தமிழ்மணி

தென்னை ஓலையில் விருந்து!

6th Jun 2021 10:17 AM | -டி.என். இரத்தினவேல்

ADVERTISEMENT


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒரு சமயம் பேரூர் ஈசனையும், மருதாச்சல மூர்த்தியையும் தரிசித்துவிட்டு, பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள கோட்டூர் வந்தார். இதைக் கோட்டூர் மலையாண்டிப் பட்டணம் என்றும் கூறுவர். கோட்டூரில் கணக்குப் பிள்ளையாக,  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்து வந்தார்கள்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பல திருத்தலங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோட்டூர் மலையாண்டிப் பட்டணம் சென்றார். உச்சிவேளை; உணவு உண்ணும் நேரம். சுவாமிகளுக்கோ கடுமையான பசி. சைவ உணவு உண்பவர் இல்லத்தில்தான் சுவாமிகள் அமுது செய்வது வழக்கம்.

கணக்குப் பிள்ளை சைவப் பிள்ளை என்று தெரிந்து அவரது இல்லத்தை அணுகினார். கணக்குப் பிள்ளை நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவர். செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பவர்.

தண்டபாணி சுவாமிகள் திரு அமுது செய்யும் நேரத்தில்  வந்துள்ளதால் அகமும் முகமும் மலர அவரை வணங்கி வரவேற்று, அமரச் செய்தார்.  இல்லத்தார் அனைவரும் வெளியூர் சென்றுவிட்டதால் சுவாமியை உபசரிக்கும் பொறுப்பைத் தாமே மேற்கொண்டார். வீட்டில் வாழை இலை இல்லாததால்,  விரைந்து கொல்லைப் புறம் சென்று சில தென்னை ஓலைகளைப் பறித்து வந்து,  ஊசி நூல் கொண்டு அந்த  ஓலைகளை உணவு உண்பதற்கு ஏற்றவாறு இலையாகத் தைத்தார்.

ADVERTISEMENT

சுவாமிகளுக்கு அந்த இலையில் நீர் தெளித்து, கீரைப் பொறியல், சுண்டைக்காய் வற்றல், துவரம் பருப்பு ரசம் ஆகியவற்றைப் பரிமாறினார். வண்ணச்சரபமும் அவரது அன்பான உபசாரத்தைப் பாராட்டிய வண்ணம் உணவருந்தினார். சைவர் ஒருவர் முகம் கோணாமல் தென்னை ஓலையால் இலை தைத்து, சோறிட்டு அன்புடன் உபசாரம் செய்ததை எண்ணி இறும்பூதெய்தினார். கணக்குப் பிள்ளை தன்னை உபசரித்த விதத்தை மிகவும் விசுவாசத்துடன் மனம் மகிழ்ந்து ஒரு வெண்பா பாடி பாராட்டினார். 

கோட்டூரில் சைவன்முகம் கோணாமல் கூடத்தில்
ஈட்டு தென்னை ஓலைஇலை கொணர்ந்து போட்டெனக்குச்
சோறும் இலைக்கறியும் சுண்டக்கா யும் பருப்புச்
சாறும் இட்டுப் பெற்றான் தவம்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT