தமிழ்மணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்முகம்

தினமணி

 சோழவந்தான் என்னும் ஊர்ப் பெயர் எப்படி வந்தது? சோழர்களுக்கு அந்தகன் (எமன்) என்ற சிறப்புப் பெயரே அது. கோவீர பாண்டியன் சோழாந்தகன் எனப்பட்டான். அது மருவி சோழவந்தான் ஆயிற்று. அவ்வூரில் பெரும்புகழோடு வாழ்ந்த அரசப்பப் பிள்ளை - பார்வதி அம்மை ஈன்றெடுத்த முதல் பிள்ளையே சண்முகம் பிள்ளை.
 திண்ணைப் பள்ளி ஆசிரியர் அழகர்சாமி தேசிகர், சிவப்பிரகாச துறவியார் ஆகிய அருந்தமிழ்ச் சான்றோர்களிடம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்றுத்தெளிந்த சண்முகனார் தம் இருபத்து இரண்டாம் வயதிலேயே சிம்மக்கல் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் அமர்ந்தார்.
 ஆங்கிலத்தால் தமிழ் ஆசிரியர் பணியை விட்டார்: 1902-ஆம் ஆண்டில் கல்விச் சாலைகளில் ஆங்கில மொழிக்கு நிகராகத் தமிழ் மொழிக்குப் பாட வேளைகள் சம அளவில் இருந்தன. ஆனால், சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் நாராயண ஐயர் தமிழ்ப்பாட வேளைகளைக் குறைத்துவிட்டார். இதை அறிந்த சண்முகனார் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று முறையிட்டார். "மாற்றித் தர இயலாது, தமிழ்தானே! அதனால் என்ன பயன்?' என்று சொல்லி மறுத்துவிட்டார். சிறிதும் தயங்காமல் சண்முகனார் தம் பணியைத் துறப்பதாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அந்தப் பள்ளியைவிட்டு விலகினார்.
 பேராசிரியர் பணியைத் தொட்டார்: நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய மன்னர் பாண்டித்துரைத் தேவரால் (14.9.1902) சங்கத்தின் சார்பில் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை தொடங்கப்பட்டபோது, தேவரின் வேண்டுகோளை ஏற்றுச் சண்முகனார் பேராசிரியர் பணியைத் தொட்டார்.
 அரசன் சண்முகமோ?: அன்று மணிமேகலை நூலை அச்சு ஏற்றியவரும், தமிழ் ஆராய்ச்சியில் சிறந்தவருமான மயிலை சண்முகம்பிள்ளை பல இதழ்களில் சண்முகனாரைப் போலவே அரிய கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்தார். "எந்தக் கட்டுரை எந்த சண்முகம் தந்தார்' என்று மக்கள் குழம்பினர். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவே, தம் தந்தையாரின் பெயரான "அரசன்' என்ற முன்னொட்டைச் சேர்த்து "அரசஞ் சண்முகம்' என்று தம் பெயரை அமைத்துக்கொண்டார்.
 திருவாவடுதுறை மடத்தின் தலைவரான திருப்பெருந்திரு அம்பலவாண தேசிகர், அரசஞ் சண்முகனாரைத் தம் திருமடத்துக்கு அழைத்தார். ""சண்முகம் என்பது முருகப் பெருமானின் திருப்பெயர். நீர் முருகனுக்கும் அரசன் ஆவீரோ?''என்று வினவினார் தேசிகர். ""முதலில் நான் வைத்துக்கொண்ட பெயர் ரசம் சண்முகம் என்பதே. ரசம் என்றால் வீரம், சுவை, ஒளி, ஞானம் எனப் பொருள்படும். அவை ஏதும் இல்லாத நான் அ-என்கிற எதிர்மறை எழுத்தை ரசம் என்கிற பெயரோடு சேர்த்து அரசன் சண்முகம் என்று வைத்துக்கொண்டது சரிதானே'' என்றார் அரசஞ் சண்முகனார். இதைக் கேட்ட தேசிகர் அகம் மிக மகிழ்ந்தார். இதனால், அரசஞ் சண்முகனாருடைய சொற்பொருள் நுட்பம் புலனாகிறது.
 வாக்குண்டாம்- புதிய விளக்கம் - அரிய சொல்லாடல்: மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் "உடல் நலம் உயிர் நலம்' என்ற பொருளில் சொற்பொழிவு ஆற்ற மன்னர் பாண்டித்துரைத் தேவர் அரசஞ் சண்முகனாரை வேண்டினார். அப்போது,
 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
 துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
 தப்பாமல் சார்வார் தமக்கு
 என்னும் மூதுரை பாடலை எடுத்துக்காட்டி, புதிய அரிய விளக்கம் தந்தார். திருமேனி - குப்பைமேனி; தும்பி - சிறுதும்பை, பெருந்தும்பை; பாதம் - சிறுசெருப்படி, பெருஞ்செருப்படி இவற்றை எல்லாம் பொடி செய்து தேனில் குழைத்து உண்டு வந்தால் உண்டவர்க்கு, வாக்கு - நல்ல சொல்லாற்றல் வரும், நல்ல மனம் வாய்க்கும்; மாமலராள் - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் அருளால்; நோக்கு - நல்ல கண்பார்வை உண்டாகும்; மேனி - உடம்பு; நுடங்காது - நோயால் நலியாது என்று அரிய புதிய விளக்கத்தை அதுவரை எவரும் எண்ணியும் பாராத பொருள் நுட்பத்தை அரசஞ்சண்முகனார் வழங்கியதால், அவையோர் வியப்பில் ஆழ்ந்தனர்.
 இலக்கண அறிவின் ஆற்றல்: புலவர்கள் கூடியிருந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், "உ ஊகார நவவொடு நவிலா' என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் "உகர ஊகாரங்கள் தாமே நின்றும், பிறமெய்களோடு நின்றும் பயின்று வருமேயன்றி, நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா' என்று விளக்கம் கூறியுள்ளார். இதைப் பேராசிரியர் மு. இராகவையங்கார் உள்ளிட்ட புலவர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசஞ் சண்முகனார் தயங்காமல் "நச்சர் உரை தவறு' என்றார்.
 "கதவு' என்ற சொல்லில் வகர மெய்யோடு "உ' வந்ததை எடுத்துக் காட்டினார். உடனே புலவர்கள், "இது வடமொழி வழக்கு என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றனர். அரசஞ் சண்முகனார் "களவு, துறவு, நொவ்வு' முதலான தனித்தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்டி, நச்சர் உரைக்கு மறுப்புரை வழங்கினார். எம்முகத்தால் ஆகாததும் சண்முகத்தால் ஆகும் என்று மெய்ப்பித்துக் காட்டினார், இலக்கணத்தில் உச்சம் தொட்ட அரசஞ் சண்முகனார்.
 திருக்குறளுக்குப் புத்துரை நல்கிய தெளிதமிழ்ச்செல்வர்
 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
 மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் 82)
 என்னும் குறளில் "சாவா மருந்து' என்று எண்ணிய பரிமேலழகர், சாவாமைக்குக் காரணமாகிய மருந்து என்று உரை வகுத்தார்."மருந்து என்றாலே சாவாமைக்குரிய மருந்துதானே. எனவே, சாவா என்ற சொல்லை மருந்துக்கு அடைமொழி ஆக்கக்கூடாது. சாவா என்ற சொல்லை - சாவாம் என்று முற்றாக்கி, விருந்தினர் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவுடன் ஒக்கும் என்றே பொருள் கொள்வது பொருத்தம்' என்று புத்துரை நல்கினார் சண்முகனார்.
 மொழி பெயர்ப்பில் முந்து நெறி கண்ட மூதறிவாளர்: சந்தப் பாக்களை வடிப்பதில் அரசஞ் சண்முகனார் சொற்களை முனை முறியாமல் எடுத்து ஆள்வதில் வல்லவர். அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட கருவிகள் ஆங்கிலப் பெயர் கொண்டே வழங்கப்படுகின்றன. ஆனால், அரசஞ்சண்முகனார் அவற்றுக்குரிய பெயர்களைச் செந்தமிழில் வடித்து வழங்கினார்.
 சைக்கிள் - ஒற்றை வழி ஓடும் இரட்டை உருள்; ஸ்டீம் என்ஜின் - அப்பின் ஆவியின் வேகமுறு உருள்; மின்சார டிராம் வண்டி - மின்சாரமுற்ற உருள்; மின் விளக்கு - நெய்த்திரியற்ற ஒளி; இரும்புக் குழாய் - இரும்பின் இயல் வார்குழல் என்று இவ்வாறு தனித்தமிழில் மொழிபெயர்க்க எவரால் முடியும் அரசஞ் சண்முகனாரைத் தவிர?
 நூல் பல ஆக்கிய நுவலரும் புலவர்: இன்னிசை இருநூறு, ஏகபாத நூற்றந்தாதி, சிதம்பர விநாயகர் மாலை, திருக்குறள் சண்முக விருத்தி, திருவடிப் பத்துக் கோவை, மாலை மாற்று மாலை, மீனாட்சி அம்மன் திருவடி மாலை, வள்ளுவர் நேரிசை என்னும் நூல்களைத் தாம் வாழ்ந்த நாற்பத்து ஏழு ஆண்டுகளில் வெளியிட்டு, தாம் நுவலரும் புலவர் என்பதைப் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்.
 சண்முகத்தைச் சவமுகம் ஆக்கிய கவிராயர்: நினைத்தால் மட்டுமே முகமழிப்பு செய்யும் வழக்கம் உடைய சண்முகனாருக்கு ஒருமுறை ராமன் என்ற நாவிதர் அவருக்கு முகம் வழித்துக் கொண்டிருந்தார்.
 அப்போது அவருடைய பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. உறையின்மேல் "சண்முகம் பிள்ளை' என்பதற்கு மாறாக, "சவமுகப் பிள்ளை'என எழுதியிருப்பதைக் கண்டதும் வெகுண்டார். இதை எழுதியவன் எவன் என்று ஆராய்ந்தபோது, அவருடைய நண்பர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பதை அறிந்து, ராமனை நோக்கி, "இனி நான் உயிர் வாழமாட்டேன்' என்று கூறி அவனை அனுப்பிவிட்டார்.
 முன்னரே பணமுடையாலும், அடிக்கடி வந்து வாட்டிய நோய் நொம்பலங்களாலும் உடலும் மனமும் வாடிய அரசஞ்சண்முகனார் மன உளைச்சலுக்கு ஆட்பட்டார்.
 "யான் இறந்த பின் நீயும் மூன்று திங்களில் இறப்பாய்'என்று கடிதம் எழுதிக் கவிராயருக்கு அனுப்பிவிட்டார். கவிராயர் தாம் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டினார். "என் முகத்தில் விழிக்க வேண்டா'என்று கடுகடுத்த அரசஞ்சண்முகனார், சில நாள்களிலேயே இறந்து போனார். கவிராயரும் ஒரு மாதத்துக்கு உள்ளேயே இறந்து போனார். அந்தக் கடிதத்தாள் அரசஞ்சண்முகனாரின் உயிரை அறுக்கும் வாளாகிவிட்டதே!
 ஈழநாட்டுக்கு அவர் சென்றபோது, "தங்கள் ஊர் யாது?' என்று வினவியவர்க்கு "யாமதுரையோம், யாம் மதுரையோம்' என்னும் ஒரு பொருளையும், "யாம் அது உரையோம்' என்னும் மற்றொரு பொருளையும் வித்தகமாகத் தந்த அரசஞ்சண்முகனாரின் சொல்லாற்றல் புலனாகிறது.
 செஞ்சொல்லால் சீர்மை விதைப்போம்! அரிய சொல்லால் ஆற்றல் விளைப்போம்!
 "தமிழ்ச் செம்மல்'
 புலவர் வே.பதுமனார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT