில் காணக்கிடைக்கும் காட்சி.

பணியாளரின் இந்தப் பழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதன்றுஎன்கிறது ஒரு பாடல்.

உறையூர் சோழனின் அரண்மனையைத் தேடி சிற்றரசர்கள் சிலர் திறை செலுத்த வருகிறார்கள்.

காரணம், திறை செலுத்தும் கெடு தவறினால் சோழனின் கோபத்துக்கும், பகைக்கும் ஆளாக நேரிடும் என்பதால். அதனால் இன்று எப்படியாவது மன்னனைக் கண்டு திறையைச் செலுத்திவிட வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்துகிறான் வாயிற்காப்போன்.

""இன்று மன்னனைக் காண இயலாது. அரண்மனையில் இருக்கிறார். ஆனால்...''

""ஆனால்?''

""அவருக்குத் திருவடி வலி கண்டிருக்கிறது, புண் ஏற்பட்டிருக்கிறது''

""ஏன், என்னாயிற்று? மலை ஏறினாரா? வெகு தொலைவு நடந்தாரா? திருவடிப் புண்படக் காரணம் என்ன?''

""நேற்று ஏராளமான சிற்றரசர்களும், இன்ன பிறரும், திறை செலுத்த வந்தனர். திறை செலுத்தும் முன்னர் அவர்களது மணிமுடி மன்னனின் திருவடியில் பட விழுந்து வணங்கினர்.

அவர்தம் மணிமுடி மன்னனின் திருவடிகளில் பட்டுப் பட்டு, மன்னனது திருவடி புண்ணாகிவிட்டது. இன்னும் குணமாகவில்லை. அதனால் இன்று நீங்கள்
அவரைக் காணமுடியாது''

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க, இன்றும்
திருந்தடி புண்ணாகி செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ.

(முத்தொ.74)

மன்னனின் புகழ் பேசவும், அதே சமயம் வாயிற்காப்போனின் குறும்பையும், புலவர்தம் கற்பனைத் திறத்தையும் ஒருசேர சித்தரிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் எவரென இன்றளவும் தெரியவில்லை.

இவ்வாறு, துணைப் பாத்திரங்கள் பாடுவதாக அமையும் வரிகள் காலத்தை விஞ்சி நிற்பதையும், மன்னர் புகழை மட்டுமன்று, புலவர்தம் பெருமையையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பதை நம் இலக்கியங்களில் காண முடிகிறது.

Tags : Tamilmani Famous lines spoken by anonymous people
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT