தமிழ்மணி

வாக்கிற்கு அருணகிரி

13th Jun 2021 12:00 AM | -திருப்புகழ் மதிவண்ணன்

ADVERTISEMENT

 

"வாக்கிற்கு அருணகிரி' என்று புலவர்களாலேயே புகழப்பட்ட அருணகிரியாரின் "கந்தர் அநுபூதி' வடிவத்தில் சிறியது, ஆனால் மகிமையில் பெரியது. "கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன/ எந்தை அருள்நாடி இருக்கும்நாள் எந்நாளோ?' என்று பாடுகிறார் தாயுமானவர். 

"விதைக்குள்ளே இருக்கிறது விசுவரூபம்' என்பதைப் போல அருணகிரியாரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓர் உன்னதம் புதைந்திருக்கிறது. அதனாலேயே அவர் "வாக்கிற்கு அருணகிரி' என்று போற்றப்படுகிறார். எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலைப் பார்ப்போம்.

மெளனமாக இருப்பது என்பது ஓர் அரிய கலை. வாய்மூடி பேசாமல் இருப்பது "வாக் மெளனம்'. அவ்வாறு இருப்பது மட்டுமே மெளனவிரதம் ஆகாது. மெளன விரதம் அனுஷ்டிக்கும்போது கண்கள், கரங்கள் என அங்கங்கள் மூலம் சைகை காட்டக்கூடாது. ஓவியம்போல உடம்பு இருக்க வேண்டும். இதற்கு "காஷ்ட மெளனம்' என்று பெயர். மூன்றாவது நிலைதான் முக்கியமானது. மனம் அங்கும் இங்கும் அலைபாயாமல் எண்ணங்கள் ஒரே புள்ளியில் நிலைநிற்க வேண்டும். இதற்கு "மனோ மெளனம்' என்று பெயர். அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியின் பன்னிரண்டாவது பாடலில் இம்மூன்று மெளனங்கள் பற்றிப் பக்குவமாகப் பாடியுள்ளார்.

ADVERTISEMENT

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

சும்மா இரு: கை, கால் அங்கங்களை அசைக்காமல் நிலையாக அமரும் "காஷ்ட மெளனம்';  சொல் அற: பேச்சைத் தவிர்த்து வாய் மூடிய "வாக் மெளனம்'; பொருள் ஒன்றும் அறிந்திலனே: அங்கும் இங்கும் அலைபாயாது ஒன்றில் நிலைப்பட்ட "மனோ மெளனம்'.

Tags : வாக்கிற்கு அருணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT