தமிழ்மணி

சொல் வேம்பு, ஆனால் செங்கரும்பு!

புலவர் குரு.சீனிவாசன்


தென்னவர் வழி வந்த தென்பாண்டி மன்னவன் அவன். ஒரு நாள் நெல்லை நகரின் நெடு வீதிகளில் உலா வருகிறான். குடிமக்கள் கொற்றவனை வாழ்த்தி வரவேற்கின்றனர். மங்கையர் மலர்கள் தூவி ஆரத்தி காட்டி மகிழ்கின்றனர். மாளிகைச் சாரளங்களில் நின்று வேடிக்கை பார்க்கும் கன்னியர் சிலர், வேந்தன் மீது பதித்த விழிகளை மீண்டும் பெயர்த்தெடுக்க முடியாமல் பேதுற்று நிற்கின்றனர். அவர்களுள் ஒருத்திதான் அந்தப் புலவரின் மகள்!

மன்னனைக் கண்ட அந்த மங்கையின் மனம் அவனைப் பின் தொடர்ந்து சென்றுவிடுகிறது. அதனால், பால் கசக்கிறது; பஞ்சணை வெந்தழலாகிறது. தலைவியின் தலைகீழ் மாற்றத்தைக் கண்ணுற்ற அவளுடைய ஆருயிர்த் தோழி, உண்மை நிலையினை உசாவி அறிகிறாள்.

"புலவர் மகள் புரவலர் மீது காதல் கொள்வது பொருந்தாத ஒன்று. அந்தக் காதல் ஆழிச் சிற்றலைபோல பாதியிலேயே அழிந்து, கரை வந்து சேராது. எட்டாத கனியை எண்ணி, ஏங்கிக் கிடப்பதால் என்ன பயன்? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டு, முடியப்போவது எதுவுமில்லை!' என்று உலகியல் எதார்த்தங்களைப் பக்குவமாக எடுத்துரைக்கிறாள். சேடியின் தெளிவுரைகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிறது!

கண்வழிப் புகுந்து கருத்தினில் கலந்துவிட்ட காவலனை நினைத்து அவள் தன் விழிகளை மூடுகிறாள். உலா வந்த தென்னவனின் தோற்றம், அவளது மனத்திரையில் மலர்கிறது. அவனது குன்றனைய தோள்களையும், மலர்ப் பாயலை ஒத்த பரந்த மார்பினையும் நினைவுகூர்ந்த அவளது நெஞ்சம், நெகிழ்ந்து நெக்குருகிப் போகிறது. அடுத்த கணம்... வேந்தனின் மார்பில் தவழ்ந்த வேப்ப மாலையின் காட்சி, அவளது நினைவில் நிழலாடுகிறது. "அந்த மாலைக்குக் கிட்டிய பேறுகூடத் தனக்குக் கிட்டவில்லையே' என்று அங்கலாய்க்கிறாள்.

இறுதியில் அவள் உள்ளத்தில் ஓர் ஆசை எழுகிறது. "வேந்தன் கிடைக்காவிடினும் பரவாயில்லை, அவன் மார்பில் புரளும் வேப்ப மாலையாவது கிடைக்காதா? அதைத் தழுவியாவது ஆசை தணியலாமே!' என நினைக்கிறாள். உடனே தோழியை அழைக்கிறாள்.

"அன்புத் தோழியே! அழிந்து கொண்டிருக்கும் என் ஆவியைக் காக்க விரும்புவாயாயின், வழுதியர்கோனின் வனப்பான மார்பில் புரளும் வேப்பந்தாரையாவது வாங்கி வருவாயாக! மங்கை என்றன் மனநோய் தீர்க்கும் மருந்து மன்னவன் சூடிய மாலையே!' என்று உறுதியாக உரைக்கின்றாள்.

தன் இன்னுயிர்த் தலைவிக்காக எதையும் செய்யத் துணிபவள்தான் அந்தத் தோழி! ஆயினும், மன்னனிடம் நேரில் சென்று மாலையை வேண்டுவது எப்படி? என்று எண்ணியபோது, மலைப்பால் மருகுகிறது அந்தப் பேதையின் மனம். நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருகிறாள். வேல் விழியாளுக்காக வேப்பந்தாரை வேண்டி, மன்னனுக்கு மடலொன்று வரைவதே, அவளது முடிவு.  அந்நிலையில் அவள் தீட்டிய நயமான மடல் இதுதான்:

"வேம்பா கிலுமினிய சொல்லுக்கு நீ புனைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ? - மீன்பாயும்
வேலையிலே வேலைவைத்த மீனவா நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்!'

ஒரு செய்யுளின் முதலாவது அடியில்  வந்த சொல்லோ, சொற்றொடரோ அடுத்த அடியிலும் மடங்கி (திரும்பி) வந்து வேறு பொருளைத் தருவது "மடக்கணி' எனப்படும். அவ்வணியின் நயம் அமைந்திட இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில் இடம்பெற்றுள்ள "வேம்பாகிலும்' என்ற தொடரே, பின்வருமாறு இருவகையாகப் பிரிக்கப்பட்டு, இருவேறு இனிய பொருள்களைத் தருகிறது.

முதலாவது அடி: "வேம்+பாகிலும் - இனிய சொல்லுக்கு' (வேகின்ற கருப்பஞ் சாற்றினும் இனிமையான சொற்களைப் பேசும் எனது தலைமகளுக்கு); இரண்டாவது அடி: "நீ புனைந்த வேம்பு+ஆகிலும்' (நீ சூடிய வேப்ப மாலையையாவது) உதவ வேண்டாமோ? அதேபோல,  செய்யுளின் மூன்று, நான்காவது அடிகளில் முறையே "வேலையிலே வேலை- மாலையிலே மாலை' என்று ஓரடிக்குள்ளேயே ஒரே சொல் இரண்டு முறை அடுக்கி வந்து, செம்மொழிச் சிலேடை அணி நயத்துடன் இருபொருள் தரும் இனிமையைக் காணலாம்.

மூன்றாவது அடி:  "மீன் பாயும் வேலையிலே' (மீன்கள் திரியும் கடலிலே) "வேலை வைத்த மீனவர்' (வேலினை எறிந்து வெருட்டிய பாண்டியர்) புயத்து மாலையிலே (உனது தோளில் புனைந்த வேப்ப மாலையின் மீது) - "மாலை வைத்தாள் மான்' (மான் போன்ற என் தலைவி (மால்) மயக்கம் கொண்டாள்). காவலனுக்குக் கவிதை மடல் தீட்டிய தோழியின் நெஞ்சம், இந்த ஒரு பாடலுடன் நிறைவு பெறவில்லை!

"சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண்'  என்றும்,
"மார்பைத் தார்க்கல்ல முத்து
வண்ணத் தார்க்கல்ல வஞ்சி
வேப்பந் தார்க்கு ஆசைகொண்டு விட்டாளே'

என்றும் மேலும் இரு பாடல்களையும் வரைந்து வழுதியர் கோனுக்கு அனுப்புகிறாள். வேம்பை விரும்பிய வேல் விழியாளான, தலைவியின் சொற்கள் மட்டுமா கரும்பு? தோழி புனைந்த இந்தக் கவிதைகளும் கரும்பல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT