தமிழ்மணி

வேள்விப் படலத்தில் ஒரு கேள்வி!

6th Jun 2021 10:13 AM | -முனைவர் யாழ்.சு. சந்திரா

ADVERTISEMENT


உலகைக் காக்கும் ராமனையே தன் மைந்தனாகப் பெற்றவன் தசரதன். அவனது வாழ்வு முனிவர்கள் பலரால் வழிநடத்தப்படுகிறது. "புத்திர சோகத்தால் வருந்துவாய்!' என்ற சாபத்திற்கு மகிழ்ந்தவன் தசரதன்! ஏனெனில், இந்தச் சாபம் மகப்பேறற்ற தனக்கு மகவு உண்டென்ற உண்மையை உள் ஒளித்து வைத்துள்ளது என்ற எண்ணமே அவனது களிப்புக்குக் காரணமாகின்றது.

குலகுருவான வசிட்ட முனிவரின் வழிகாட்டுதலில் கலைக்கோட்டு முனிவனால் மகப்பேற்று வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) செய்து நான்கு புதல்வர்களைப் பெற்று நிறை வாழ்வில் நிம்மதி அடைந்தவன் தசரதன். அம்மகிழ்வான தருணத்தில் அரச முனியாம் கோசிகனின் வருகை அமைகிறது. தான் இயற்றும் வேள்வி இடையூறின்றி நடைபெற நால்வரில் கரிய செம்மலான காகுத்தனை தசரதனிடம் கேட்கின்றார், கோசிக மாமுனி.

"கண் இலான் பெற்று இழந்தான்' போல, துடிதுடிக்கும் தசரதனை ஆற்றுப்படுத்துகிறார் குலகுரு வசிட்ட முனிவர். குலகுருவின் வழி காட்டுதலில் ராம, இலக்குவரைக் கையடையாகக் கோசிக முனிவரிடம் தருகிறான் தசரதன்.
கோசிக முனியின் வழிகாட்டுதலில் தாடகை வதம் நடைபெறுகிறது. பின்னும் முனிவர்களது வேள்வியைக் காக்கின்றனர் தசரத மைந்தர்கள். ஆறு நாள்கள் ஆன நிலையில் அரக்கர்கள் ஊனையும், குருதியையும் சொரிந்து வேள்வியை அசுத்தப்படுத்துகின்றனர். அதுகண்ட அரச குமாரர்கள், முனிவரது வேள்வியைக் காக்க அரக்கர்களுடன் போரிடுகின்றனர். அவ்வாறு போரிடும் நிகழ்வைச் சுட்டும் கம்பர்,

கவருடை எயிற்றினர் கடித்த வாயினர்
துவர்நிறப் பங்கியர் சுழல்கண் தீயினர்
பவர்சடை அந்தணன் பணித்த தீயவர்
இவரென இலக்குவற்கு இராமன் காட்டினான்(1:8:47)

ADVERTISEMENT

என்கிறார். வேள்விக் கூடத்தை இருவரும் காக்கின்றனர். ஆனால் இங்கோ, வேள்வியை அசுத்தம் செய்யும் அரக்கர்களை ராமன், இலக்குவனுக்குக் காட்டுகின்றான் என்கிறார் கம்பர். இவ்வாறு கவிச்சக்ரவர்த்தி சொல்வது முரண் அல்லவா?  மகாகவி என உலகத் தமிழரால் போற்றப்படும் கம்பனில் முரணா? என்ற வினாவுக்குக் கம்பரே விடையும் தருகிறார்.

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கியமுனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர் 
(1:8:40)

என்ற செய்யுளில் அரச குமாரர்கள் இருவரும் ஆறு நாள்களாக வேள்வியைக் காக்கின்றனர். இவ்வாறு இருவரும் காக்க, மூத்தவனான ராமன் இளைய செம்மலுக்கு அரக்கரைக் காட்டுவது ஏன்? இதற்கு விடை கம்பரது கவி உளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது எனலாம்.

மன்னனுடைய மைந்தர்கள் முனிவரது வேள்வியைக் கண்ணினைக் காக்கின்ற இமைபோலக் காக்கின்றனர் என்பது கவி வாக்கு! உலகம் முழுவதும் "கண்ணை இமை காப்பது' என்பதும் கண்ணும் அதிகமாகக் கையாளப்படும் பாடுபொருளாகும். 

"ஆன்மாவின் சன்னல்களாக அமைபவை கண்கள்' (The eyes of the window to your soul) என்பது ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற மேற்கோளாகும்.

சங்க இலக்கியங்களில் தலைவியின் கண்கள் குவளை மலருக்கும் தாமரைக்கும்  (ஐங். 36:3)  உவமிக்கப்படுகின்றன.  தலைவியின் கண்களில் அடுப்புப் புகை பட்டுக் கலங்குவதை (குறுந். 167) கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார். பெண்களது கண்களும் நோக்கும் மான் போன்று உள்ளது (குறள்.1085) எனவும் கூறுவர். இத்தமிழ் மரபில் வந்த கம்பர், ராமனையும் சீதையையும் ஒருவரையொருவர் பார்க்க  (அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் 1:10:35) வைத்து, கண்கள் வழிக் காதலைச் சொல்லுவார். இங்கேயும் கண்ணினைக் காக்கும் இமை என்பார்.

கண்களுக்கு இரு இமைகள் உண்டு. ஒன்று மேல் இமை! அந்த மேலிமை எப்போதும் அசைந்து அசைந்து கண்களைக் காக்கும். கீழிமை அசையாது கண்ணைக் காக்கிறது. இது மானிட உடலியல் கூறு.

பெரிய மேல் இமை அசைவதுபோல பெரியவனாம் ராமன் கோசிக முனிவனது வேள்விச் சாலையைச் சுற்றி சுற்றி வந்து காக்கின்றான். அசையாத கீழிமைபோல இளையாழ்வானாம் இலக்குவன் வேள்விக் கூடத்தின் நுழைவு வாயிலில் அசையாது நின்று காவல் காக்கின்றான். மேலிமை கீழிமையைத் தீண்டி, தீண்டிச் சிமிட்டிக் கண்ணைக் காப்பதுபோல சுற்றிவரும் ராமன், இலக்குவனை ஒவ்வொரு சுற்றிலும் தீண்டி எச்சரிக்கின்றான்.
அந்த எச்சரிக்கையில்தான், "பவர்சடை அந்தணனாகிய கோசிக முனியின் வேள்விக்குத் தீங்கு இழைக்கும் தீயவர் இவர்' என இலக்குவனுக்கு ராமன் காட்டுகின்றான்.

ஆக, கம்பர் என்ற மாகவி, கண்ணை இமை காக்கும் நுட்பத்தை வேள்விப் படலத்தில் அரசகுமாரர்களின் அருங்காவலில் புகுத்தி நமக்குக் கவியின்பம் தருவதோடு, மனித உடலியல் கூற்றின் உண்மையையும் உரைத்து விடுகிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT