தமிழ்மணி

பால்வண்ண முதலியாரின் சொற்பொழிவாற்றுப்படை

முனைவா் பா.சக்திவேல்


நூல்களைக் கற்பது பெரிதல்ல, கற்றவற்றை மற்றவர் அறியும்படி சொல்ல வேண்டும். அதுவும் கற்றவர் கூடிய அவைதனில் செல்லும்படியாகவும், சொல்லும்படியாகவும் சொல்லும் ஆற்றல் கொண்டவரே கற்றவருள் எல்லாம் கற்றவர் என்று தலைமைப் பட்டம் தந்து திருவள்ளுவர் சிறப்பிக்கிறார் "கற்றாருள் கற்றார் எனப்படுவர்' என்ற குறளில். 

அந்த வகையில், அதிகம்  கற்றவரும் சபையின் வரம்பைக் கற்று அதற்கேற்றவாறு தான் அறிந்தவற்றை நயமாகவும், பயமின்றியும் எடுத்துரைக்கும் ஆற்றல் எல்லோருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை. தற்காலத்தில், மேலை நாடுகளில் இதற்கென்று பல பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ் மொழியில் "அவை அஞ்சாமை' என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பெருங்கலையாக, தீரமாக வியந்து போற்றும் வீரமாகப் பார்க்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சொற்பொழிவு , தனிப்பேச்சு, மேடைப்பேச்சு, தன்முனைப்புப் பேச்சு, பட்டிமன்றம், பேச்சரங்கம், கருத்தரங்கம், வழக்காடு மன்றம், சுழலும் சொல் அரங்கம், விவாத அரங்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பேச்சு வியாபித்திருக்கிறது. 

 19-ஆம்  நூற்றாண்டில், திருநெல்வேலியில் பிறந்த எஸ். பால்வண்ண முதலியார் சைவ சித்தாந்த நூல்களைக் கற்றுத் தெளிந்து, சைவ நெறியில் உறைப்புடன் நின்று, அதன் விளக்கங்களை விரிவாகக் கேட்போருக்கு வழங்கியவர். 

மேடைகளில் உரையாற்றும் முறை தொடங்கிய காலத்தில் வடமொழியில் வழங்கப்பட்டு வந்த உபன்யாசத்திற்குத் தமிழ் மொழியில், "பிரசங்க விதி' என்கிற "சொற்பொழிவாற்றுப்படை' என்னும் 57 பக்கங்களே கொண்ட நூலைப் படைத்துள்ளார். "சொற்பொழிவு' என்கிற சொல்லை தமிழில் முதன்முதலில் எடுத்தாண்டவர் அவர். தனித்தமிழ் குறித்த சிந்தனை தூங்கிய நேரத்தில் அதனை முன்னெடுக்க விழைந்த மூத்த தமிழறிஞர்களின் வரிசையில் பால்வண்ண முதலியாரும் ஒருவர்.

 இவர் படைத்த "சொற்பொழிவாற்றுப்படை' நூலில் பொதுவியல், பேச்சுப் பயிலு முறையியல், பேசுவோரியல், பேசும் பொருளியல், அவையோர் நிலையியல், பேச்சின் பயனியல், பேசு நேரவியல், பிறன்கோண் மறுப்பியல், அவைத் தலைவரியல்,  முடிபியல் - என தனித்தனியே இயல் அமைத்து, பேச்சுக்கலை மேம்பட ஆலோசனைகளையும், குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.

"மிக உரக்கப் பேசுதலும், மிக மெதுவாய்ப் பேசுதலும் வெறுப்பை விளைத்து நிற்கும். ஆகவே நடுநிலையான ஓசையில் பேச வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார். "தெளிவு, இன்னோசை, கிளர்ச்சி முதலியவற்றோடு பேசுதற்கும்; மயக்கம், வல்லோசை, கோழைத்தனம் முதலியவற்றோடு பேசுதற்கும்  உள்ள வேறுபாடு உயிருள்ள உடலுக்கும் உயிரற்ற உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்ததாகும்'. பேசும்போது வெளிப்படுத்தும் கை 
அடையாளங்கள் பேசுவோரின் கருத்தை உணர்த்தும் வெளிக்குறிப்புகளாகும் என்கிறார். மேலும் எப்படியெல்லாம் பேசவேண்டும்  எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதைப் பலவாறு விவரிக்கிறார். இதை, "இந்நூற்கு வேண்டற்பாலனவான செய்யுட்கள்- பத்தழகுகள், பத்துக் குற்றங்கள்' என நூலின் இறுதியில் தந்திருக்கிறார். கூடவே, அருஞ்சொல் அட்டவணையையும் இணைத்துள்ளார்.

 "அறையிலாடி அவையிலாடுதல் சால்புடையது' என்பதற்கு எடுத்துக்காட்டாக, "சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் அனுமனே என்ன சொல்ல வேண்டும் என ஒரு முறைக்கு இருமுறை சொல்லிப் பார்த்துத்தான் உரைத்தார் என்பது காப்பியம் மொழியும் உண்மை' என்பதையும் கூறியுள்ளார். 

பேச்சாளரின் பேசும் விதிகளையும், பேசுவதற்கான இலக்கணத்தையும் எடுத்தியம்பியுள்ளார்.

பயிற்சியும், முயற்சியும், மொழி ஆளுமையும், சீரிய சிந்தனையும் ஒருவரை சிறந்த நாவலராக்கும் என்பதில் ஐயமில்லை. பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்பும் அனைவருக்கும் இந்நூல் உரம் சேர்க்கும்.

1911-ஆம் ஆண்டு முதல் பதிப்பு கண்ட இந்நூல், மறுபதிப்பு கண்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால், இணைய தளத்தில் (பிடிஎஃப் கோப்பாக) சென்று தேடினால் கிடைக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT