தமிழ்மணி

வெளிச்சம் பெறாத ஒரு போர்ச் செய்தி!

முனைவர் வாணி அறிவாளன்


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கேட்டவுடன், "தன்கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, ஐம்படைத்தாலியும் களையப்பெறாத அச்சிறுவன், தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால்குடித்தலை விட்டுச் சோறுண்டான்' எனச் சங்கப் பாடலடிகள் கூறிய காட்சி (புறநா.77) மனக்கண்ணில் நிழலாடும். அவன் உரைத்த வஞ்சின மொழிகளும் (புறநா.72) நினைவுக்கு வரும். ஆனால்,

சங்ககால மக்களும், புலவர்களும் பாண்டியன் நெடுஞ்செழியனைக் கொண்டாடியதற்கு வேறு காரணம் உண்டு.   
செழியன், சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த நிலையில்,  ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. அச்சூழலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுதல் எளிது எனக் கருதிய சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐம்பெரு வேளிருடன்கூடிப் பாண்டிய நாட்டை நோக்கிப் பெரும்படையுடன் வந்தனர். 
அவ்வாறு வந்த பகைப்படைகளைக் கண்டு அஞ்சாது, போருக்குப் புறப்பட்ட செழியன் பாடிய வஞ்சின மொழிகளே அவை. வஞ்சினத்துடன், படைக்குத் தலைமை தாங்கி போர்க்களத்திற்குச் சென்ற வேந்தனான அவ்விளைஞன், பகைவர் எழுவரையும் கூடற்பறந்தலையில் கலங்கத் தாக்கிப் புற முதுகிட்டோடச் செய்தான் (அகநா.116, 296). அதன் பின்னரும் போர்ச்சினம் அடங்காது, பகைநாட்டு ஆலங்கானத்திற்கே அப்பகைவர்களைத் துரத்திச் சென்று, போரிட்டுப் பெரும் வெற்றி பெற்றான். அவ்வருஞ் செயலை, (விழுமியம் பெரியம், யாமே; நம்மின்) புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. 

இத் தலையாலங்கானத்துச் செருவென்ற நிகழ்வே, அவன் இயற்பெயரின் முன் சிறப்பு அடையாக - அடையாளப் பெயராக நிலைத்து நிற்கும் பேறு பெற்றது. செழியன், கூடற்பறந்தலையில் தொடங்கி, தலையாலங்கானம் வரை புரிந்த போர்ச் செயல்களை எல்லாம் கண்டும், கேட்டும் மகிழ்ந்த மாங்குடி மருதனார் உள்ளிட்ட புலவர்கள் பலர் அதைப் பாடிச் சிறப்பித்துள்ளனர். 

பாண்டியன் நெடுஞ்செழியனும், பிற மன்னர்களும் பல வெற்றிப் போர்கள் நிகழ்த்திய சங்க காலப் போர்ச் சமூகத்தில், இத் தலையாலங்கானத்து வெற்றியை ஓர் அரும்பெரும் வெற்றியாகப் புலவர்கள் கொண்டாடியது ஏன்? 

ஏனெனில், பகைநாட்டுத் தலையாலங்கானத்தில், செழியன் அப்பெரும் பகையை வென்றது தன்நாட்டுப் படைவலிமையால் அன்று. தனியொருவனாகத் தன் மற்போராற்றலால் பெற்ற வெற்றி அது. 

ஆம். தலையாலங்கானத்தில் நிகழ்ந்த போர், இருபக்க நாற்படைகளும் மோதிக்கொண்ட பெரும்போர் அன்று. போர்க் கருவிகளின்றி உடல் வலிமையால், போர்த்திறத்தால் மல்லாடிப் பகைவர்களை வீழ்த்தும் மற்போர் அது. செழியனின் வியக்கத்தக்க மற்போராற்றலால் பெற்ற மல்வென்றியே, தலையாலங்கானத்துப் போர் வென்றி. 

பழந்தமிழகத்தில் பெரும்படைகள் ஒன்றுக்கொன்று மோதிப் போரிடாமல், வேந்தரும்-வேந்தரும், வேந்தரும்-படைத்தலைவரும், படைத்தலைவரும்-படைத்தலைவரும் எனத் தலைமைப் பொறுப்புடையவர்கள் தம்முள் மற்போர் நிகழ்த்தியோ அல்லது வாள்போன்ற கருவிகளைக்கொண்டு போரிட்டோ பகைவர்களைக் கொல்வது வெற்றியாகக் கருதப்பட்டது. 

இவ்வாறு அத்தலைவன் பெற்ற வெற்றியை, நாட்டின் வெற்றியாகக் கருதும் முறை பழங்காலத்தில் உலகமெங்கும் வழக்கத்தில் இருந்தது. இப்போர் முறையை  (காம்பேட்) என்பர். 

கிரேக்கம், ரோம் முதலான நாடுகளிலும் இப்போர் முறை வழக்கிலிருந்தது. இப்போர் முறையில் பெரும்பாலும் மேற்கொள்ளப் பெறுவது மற்போரே. பண்டைய கிரேக்கர்கள் நடத்தி வந்த ஒலிம்பிக் ஆட்டங்களில் மற்போரும் (மல்யுத்தம்) ஒன்று. சங்க இலக்கியங்கள், மல்லர்தம் தோள்களைப் பெருந்தோள், முழவுத்தோள், திண்தோள் எனப் பலவாறாகக் குறிப்பிட்டுள்ளன.

சங்க காலத்தில் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளிக்கும், ஆமூர் மல்லனுக்கும் இடையே நிகழ்ந்தது (காம்பேட்) எனும் இவ்வகைப் போரே (புறநா.80-85). இவ்வகைப் போர்களை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன (அகம்.44, 386, பதிற்.90). இப்போர் வகையைத் தொல்காப்பியம், வாகைத்திணைப் பாகுபாடுகளுள் ஒன்றாக, "அனைநிலை வகை' எனக் குறிப்பிட்டுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையும், இதனை "மல்வென்றி' எனத் தனிப்புறத்துறையாக  அமைத்துள்ளது.  

செழியனின் அருமையான போர்த்திறத்தினை, இடைக்குன்றூர்கிழார் நுட்பமாகப் பதிவு (புறநா.77) செய்துள்ளார். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட சேரநாட்டுப் புலவர் குடபுலவியனார், புகழ்ந்து பாடி (புறநா.19) பாண்டியனை மகிழ்ந்து ஆரத்தழுவிக் கொண்டாராம்.  

இவ்வாறு புலவர்கள் பலராலும் பாடப்பெற்ற செழியனின் மல்வென்றி, சங்க இலக்கிய உரையாசிரியர்களாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களாலும் விளக்கம் பெறாமல் போயிற்று. ஏனெனில், சங்கப் புலவர்கள் மற்போர் மறவரை மல்லர் என்றும், மள்ளர் என்றும் இருவிதமாகக் குறித்துள்ளனர் (மங்கலம் எனும் சொல்லை மங்களம் என்றும் வழங்குவது போன்று). ஆனால், இவ்விரு சொற்களில் மல்லர் என்ற சொல்லுக்கு மட்டும் "மற்போர் மறவர்' எனப் பொருளுரைத்த உரையாசிரியர்கள், "மள்ளர்' என்ற சொல்லை மறவரைக் குறிக்கும் பொதுச் சொல்லாகக் கொண்டனர். 

சங்கப் பாக்களில், மல்லர் என்ற சொல் ஐந்து இடங்களிலும்;  மள்ளர் என்ற சொல் 38 இடங்களிலும் பயின்று வந்துள்ளன. மள்ளரை மற்போர் மறவர் எனக் கருதாமையால், பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த மற்போர் குறித்த பல செய்திகள் அறியப்பெறாமல் உள்ளன. (விளக்கமாகக் காண்க: பழந்தமிழகத்தில் மற்போர், வாணி அறிவாளன், நூல்: புதுநோக்கில் பழம்பாக்கள்). 

இவ்வாறு இளம் வயதிலேயே கருதியது முடிக்கும் வினைத்திட்பமும், அரும்பெரும் போராற்றலும் கொண்டு திகழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வீர வரலாறு ஊக்கமும், மனவெழுச்சியும் ஊட்டக்கூடியது; இத்தகைய வரலாறுகள் மேலும் மேலும் நுட்பமாக வாசிக்கப்பட வேண்டும்; பேசப்பட வேண்டும்; பரப்பப்பட வேண்டும். இப்படிப் பெருமைமிக்க பல வீர வரலாறுகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT