தமிழ்மணி

ஈவார் மேல் நிற்கும் புகழ்!

DIN


சென்னைக்கு மேற்கே உள்ள "திருநின்றவூர்' இப்போது "திண்ணனூர்' என வழங்கப்படுகிறது. அவ்வூரில் வேளாண் மரபில் காளத்தி முதலியார் என்பவர் ஒருவர் பெருந்தனவந்தராக வாழ்ந்தார். வாரி வழங்கும் வள்ளல். "ஈவார் மேல் நிற்கும் புகழ்' என்ற திருவள்ளுவர் வாக்கின்படி அவர் புகழ் தமிழகம் முழுவதும் பரவியது.

அப்பொழுது காஞ்சி மாநகரை ஆண்ட பல்லவ மன்னன் ஒருவன் அது கண்டு பொறாமை கொண்டான். அவர் புகழுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினான். அமைச்சரை அனுப்பி, காளத்தி முதலியாருடைய திருமாளிகையிலுள்ள அனைத்தையும் பறிமுதல் செய்தான். இதுகண்டு வள்ளல் மிகவும் வருந்தினார்.

"கடவுளே! கருணைக் கடலே! ஒரு குற்றமும் செய்யாத என்னுடைய செல்வத்தைக் காரணம் கூறாமல் பறித்துக் கொள்வதும் ஓர் அரசியல் முறையா? இனி யாசிப்பவர்க்கு என்ன தருவேன்? இனி இந்த ஊரில், இந்த வீட்டில் இருப்பது கூடாது. கேட்பவர்க்கு இல்லை என்று கூறி இங்கிருக்கலாகாது? ஆகவே எங்காவது சென்று வாழ்வோம்' என்று எண்ணி மனைவியுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டார். அப்போது வழியில் அவர்கள் முன்பு கட்டிய சத்திரம் ஒன்று எதிர்ப்பட்டது. இருவரும் அங்கு சென்று தங்கினர்.

அதே சத்திரத்தில் வறுமையில் வாடும் புலவர் ஒருவரும் வந்து தங்கினார். அப்புலவரோ காளத்தி முதலியாரை நாடியே வந்திருக்கிறார். இரவு நேரமானதால் அவரும் அங்கு தங்கினார்.

அப்புலவர், தனக்குத்தானே "ஏ தரித்திரமே! நீ என்னைவிட்டுப் பிரியாமல் தொடர்ந்து வாட்டுகின்றாய். உடம்பை விட்டுப் பிரியாத நிழல்போல் நெடுங்காலமாக என்னைப் பிடித்து அல்லல் படுத்தும் உன் கொட்டம் நாளை வள்ளல் காளத்தியாரைக் கண்டதும் அடங்கிவிடும். அப்போது வறுமையே, நாளை நீ என்னைவிட்டுப் பிரிந்து போய்விடுவாய். நாளை நீ எங்கே? நான் எங்கே? இன்று ஓர் இரவுதானே... என்னுடன் இருந்துவிட்டுப் போ...' என்று புலம்புகிறார்; அதையே பாடலாகப் பாடுகிறார்.

"நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கா னீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு' (த.பா.)

இப்பாடலை மற்றொருபுறம் அமர்ந்து காளத்தி முதலியாரும் மனைவியும் கேட்கின்றனர். "நம்மை நாடி வந்திருக்கும் இப்புலவர் நாளை நமது மாளிகைக்குப் போனால் ஏமாந்து போவார். உடனே நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்வோம்' என்று கூறி இருவரும் புறப்படுகின்றனர்.

மறுநாள் புலவர் காளத்தி முதலியார் மாளிகைக்கு வந்து, "அடியேன் அருந்தமிழ்ப் புலவன். வறுமையால் துன்புற்று இங்கு வந்தேன். உங்களைக் கண்டுவிட்டேன், இனி எனக்கு ஒரு குறையுமில்லை' என்கிறார். காளத்தி முதலியார் அவரை இன்முகங்காட்டி வரவேற்கிறார்.

"சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை' (230)

என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். மனிதனுக்கு மரணத்தைக் காட்டிலும் கொடியது யாதொன்றுமில்லை. ஆனால், வள்ளல்களுக்கு யாரேனும் கேட்டு, அதை வழங்க முடியாத நிலை வரும்போது மரணமும் தித்திக்குமாம். அதனால், காளத்தி முதலியார் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தார்.

புலவரிடம், "இங்கேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்புறத்தில் இருந்த பாம்புப் புற்றுக்குள் கையை விட்டார். அரவம் சீறி வந்தது. "அள்ளிக் கொடுத்த வள்ளல் கைக்கு நஞ்சையா நல்குவது' என்று அந்தப் பாம்பு தன் நாகரத்தினத்தை காளத்தியார் கையில் உமிழ்ந்தது. வள்ளல் வீட்டுப் பாம்புக்கும் இந்த நற்குணம் அமைந்திருந்தது. விலைமதிக்க முடியாத அந்த நாகரத்தினத்தைக் கொண்டுவந்து புலவரிடம் கொடுத்தார் காளத்தியார்.

புலவர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். வள்ளலை வாழ்த்தி விடைபெற்றார். பிறகு, காஞ்சி மாநகரை அடைந்து, பல்லவ மன்னன் அரண்மனைக்குச் சென்று அவர் முன் அந்த நாகரத்தினத்தை வைத்துவிட்டு, ""மன்னர் பெருமானே! காளத்தி முதலியாரைப் போல ஒரு புண்ணிய மூர்த்தி உண்டா? காலையில் சென்றேன் உடனே இந்த மாணிக்கத்தை அந்த மாணிக்கம் தந்தார். மதிப்பிட்டு இதற்கு ஒரு விலையைத் தாருங்கள்'' என்றார்.

பல்லவன் கேட்டு அதிர்ச்சியுற்றான். ""மந்திரியாரே! நீங்கள் முதலியாரிடம் முழுமையாகப் பறிமுதல் செய்யவில்லை போலும். இதோ பாருங்கள்... இவருக்கு இம்மாணிக்கத்தைத் தந்திருக்கிறார். இன்னும் எத்தனை வைத்திருக்கிறாரோ? நானே நேரில் சென்று மீதமுள்ளதையும் பறிமுதல் செய்கிறேன்'' என்று கூறி புலவர், அமைச்சருடன் திருநின்றவூர் சென்றான் மன்னன்.

வள்ளல் காளத்தியாரைக் கண்டு, ""இதுபோன்ற மாணிக்கம் இன்னும் எத்தனை உள்ளன?'' என்றான்.

முதலியார் சிரித்துக்கொண்டே, ""பல்லவ மன்னனே! என்னிடம் எதுவும் கிடையாது. இன்று இப்புலவர் வந்தார். இல்லையென்று கூற என் மனம் இடம்தரவில்லை. உயிரை மாய்த்துக் கொள்ள பாம்புப் புற்றில் கையை விட்டேன்... ஆனால், என் வீட்டு நாகம்தான் இந்த மாணிக்கத்தைத் தந்தது'' என்றார்.

நம்பிக்கை இல்லாத மன்னன், ""உண்மையாகவா? நல்ல பாம்பிடம் இரண்டு ரத்தினங்கள் உண்டே!. ஒன்று நாகரத்தினம், மற்றொன்று ஜீவரத்தினம். அந்த நாகத்திடம் உள்ள ஜீவரத்தினத்தை எனக்காகக் கேட்டுப் பெற்றுக் கொடு'' என்றான்.

காளத்தியார் மீண்டும் புற்றுக்கு அருகில் சென்று, ""நாகமே! இம்மன்னனுக்கு ஜீவரத்தினம் வேண்டுமாம்... கொடு'' என்றார். உடனே நாகம் வெளியே வந்தது, வள்ளல் கையில் ஜீவரத்தினத்தை உமிழ்ந்துவிட்டு அப்படியே தன் உயிரை விட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட அனைவரும் கண்ணீர் வடித்தனர். மன்னன் குற்ற உணர்வில் நாணிக் குறுகினான். காளத்தியார் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அவரிடமிருந்து பறிமுதல் செய்த அனைத்தையும் திரும்பக் கொடுத்தான்.

காளத்தி முதலியார் முன்பு போலவே இரந்தவர்க்கு ஈந்து தன் கடமையைச் செய்து "ஈவார் மேல் நிற்கும் புகழ்' என்பதற்கிணங்க அழியாத புகழுடம்பு தாங்கினார்.

புலவர் மதுரகவிராயர் என்பவரால் இயற்றப்பட்ட மேற்குறித்த பாடல் "தனிப்பாடல் திரட்டில்' இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT