தமிழ்மணி

திருக்கயிலையில் திருக்குறள்!

13th Jun 2021 12:00 AM | -நா.கா.நாகராஜன்

ADVERTISEMENT


அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார், சேரநாட்டின் முடியுடை வேந்தர். பதினோராம் திருமுறையின் மூன்று நூல்களுக்கு ஆசிரியர். குதிரையில் ஏறி, அதன் காதில் ஐந்தெழுத்தோதி தன் நண்பர் சுந்தரருக்கு முன்பாகத் திருக்கயிலை சென்றவர்; நித்யபூசை செய்து நாளும் பாதச் சிலம்பொலிலி கேட்ட சேரமான் பெருமாள் எனப்படும் பெருமாக் கோதையாரே கழறிற்றறிவார் ஆவார்.

தில்லையில் கூத்தப்பெருமான் முன்பு பொன்வண்ணத்தந்தாதியும், திருவாரூர் தியாகேசர் முன்பு திருவாரூர் மும்மணிக்கோவையும், திருக்கயிலையில் சிவபெருமானின் முன்பு திருக்கயிலாய ஞானவுலாவும் பாடி அருளியவர்.

சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளை யானை (ஐராவதம்) மேற் சென்ற தம் தோழராகிய சுந்தரருடன் தாமும் குதிரைமேற் சென்று (சுந்தரருக்கு முன்பாக) கயிலையை அடைந்தபொழுது, கயிலைப் பெருமான் அருள்கூர்ந்து திருச்செவி சாத்தியருள, அப்பெருமான் திருமுன் சேரமான் பெருமாள் நாயனார் "திருக்கயிலாய ஞான உலா'வை அரங்கேற்ற, அங்கிருந்து இதனைக் கேட்ட ஐயனார் என்பவர் திருப்பிடவூர் வந்து இதனை மண்ணுலக மக்களுக்கு அருளிச் செய்தார்' என்னும் வரலாறு பெரியபுராணத்துள் காணலாம். இதனாலேயே, இந்நூலை

"ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்' எனச் சேக்கிழார் அருளிச் செய்துள்ளார். திருக்கயிலையில் அரங்கேற்றப்பட்ட முதல் தமிழ் நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

ADVERTISEMENT

சேரமான் பெருமான் விரைவாகக் கவிபாடும் ஆற்றல் உடையவர் என்பதால் "ஆசுகவி' என்றும் அழைக்கப்பட்டார். இவரை அருணகிரிநாதர் "நாதவிந்து கலாதி நமோ நம' எனும் திருப்புகழில், "ஆதிஅந்தவுலாவாசு பாடிய சேரர்' என்று ஆசுகவியாகவே குறிப்பிடுகிறார்.

சேரமான் பெருமான் திருக்கயிலையில் பாடியருளிய "உலா' நூலே முதல் உலா நூல் என்பதால், இது "ஆதிவுலா' என்று வழங்கப்படுகிறது. சேரமான் பெருமாள் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்தவர் என்பது இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது.
இறைவனைத் தலைவனாகவும், அவனருளை விரும்பிய மன்னுயிர்கள் அத்தலைவர்பால் காதல் கொண்டு மயங்கிய பெண்களாகவும் வைத்து (நாயகி-நாயக பாவம்) பாடப்பட்டதுதான் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த "திருக்கயிலாய ஞானவுலா'.

சிவபெருமான் திருக்கயிலையில் எழுந்தருளி இருக்கிறார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய அவர் ஒரு நாள் தம்மை அழகு செய்துகொண்டு, வசுக்கள் போற்றிச் செய்யவும், முனிவர் வாழ்த்துரை கூறவும், பன்னிரு கதிரவர்கள் பல்லாண்டு பாடவும், நாரதர் யாழ் வாசிக்கவும் மற்றும் பல சிறப்புகளோடு திருவுலா புறப்பட்டார். பெருமானின் பேரழகைக் கண்டு மயங்கிய எழுவகைப் பருவ மகளிரும் அவரவர் வயதுக்கேற்ப பெருமான் மீது காதல் கொள்கின்றனர்.

இந்நூலில் சிவபெருமானின் முழு முதல் தன்மையும், பெருமானுடைய சிறப்புகளும் நூற்றுத் தொண்ணூற்றேழு (197 கண்ணிகள்) கண்ணிகள் உள்ள செய்யுள்களாகப் பாடப்பட்டுள்ளது. அவற்றுள் "அரிவை' என்ற பருவப் பெண் பகுதியில் 136-ஆவது கண்ணியில் திருக்குறள் "பொருள் செயல்வகை' அதிகாரத்தில் (அதி.76) உள்ள இரண்டாவது திருக்குறளை (752) மேற்கோள் காட்டிப் பாடியுள்ளார்.

"இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும்' - சொல்லாலே (136)
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண் புனைந்து. (137)

"என்றைக்கும் பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர். செல்வரை எல்லோரும் சிறப்பு செய்வர் எனப் பெரும் சொற்களை அறிந்திருப்பதனால், நிதம்பத்தை சூழ்ந்திருக்கும்படி மிக உயர்ந்த மேகலையைச் சுற்றிக் கட்டினாள். அழகிய தனங்களின் மேல் நிரம்பிய மணம் வீசும் சந்தனக் கலவையைப் பூசி மேலும் பல ஆபரணங்களை அணிந்து' - என்பது இக்கண்ணிகளின் பொருள். (இந்தப் பெண்ணின் இச்செய்கை இறைவன் தன் மீது மையல் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான குறிப்பு).

"புணர்ச்சிமகிழ்தல்' அதிகாரத்தில் (111) வரும் திருக்குறளை (1101) "பேரிளம் பெண்' என்ற பகுதியில் மேற்கோள் காண்பிக்கிறார் சேரமான் பெருமாள்.

பெண்ணரசராய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாய்
பண்ணமரும் இன்சொல் பணி மொழியாள் - மண்ணின்மேல் (172)
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள'வென்று - பண்டையோர்... (173)

ஒளி பரவிய பெண்மை உலகுக்கே அரசத்தனமாகப் பிறந்த பேரிளம் பெண் பருவத்தாள் ஒருத்தி இசையும் விரும்பத்தக்க இனிய சொல்லும், பணிவான மொழியையும் உடையவள். நிலவுலகில் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும் விஷயங்களை அனுபவிக்கும் ஐம்புலன்களும் இவ் ஒளிபொருந்திய வளையலை உடையாளிடத்தே உள்ளன என்று சொல்லும் மேலோர், வாய்மை மொழியை மேன்மையாகும்படி செய்யும் தோற்றத்தினை உடையவள் (இறைவனை தன்பால் ஈர்க்கின்ற தன்மை இந்தக் குறிப்பால் உணர்த்தப்படுவதாயிற்று) என்பது பொருள்.

இத்தன்மையால் இரண்டு திருக்குறள்கள் திருக்கயிலையில் சிவபெருமான் முன்பு பாடப்பட்ட பெருமை உடையதாயிற்று! இதுவே திருக்குறளின் பெரும் சிறப்புக்குச் சான்றாகும்.

Tags : திருக்கயிலையில் திருக்குறள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT