தமிழ்மணி

"திலகம்' என்னும் நுதல் அணி! 

தாயம்மாள் அறவாணன்

பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள், தன்னை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தாரை நோக்கி, கணவனை இழந்த அரசப் பெண்ணாயினும் கொள்ள வேண்டிய கைம்பெண் ஒழுங்குகளை இவ்வாறு பட்டியலிடுவார்: "நெய் கலப்பில்லாத நீர்ச்சோற்றை உண்ண வேண்டும், எள் துவையல், புளியிட்ட வேளைக்கீரை மட்டுமே துணைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும், மெத்தையில் அல்லது பாயில் படுக்கலாகாது, பருக்கைக் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் பாயின்றி உறங்க வேண்டும்' (புறம். 246).

புலவர் மாறோக்கத்து நம்பசலையார், கணவனை இழந்த பெண்டிரை "கழிகல மகளிர்' (புறம்.280) எனச் சுட்டுவார். தாயங்கண்ணியார் என்ற புலவர் பெண்ணின் கைம்பெண் தோற்றத்தை, "தலையை மொட்டை அடித்தல் வேண்டும், கையில் அணிந்த வளையல்களை நீக்கிவிட வேண்டும், அல்லி அரிசியையே உணவாக உண்ண வேண்டும்' என்பார். இக்காட்சியை "கூந்தல் கொய்து குறுந்தொடி அல்லி உணவின் மனைவி நீக்கி' (புறம். 250-4) என்கிறது புறநானூறு.

இங்கே ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். கைம்பெண் கோலத்தில் வளையல்கள் நீக்கப்படுவதைச் சொல்லும் பெண் புலவர்கள், நெற்றிப் பொட்டு (திலகம்) நீக்கத்தைக் குறிப்பிடாததில் இருந்து சங்க காலத்தில் பொட்டு நீக்கம் கைம்பெண் அடையாளமில்லை என ஊகிக்கலாம். திலகம் அழித்தல் அல்லது அணியாமை என்ற வழக்கமும், வெள்ளுடையே உடுத்தும் வழக்கமும் சங்க காலத்தில் இல்லை என்பது தெரிகிறது.

திலகம் இடுதல்: பொட்டு (திலகம்) இடுதல் என்ற சொற்றொடர் வண்ணத் திலகம் இடுதல் எனும் பொருளில் அக்காலத்தில் வழங்கவில்லை. தமிழகத்தில் கிடைத்திருக்கும் பழங்கால ஓவியங்களில் மகளிர் பொட்டு செதுக்கப்படவில்லை. பொட்டு அல்லது திலகம் என்பதுஒருவகை நுதல் அணி ஆகும்.

"நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே'
(பரிபா: 99)
"ஒருத்தி தெரி முத்தஞ் சேர்ந்த திலகம்'
(கலித்: 9235)

என வரும் குறிப்புகள் திலகம் பொன்னால் செய்யப்பட்டு, முத்து அழுத்தப்பட்ட ஒருவகைப் பட்டம் (நெற்றிச் சுட்டி) என்பதைச் சுட்டும். "நன்னுதல் நீத்த திலகத்தள்' (கலி.143:3) என்பதில் பொருள்வயிற் சென்றகணவனைப் பிரிந்த பெண்ணொருத்தி திலக அணி அணியாமல் இருந்தாள் என்பது பொருள்.

மங்கல அணியின்றிப் பிறிதொரு அணி விரும்பாதவளாய் இருந்த கண்ணகி "பவள வாணுதல் திலகம் இழப்ப' இருந்ததாக இளங்கோவடிகள் சுட்டுவார். கண்ணகி பொட்டு அழித்திருந்தாள் என்பது இங்குக் கருத்தில்லை. "திலகம் என்ற நுதல் அணியை அணியாமல் இருந்தாள்' என்ற புதுப்பொருள் காண்டலே பொருத்தமாகும்.

இத்திலக அணி மஞ்சாடி மரத்தின் வட்டமான திலகப்பூவைப் போன்று இருந்ததால் "திலகம்' என அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். திலகம் என்பது திலகப்பூ போன்ற அணிகலனைக் குறிக்க வழங்கிற்று. பழங்காலத்தில் உள்ள திலக அணிக்குப் பதிலாக வண்ணக் குறியீடு வைக்கும் பழக்கம் பின்னர் ஏற்பட்டது. கோயிலுக்குப் பெண்களை உரிமையாக்குவதை, "பொட்டுக் கட்டிவிடும் சடங்கு' என்று கூறுவதையும், சோழர்கால அணிகலன்களுள் ஒன்று "திருக்கைப் பொட்டு' என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

இக்காலத்தும் மணமக்கள் நெற்றியில் வட்டவடிவமான, தங்கத்தாலான பொட்டை (பட்டம்) நெற்றியில் அணிவிக்கும் பழக்கத்தைக் காணலாம். ஆக, பொட்டு அல்லது திலகம் என்பது தொடக்கத்தில் ஒருவகை அணியாக இருந்து, பின்னர் வண்ணம் இடுதலாக வளர்ந்துள்ளது.

உ.வே.சாமிநாதையரின் (குறிப்பு) விளக்கம் வருமாறு: "திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்' (திருமுரு, வரி.24); "தேம் கமழ் திருநுதல்' (குறுந்.205); "தேமூர் ஒண்ணுதல் / தேம் கமழ் திருநுதல்' - என்ற அடிகள் நுதலின் மணத்தையும் விளக்கத்தையும் புலப்படுத்தியவாறு. உத்தம மகளிருடைய நுதல் இயற்கை மணம் உடையது என்பது நறுநுதல் என்னும் வழக்கினால் அறியலாம். நுதலுக்கு மணம் உண்மை' (உ.வே.சா. விளக்கம், குறுந்.22, பக்.53).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT