தமிழ்மணி

தாலாட்டில் தமிழ் மணமும் மரபும்!

DIN

'மகப்பேறு' என்பது பெண்மையின் பூரண நிலை. பெற்ற குழந்தையைப் பேணி வளர்ப்பதில், தாலாட்டுப் பாடல்களைப் பாடி உறங்க வைப்பது காலங்காலமாய் உள்ள வழக்கம். அப்படி தாலாட்டுப் பாடும்போது, இறையருளால் மகப்பேறு அடைந்தது, தாய் மாமன் பெருமை, பாட்டனார் பெருமை, தந்தையின் சிறப்பு இவற்றில் உளவியல் ரீதியான வார்த்தைகள் விரவிக்கிடக்கும்.
 வீர சிவாஜியும், செம்பியன் மாதேவியால் வளர்க்கப்பட்ட சோழ மாமன்னன் ராஜராஜசோழனும் வரலாற்றில் சிறப்புறு நிலையை அடைந்ததற்குக் காரணம், அவர்கள் தாய்மார்கள் பாடிய தாலாட்டுதான்.
 குழந்தையின் அழுகைக்குக் காரணமானவர் யாராயினும் குழந்தையின் முன் அதட்டினால், உடனே அது அழுகையை நிறுத்திவிடும். அழும் விதத்தைக் கொண்டே உறங்கவா, பசிக்கா அல்லது வலியிலா என்பதைத் தாயாரும், மருத்துவச்சிகளும் அறிவர்.
 அக்காலத் தாலாட்டில் பாட்டி வைத்தியம், கை மருந்து, கஸ்தூரி, வசம்பு, கோரோசனை, சுக்கு முதலிய மருந்துப் பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.
 "கைக்காலு வீக்கத்துக்கு கண்ணே - உனக்கு
 கனை எண்ணெய் வாங்கித் தாரேன்
 வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய்க் கண்ணே - உனக்கு
 வயிற்றுவலி வந்திருச்சா?
 வெற்றிலையும் உப்பும் வச்சிக் கண்மணியே
 வெறும் வயித்துல தின்னுடம்மா!
 குடலேற்றம் என்றாலும் கண்ணே - கருப்பி
 குடல் தட்டுவான் பயப்படாதே!'
 என்ற தாலாட்டில்தான் எத்துணை மருத்துவச் செய்திகள் உள்ளன. தாலாட்டு கேட்டு வளர்ந்த பிள்ளைகளும், தாய்ப்பால் உண்ட பிள்ளைகளும் பாசத்துடனும், வீரத்துடனும், பக்தி உணர்வுடனும் பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவர்களாக இருப்பர்.
 தாய்மைக்குத் தாலாட்டே தனிச் சொத்து. "தலைச்சன் பிள்ளைக்குத் தாலாட்டும்; கணவனை இழந்தாளுக்கு ஒப்பாரியும் தானே வரும்' என்பது கிராமத்துச் சொல் வழக்கு.
 பாண்டியன் அறிவுடைநம்பி புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (188) குழந்தைச் செல்வத்தின் அருமையைப் பாடியுள்ளார். அக்குழந்தை செல்வத்திற்காகத் தாய் பாடும் தாலாட்டில்தான் தாய்மை பூரிப்படைகிறது. குழந்தை உறங்க தொட்டிலை மாமன்மார் தன் வசதிக்கேற்ப செய்து தருவது மரபு. கம்பரும் தம் ராமாயணக் காவியத்தில், "சேலுண்ட செங்கனாரின் திரிகின்ற செங்காலன்னம்' என்ற பாடலில், இயற்கையின் அழகை தாலாட்டில் அமைத்துப் பாடியுள்ளார்.
 -உ. இராசமாணிக்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT