தமிழ்மணி

மகாவித்துவானின் யமக அந்தாதி

13th Jun 2021 12:00 AM | -சே.ஜெயசெல்வன்

ADVERTISEMENT

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் எண்ணற்ற பாக்களைப் படைத்து தனிப்புகழ் பெற்றவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இவர் பாடிய பிரபந்தங்களிலேயே மிகுதியான எண்ணிக்கையுடையன அந்தாதிகளே. திரிபு, யமகம் போன்ற அந்தாதி வகைகளை அருமையாக அமைத்துள்ளார். இவர்தம் 26 ஆவது அகவையில் பாடிய சிறப்புமிக்க அந்தாதி "திருவானைக்காத் திரிபந்தாதி' ஆகும். பல்சுவைகள் நிறைந்தது இவ்வந்தாதி.

இவர் இயற்றிய "குடந்தைத் திரிபந்தாதி' சுவை மலிந்ததும் விசித்திரமான திரிபுடனும் அமைந்ததாகும். அவ்வகையில் மகாவித்துவான் பாடிய ஒரு யமக அந்தாதி பாடலின் சிறப்பை அறிந்து இன்புறுவோம்.

ஒரு செய்யுளில் வந்த சொல்லும் தொடரும் மீண்டும் வந்து அடிதோறும் பொருள் மட்டும் வேறுபடுவது யமக அந்தாதி எனப்படும்.  மகாவித்துவான் மூன்று யமக அந்தாதிகள் இயற்றியுள்ளார். இவற்றுள் "திரிசிராமலை யமக அந்தாதி' மிகவும் நயமானது. "திருத்தில்லை யமக அந்தாதி' அருமையான அமைப்புடையது. இந்த யமக அந்தாதி குறித்து டாக்டர் உ.வே.சாமிநாதையர்,
"இதனைப் போன்று நலமும் உயர்ந்த வகை விசித்திரமுமுடைய நூல் இக்காலத்தில் வேறொன்றுமே இல்லை' என்று புகழ்ந்துள்ளார். மகாவித்துவானின் திருவேரக யமக அந்தாதியில் 21-ஆவது பாடல் மிகவும் நயமானது. 

ADVERTISEMENT

படிகடந் தான்திரு வேரக 
னாமம்பல் காலுநெஞ்சே
படிகடந் தானிலை யென்றுன்ன 
நான்கு பதங்களெனும்
படிகடந் தானந்த முத்தியைச் 
சேர்வைமெய்ப் பத்திதனிற்
படிகடந் தான மெனவருந் 
தாலென் பயன்தருமே!

இப்பாடலில் நான்கடியிலும் "படிகடந்தான்' என்னும் சொல் வந்துள்ளது. ஆனால் அச்சொல் ஒரே பொருளில் வராமல் வேறு வேறு பொருளில் வந்துள்ளதே சிறப்பாகும். முதல் அடியில், படி என்பது படித்தலையும்; கடந்தான் என்பது  உலகம் கடந்தான் என்பதையும் குறிக்கிறது. இரண்டாம் அடியில் படிகள் தந்தான் என்ற பொருளைத் தருகிறது. மூன்றாம் அடியில் நான்கு பதங்கள் எனும் படிகடந்து என்ற நிலையில் படி ஏறும்படியைக் குறிக்கிறது. நான்காம் அடியில், படி என்றும் கடம் என்றும் பிரிந்து, படி - அழுந்து என்றும் கடம் - காடு என்றும் பொருள் தருகிறது. இவ்வாறு சொல் மாறாது பொருள் மாறுபட்டு வருவது யமக அந்தாதி ஆகும்.

Tags : மகாவித்துவானின் யமக அந்தாதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT