தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

13th Jun 2021 12:00 AM

ADVERTISEMENT

 

இலக்கியவாதிகளின் மனம் குளிர, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அந்த மூன்றுமே வரவேற்புக்குரியவை.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போலவே மதுரையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் இரண்டு லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் நூலகம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்புக்குரியது. அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் பொதுமக்களிடம் நூல்கள் பெறப்பட்டது நினைவுக்கு வருகிறது. அதன் அடிப்படையில் ஓர் ஆலோசனை.

தமிழறிஞர்கள் பலரும், பேராசிரியர்களும் அவரவருக்கு என்று நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் தங்களது குறிப்பு நூல்களாக சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த நூல்களைப் பராமரிக்க முடியாமல் என்ன செய்வது என்கிற திகைப்புஅவர்களுக்கு ஏற்படுகிறது. தங்களுக்குப் பிறகு அந்தப் புத்தகங்களை என்ன செய்வது என்கிற பெரும் கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT

இரா.செழியன் தன்னிடமிருந்த புத்தகங்களை வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தனது சேகரிப்புகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கும், "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.இராமச்சந்திரன் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கும், முனைவர் தெ.ஞானசுந்தரம் கொடுங்கையூர் சாயி விவேகானந்தா பள்ளிக்கும் வழங்கியிருக்கின்றனர். இவர்கள் பெயரில் அந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களது நூலகங்களில் தனியாக ஒரு பகுதியை அமைத்து அந்தப் புத்தகங்களைப் பாதுகாத்து வருகின்றன.

மதுரையில் அமைய இருக்கும் தமிழக அரசின் பிரம்மாண்ட நூலகத்தில் அறிஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை செலவழித்து, மிகுந்த பொருட்செலவில் சேகரித்து வைத்திருக்கும் அரிய பல நூல்களை அவரவர் பெயரில் வைத்துப் பாதுகாக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்குப் பிறகு அந்த அறிவுப் பொக்கிஷங்கள் பழைய காகிதக் கடைகளுக்குப் போய் வீணாகிவிடாமல் பாதுகாக்க முடியும். அமைய இருக்கும் நூலகத்தின் சிறப்பம்சமாக இது விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

படைப்புகளை நாட்டுடைமையாக்கி எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்கி கெளரவிப்பது போல, தங்களது அரிய புத்தக சேகரிப்புகளை அரசின் நூலகத்துக்கு வழங்கும், முதுமையை எட்டிய அந்த அறிஞர்களுக்கு அதைவிடப் பெரிய அங்கீகாரமும், மகிழ்ச்சியும் வேறு எதுவும் இருக்க முடியாது.


கொள்ளை நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்னால், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட புத்தகம் பின்னலூர் மு.விவேகானந்தன் எழுதிய "உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்'. "முன்றில்' பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஓர் ஆய்வு நூல் என்றுகூடக் கூறலாம்.

சமயங்களின் தோற்றம், புராதன சமயங்கள், இந்திய வரலாற்றில் சமயங்கள், சமயங்களின் மக்கள் தொகை, அவற்றின் பொதுத்தன்மை என்று உலகிலுள்ள இருந்த, இருக்கும் அனைத்து சமயங்கள் குறித்தும் செய்யப்பட்டிருக்கும் சுருக்கமான ஆய்வு இந்தப் புத்தகம்.

எல்லா சமயங்கள் குறித்தும் விளக்கமாக விவரித்து, தெளிவுபடுத்தி அதன் அடிப்படையில் சைவம் குறித்த தனது பார்வையையும், புரிதலையும் பதிவிடுகிறார் பின்னலூர் மு.விவேகானந்தன். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை விளக்கங்களைப் பதிவு செய்து, அது தொடர்பான சாத்திர நூல்களையும் விளக்கி இருக்கிறார் அவர்.

சமயங்களை மட்டுமில்லாமல், மதச் சார்பற்றவர்கள், மத மறுப்பாளர்கள் குறித்தும் "நாத்திகவாதம்' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. ""கடவுள் என்ற ஒன்று இல்லையெனில், உலக நலத்திற்காக அதை உண்டாக்குவது இன்றியமையாததாகும்'' என்கிற பிரெஞ்சுப் புரட்சியாளர் வால்டேரின் மேற்கோளுடன் முடிகிறது அந்தக் கட்டுரை.

""எல்லா சமயங்களின் நோக்கமும் மனிதர்களை இணைப்பதுதான். இறையருளாளர்களால் மனிதர்களை ஒன்றிணைப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு சமயமும் காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதை வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது'' என்றும், ""எல்லா சமயங்களும் இறைமை என்பதை உருவம் அல்லது அருவம் என்கிற இரண்டில் ஒன்றுக்கு உட்பட்டதாகவே காட்டுகின்றன. ஆனால், சைவம்தான் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தையும் காட்டுகிறது'' என்றும் சொல்லப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்ரமணியனின் அணிந்துரைக் கருத்துகள் சிந்தனைச் செறிவு.

""இசையும், கலையும், கோயிலும் தமிழோடு இயைந்து வளர்ந்தது சைவம். அச்சமய நெறி உயரிய வாழ்வியல் நெறியாகக் கொண்டதால், சித்தர்கள் போற்றிய நெறியாகிறது. அதனடிப்படை "ஒன்றே குலம்' மற்றும் "யாதும் ஊரே'. அதனால்தான் பிரிவற்ற நெறியாக சைவநெறி துலங்குகிறது'' என்கிற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் அணிந்துரைப் பதிவு பின்னலூர் மு.விவேகானந்தனின் புத்தகத்தின் சாறு பிழிந்த தெளிவு.
உலக சமயங்கள் குறித்தும், சைவ நெறி குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விழையும் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் கையேடு "உலக சமயங்களும் சைவத்தின்மேன்மையும்'.

 

சென்னை, சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் வி.ஜெ. வஸந்த் செந்தில் எழுதிய கவிதைத் தொகுப்பு "திராவிட அழகி'. அதிலிருந்து ஒரு கவிதை.

யாரால் இந்த பூமி இப்படிப் பிறழாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை இதோ இந்தத் தெருவை தன் வீட்டின் உள்ளறை போல திருத்தமாகசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த ஒனிக்ஸ் பணிப்பெண்
காரணமாக இருக்கலாம்!

Tags : இந்த வாரம் கலாரசிகன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT