தமிழ்மணி

சிந்தனைக் கொள்முதல் செந்தமிழ்ச் செட்டியார்

புலவர் வே.பதுமனார்

தருமமிகு சென்னையில் வணிகக் கருமமிகு கோமளீசுவரன் பேட்டைப் பலசரக்கு மளிகைக்கடை வணிகர் கோ. வடிவேலு செட்டியாரின் படிப்பு, திண்ணைப் பள்ளியோடு நின்றுவிட்டது. இருபது வயதான அவர்க்குப் பலசரக்குக் கொள்முதல் விற்பனையில் வந்த குறுந்தொகை வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானதாக இருந்தது. "நூல்களைக் கற்க முடியவில்லையே' என்ற வேட்கை அவருடைய உள்ளத்தில் அடியூற்றாய் ஈரம் புலராமல் இருந்தது. அதைத் தோண்டுவாரும் இல்லை; சீண்டுவாரும் இல்லை.

சுருட்டால் பற்றிக்கொண்டசுடர் விளக்கு

ஒருநாள் அவருடைய மளிகைக் கடைக்கு வந்தார், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலர் தம் வீட்டுக்கு வேண்டிய சரக்குகளை வாங்க. அப்போது அங்கே அமர்ந்து சுருட்டு பிடிப்பார். அவர் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவர். செட்டியார் சுருட்டைப் பற்றவைத்துத் தருவார். அப்போது அவர் வாயில் புகையோடு தமிழிசைப் பாடல்கள் வெளிவரும். அதில் இலக்கியச் சுவையும், இலக்கண நுட்பங்களும் வெளிப்படும். இத்தகைய புலவர்போல் தாமும் ஆகவேண்டுமென்றுவிரும்பினார்.

வாலாஜாபாத் இராமாநுச நாயக்கரான அவரிடம் முறையாக இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக்கொண்டார் செட்டியார். சுருட்டால் பற்றிக் கொண்ட சுடர் விளக்கானார் செட்டியார். சரக்குக் கொள்முதல் செய்ய வந்த நாயக்கரிடம் அறிவுக் கொள்முதல் செய்துகொண்டார் செட்டியார். இச்சுடர் விளக்குக்கு எண்ணெயும் திரியும்தூண்டுகோலுமாய் வாய்த்தார் வேதாந்த பாஸ்கரன் ச. இரத்தினச் செட்டியார். அவரிடம் பன்னிரண்டு ஆண்டுகள் வேத நூல்களைக் கற்றார். செட்டியாரிடம் சுடர்விட்டெரிந்த நல்லக விளக்கு பல்லக விளக்காய் ஒளி வீசியது. அவரிடம் சுடர்ந்த தமிழ்-வேதாந்த நூலறிவு கற்கும் செவ்வி உடையவர்களுக்குக் கற்பிக்கும் அளவு செறிவும், தெளிவும் அவரிடம் தஞ்சம் புகுந்தது.

நூலேணிகளும், தாங்கும்வலைக் கயிறுகளும்

செட்டியாரின் குருதேவர் இரத்தினச் செட்டியாரின் பரிந்துரையால், அப்போது சென்னை தங்கசாலை, இந்து தியாசாபிகல் உயர்நிலைப் பள்ளியின் முதல் தமிழாசிரியராய்ப் பணி ஏற்றார் செட்டியார். பலசரக்கு வணிகத்தைக் கைவிட்டார். தம் எழுபது வயதுவரை அந்தப் பள்ளியில் முதன்மைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார். பள்ளிப் பாடவேளை தவிர எஞ்சிய ஓய்வுக் காலத்தில் தமிழ்-வேத நூல்களை மகிழ்வுடன் கற்பிக்கத்தொடங்கினார்.

வேத பாடசாலைக்கென்றே சிந்தாதிரிப்பேட்டை, சாமிநாய்க்கன் தெருவில் வேதாந்த சங்கத்தை நிறுவினார். தம் வாழ்நாள் முழுவதும் வேதாந்த, தருக்க நூல்களை அங்கே கற்பித்தார். நூலேணியாய் வாய்த்த குருதேவர் இரத்தினச் செட்டியார் பரிந்துரையால் ஆசிரியர் பணியில் உச்சம் தொட்டார், தென்மொழி வடமொழி நூல்கள் அவரைத் தாங்கும் வலைக் கயிறுகளாயின.

குருதேவர் கொளுத்தியகொள்கை விளக்கு


குருதேவர் வேண்டிக் கொண்டதற்கிணங்க "வேதநூல் சாரம்' என்ற நூலை ஆக்கும் பணியில் இருமொழிப் புலவரான செட்டியார் பெரிதும் முயன்று மிடுக்கான, கடுமையான நடையில் நூலை ஆக்கி, தம் குருதேவர் பார்வைக்கு வைத்தார்.

அந்த நூலை வாங்கிப் படித்த குருதேவர், ""சிறிதளவே கல்வி அறிவு உடையவர்களும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில்தான் நூலை எழுத வேண்டும். நீர் எழுதிய நூல் மிகவும் கடினமாயுள்ளது. இந்த நூலை உடனே எரிக்கு இரையாக்கிவிடும்'' என்று சொல்லித் தீப்பெட்டியையும் தந்தார்.

சிறிதும் தாமதிக்காமல் அந்த நூல் தாள்களைத் தீக்குத் தின்னக் கொடுத்துவிட்டார் செட்டியார். இதனால், செட்டியாரின் பேச்சில், எழுத்தில் இருந்த கடுமை-மிடுக்கு எல்லாம் சாம்பலாயிற்று. எங்கே பேசினாலும், எதை எழுதினாலும் பிறர் விளங்கிக் கொள்ளும் வகையிலேயே அமைந்திட வேண்டுமென்ற குருதேவரின் கொள்கை விளக்கு செட்டியாரின் நல்லக விளக்காயிற்று.

சுட்ட தோசையால்சுட்டெடுத்த சமயக் கருத்துகள்

அரிய சமயக் கருத்துகளை எளிய சொற்களால் தெளிவுபடுத்தும் திறன் செட்டியார்க்கு வாய்வந்த கலையாயிற்று; எழுதுங்கால் கைவந்த கலையாயிற்று. துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய சமயக் கருத்துகளை விளக்க வடமொழிப் புலவர்களே அல்லாடிய காலத்தில், சுட்ட தோசையை உவமையாக்கி, அந்த அரிய கருத்துகளை எளிதில் சுட்டு எடுத்துச் சுவைக்கத் தருவார் செட்டியார்.

தோசை வேறு தான் வேறாய் உள்ள நிலை, கடவுள் வேறு; தான் வேறாய் உள்ள நிலை- துவைத நிலையாம், மிகுதியாகத் தின்று செரிமானமாகாத தோசையும் தானும் உள்ள நிலையே விசிட்டாத்வைதமாம். செரிமான தோசையும் தானும் ஒன்றான நிலையே அத்வைத நிலையாம்.

பரிமேலழகர் திருக்குறள் உரை- தெளிபொருள்:

திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் இருந்தாலும், பாலெல்லாம் நல்லாவின் பாலாகுமோ? அதைப்போல, உரையெல்லாம் பரிமேலழகர் தெரித்த உரையாகுமோ? ஆனால், பரிமேலழகர் உரையோ புலவர்களும் எளிதில் உணர முடியாத அருமைப்பாடுடையது. திருக்குறள் முப்பால். அதில் நலம் கூட்டும் கடுக்காய்ப்பொடி கலந்து தருவதைப்போல, பரிமேலழகர் உரை அமைந்துவிட்டது. அதில் தேன், பாகு, கற்கண்டு சேர்த்துப் பருக வைப்பதைப் போல கோ. வடிவேலு செட்டியார் இலக்கண, இலக்கிய, வேதக் குறிப்புகளோடு தந்ததால், அதை பலரும் எளிதில் பருகிப்பயனடைந்தனர்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல். (குறள்.196)

"பயனில்லாத சொற்களைப் பாராட்டுவானை மகனெனச் சொல்லற்க. அவனை மக்களில் பதர் என்று சொல்லுக' என்பதே இக்குறளின் பொருள். இக்குறட்பாவின் இரண்டு அடிகளில் வரும் "எனல்' என்னும் சொற்களைக் கண்டு படிப்போர் மயங்குவர். இதனை கோ. வடிவேலு செட்டியார் இலக்கண, வேதக் குறிப்புகளால் விளக்கும் பாங்கு எளிமைக்கு எளிமை சேர்க்கும் பாங்கே ஆகும்.

"முன்னது சொல்லற்க' எனும் எதிர்மறைப் பொருளிலும், பின்னது "சொல்லுக' எனும் உடன்பாட்டுப் பொருளிலும் வந்த "அல்' ஈற்று வியங்கோள் வினைமுற்றுகளாம். பொருள் புடைப் பெயர்ச்சி இருந்தால் வினை நிகழும். எங்கே புடைப் பெயர்ச்சி இல்லையோ அங்கே வினை நிகழாது. இலக்கண நூலார் வினை நிகழ்வதை உடன்பாடென்றும், வினை நிகழாமையை எதிர்மறை என்றும் கூறுவர். வடமொழி நூலார், உடன்பாட்டை அந்நுவயம் என்றும், எதிர்மறையை வியதிரேகமென்றும் கூறுவர். இவ்வண்ணம் புதிய உரை செய்வார் செட்டியார்.

சாகும் நிலையிலும் நினைவாற்றல் குறையா உயிர்ப்பு

பெருங்கழிசல் நோயால் எலும்பும் தோலுமாய்ப் படுக்கையில் கிடக்கிறார் செட்டியார். அப்போது அவர்தம் மாணவர் தெ.பொ.மீ., அவரைக் காண வருகிறார். செட்டியாரோ அவரை நோக்கி, ""சேனாவரையர் உரையில் ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்'' என்றார். இதைக் கேட்டுத் திகைத்து நின்றார் தெ.பொ.மீ. ""எனக்கு நினைவாற்றல் குன்றாது இருக்கிறதா என்று தெளிவடையவே உன்னைக் கேட்கச் சொல்கிறேன்'' என்றார் செட்டியார்.

செட்டியார் உரைவெறி வித்தகர், இலக்கியக் களஞ்சியம், இலக்கணக் கோட்டை, சிந்தனைச் சுரங்கம், கருத்து முத்துக் கொழிக்கும் தெண்கடல் தரங்கம், வாய்ப்புக் கிடைத்தால், அவர்தம் நூல்கடலில் படிவோம்! கருத்து முத்துக்களை எடுத்துத் தமிழன்னைக்கு ஆரம் புனைவோம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT