தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்(06.06.2021)

6th Jun 2021 10:23 AM

ADVERTISEMENT


ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஆர்வத்துடன் பல இணையவழி நிகழ்வுகள்  சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றன. அதனால்,  அவை உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. 

இப்போது இருக்கும் சூழலில்  இலக்கிய நிகழ்வுகளை நடத்த இயலாது என்பதால், இணைய வழியே இணைவதல்லால் வேறு வழியில்லை. கொள்ளை நோய்த்தொற்று காலம் முடிவுக்கு வந்தாலும்கூட, பழைய நிலைமை மீட்டெடுக்கப்படுமா என்பது  சந்தேகம்தான். மாற்றத்தை ஏற்றுக்கொள்ள  நாம் பழகத்தான் வேண்டும்.

தென்காசி திருவள்ளுவர் கழகம்  தமிழகத்திலேயே மிகவும் பழைமையான இலக்கிய அமைப்பு. பெரியவர் சிவராம கிருஷ்ண ஐயாவின் வழிகாட்டுதலுடன், நண்பரும் வழக்குரைஞருமான  கனகசபாபதியின் முயற்சியில் மிகப் பழைமையான அந்த இலக்கிய அமைப்பு  மாற்றத்தை மேற்கொண்டிருப்பது  ஏனைய அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைகிறது. நேற்றுடன் நிறைவு பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 94-ஆவது ஆண்டு விழா இணையவழியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

1927-ஆம் ஆண்டு தென்காசி நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களும், வழக்குரைஞர்களின் குமாஸ்தாக்களும்  சேர்ந்து தொடங்கிய அமைப்பு தென்காசி திருவள்ளுவர் கழகம். அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கு 1928-இல் தலைமை வகித்தவர் வழக்குரைஞரான "செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனார். தமிழகத்தின்  தலைசிறந்த தமிழறிஞர்கள் அனைவருமே கலந்துகொண்ட இலக்கிய அமைப்பு என்கிற தனிச்சிறப்புப் பெற்றது தென்காசி திருவள்ளுவர் கழகம்.

ADVERTISEMENT

இந்த ஆண்டும்  வழக்கம்போல நிகழ்ச்சிகளில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த மாதம் 26-ஆம் தேதியிலிருந்து நேற்று வரை பதினோரு நாள்கள் நீண்டு நின்ற திருவள்ளுவர் கழக ஆண்டுவிழா நிகழ்ச்சி  இந்த முறை இணையம்வழி நடத்தப்பட்டு, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கும் நேரத்தில் தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் குற்றாலத்தில் குளிப்பதும்,  திருவள்ளுவர் கழக நிகழ்ச்சியில் தமிழில் நனைவதுமாக இருப்பார்கள்.  அந்த வாய்ப்பு இணையவழியில் இல்லை என்கிற ஒரு குறையைத் தவிர, மற்றபடி நிகழ்ச்சிகள்  சிறப்பாக அமைந்தது என்பது ஆறுதல்.

தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மேலகரத்தில்  "ரசிகமணி' டி.கே.சி.யின்  பெயரன் தீப.நடராஜனைச் சென்று சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு  தீப.நடராஜன் இல்லை. அவரது இணைபிரியா நண்பர் எழுத்தாளர் கி.ரா.வை தனியாக விடக்கூடாது என்று  அவருடன் இணைந்து கொண்டாரோ என்னவோ?


****************************

கஸ்தூர்பா காந்தியின் வரலாற்றிலிருந்து  பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போய் இருப்பது  டாக்டர். சுசீலா நய்யாரின் வாழ்க்கை. அண்ணல் காந்தியடிகளின் செயலாளரான பியாரிலாலின் சகோதரி டாக்டர். சுசீலா நய்யார். காந்திஜியின் நிழலாக பியாரிலால் இருந்ததுபோல, கஸ்தூர்பாவின் நிழலாகவே கடைசிவரை தொடர்ந்தவர்.

கஸ்தூர்பா குறித்தான பதிவுகளில் மிக முக்கியமானது டாக்டர். சுசீலா நய்யாருடையது. "பாரதியாரைப் பற்றிய நினைவுகளை எழுதிய யதுகிரியம்மாளைப் போல' கஸ்தூர்பா பற்றிய நினைவுகளைத் தொகுத்ததில்  சுசீலா நய்யாருக்கு முக்கியமான பங்குண்டு. அவர் கஸ்தூர்பா குறித்து எழுதிய நினைவுத் தொகுப்பை தமிழ்ப்படுத்தி இருக்கிறார், தற்போது பெங்களூருவில் வசித்துவரும் பாவண்ணன்.  ஆங்கில மூலம் ஏற்கெனவே படித்தது என்றாலும், பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் "கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு' புத்தகத்தைப் படிக்கும்போது, புதிதாகப் படிப்பது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.

சிறுமியாக  தன் சகோதரருடன் காந்தி குடும்பத்தில் சங்கமித்ததில் தொடங்கி, கஸ்தூர்பாவின்  இறுதிக் கட்டம் வரை நடந்த நிகழ்வுகளையும், தான் பார்த்த சம்பவங்களையும், தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறார்  டாக்டர். சுசீலா நய்யார்.

இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், கஸ்தூர்பாவின் மறைவைத் தொடர்ந்து 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  சிறைக் காவலில் இருந்தபோது, அவர் குறித்த நினைவுகளைத் தொகுத்து எழுதும்படி சுசீலா நய்யாரிடம் கேட்டுக்கொண்டவர் காந்தியடிகள். அந்தத் தொகுப்பு  ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அண்ணல் உயிருடன் இல்லை. ஆனால், அதன் மூலப் பிரதியையும், ஆங்கில மொழிபெயர்ப்பையும்  காந்தியடிகளே படித்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கஸ்தூர்பாவின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு  காந்தியடிகள் குஜராத்தியில் முன்னுரையும்  எழுதி வழங்கியிருக்கிறார்.

""கஸ்தூர்பா தன்னைத் தானே என்னிடம் ஒப்படைத்துக் கொண்டவர். அவரிடமிருந்த தன்னலமறுப்பு குணத்தை நான் என்றும் வலியுறுத்தியதில்லை. இக்குணத்தை அவரே சுயமாக வளர்த்துக் கொண்டார். என்னுடைய பொதுவாழ்க்கை விரிவடைய விரிவடைய, என்னுடைய மனைவி அதிக அளவில் ஊக்கம் கொண்டு என்னுடைய அலுவல்களில் தன்னைத்தானே கரைத்துக் கொண்டார். காலம் செல்லச் செல்ல, நானும்  என்னுடைய மக்கட் பணியும் ஒன்றாகவே ஆகிவிட்டது. அவரும் படிப்படியாக என்னுடைய செயல்பாடுகளோடு கரைந்துவிட்டார்'' - இது கஸ்தூர்பா குறித்து காந்தியடிகள் தனது முன்னுரையில் எழுதியிருக்கும் கருத்து.

பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் எல்லாவற்றிலும்  உச்சகட்டமாகத் திகழ்வது கஸ்தூர்பா காந்தியின் மறைவு.  தன் மகன் தேவதாûஸ அருகில் அழைத்தார். ""உன் அப்பா ஒரு துறவி. இந்த உலகத்தைப் பற்றி அவர் சிந்திக்க வேண்டி இருக்கிறது. அதனால், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பையும் நீதான் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று அவரிடம் சொன்னார்.  தனது மரணத்துக்கு முன்னால் காந்தியடிகளைப் பார்த்து கஸ்தூர்பா சொன்ன வார்த்தைகள் இவை - ""என் மரணத்திற்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்துவிடாதீர்கள்''. 

காந்தியடிகளின்  மடிமீது தலை சாய்த்தபடி கஸ்தூர்பாவின் உயிர் பிரிந்தது.  62 ஆண்டுகாலம் காந்தியடிகளுடன் இணைந்து வாழ்ந்த கஸ்தூர்பாவின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  

காந்திஜியைப் பற்றியும், கஸ்தூர்பாவைப் பற்றியும் பரப்பப்படும் பல தவறான செய்திகளுக்கும், கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது பாவண்ணன் மொழியாக்கம் செய்திருக்கும் சுசீலா நய்யாரின் "கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு' என்கிற புத்தகம்.


   ***********************

என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பத்திரிகையாளர் மைபா.நாராயணன். அவருடன்  பிரபந்தங்கள், திருமுறைகள் பற்றி மட்டுமல்லாமல்  நிகழ்கால அரசியல் குறித்தும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கலாம். நேரம் போவதே தெரியாது.  

இரண்டு நாள் முன்பு செல்லிடப்பேசியில்  உரையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு கொள்ளை நோய் மரணங்கள் குறித்துத் திரும்பியது. அப்போது அவர் சொன்ன வரிகள் இவை -
பன்னிரண்டு ராசிகளுக்கும்
ஒரே பொது பலன்தான்
விதி இருந்தால்
பிழைத்துக் கொள்ளலாம்!

Tags : கலாரசிகன் இந்த வாரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT