தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

25th Jul 2021 05:29 PM

ADVERTISEMENT

 

தனது பேச்சிலும் மூச்சிலும் மகாகவி பாரதியார் நினைவாகவே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சீனி. விசுவநாதன் பற்றிச் சொல்ல வேண்டாம். அவருக்கு அடுத்தபடியாக வேறு யார் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. பெரியவர் விட்ட இடத்திலிருந்து "ரிலே' ஓட்டப் பந்தயத்தில் குச்சியை வாங்கிக் கொண்டு ஓடுவதுபோல, தொடர்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறைத் தலைவர், பேராசிரியர், முனைவர்ய.மணிகண்டன்.

நீங்கள் திரிலோக சீதாராமையும், "சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரனையும் ஏன் விட்டுவிட்டீர்கள் என்று கேட்காதீர்கள். அவர்களுடையது "பக்தி' மார்க்கம். இவர்களுடையது "கர்ம' மார்க்கம். அதுதான் வித்தியாசம்.

முனைவர் ய.மணிகண்டனிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்திருந்தது. இலக்கிய மாத இதழ் ஒன்றில் இதுவரை அறியப்படாத பாரதியாரின் படைப்புகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். புதிதாகத் தனக்குக் கிடைத்த பாரதியார் தொடர்பான ஆவணங்களை அதன் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தி வருவதாகவும், அவை என் பார்வைக்கு வந்தனவா என்று வினவியும் கடிதம் எழுதியிருந்தார் முனைவர் மணிகண்டன். என் பார்வைக்கு அவை வரவில்லை. ஏனென்றால், அந்த இலக்கிய இதழ் எனக்குக் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

அது கிடக்கட்டும், அந்த இதழ்களை எங்கிருந்தாவது பெற்று எனக்கு அனுப்பித் தரும்படி அலுவலகத்தில் நான் சொல்லி இருக்கிறேன். இன்னும் நான் தினப்படியாக அலுவலகம் செல்லத் தொடங்காத காரணத்தால், இந்த இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான செய்தி அதுவல்ல. செப்டம்பர் 11-ஆம் தேதி "தினமணி' நாளிதழ் தொடங்கிய தேதி மட்டும் அல்ல. மகாகவி பாரதியார் அமரரான தினமும்கூட. 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இரவில், நடுநிசிக்குப் பிறகு அவர் அமரரானார். (செப்டம்பர் 12 என்பதுதான் அதிகாரபூர்வ ஆங்கிலத் தேதி) அதனால் இது பாரதியாரின் நினைவு நூற்றாண்டு.

கொவைட் 19 நோய்த் தொற்று காரணமாக நினைவு நூற்றாண்டின் தொடக்கத்தை நம்மால் கொண்டாட முடியவில்லை. பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிறைவடைய இன்னும் 48 நாள்கள்தான் உள்ளன.

"மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு குறித்த எழுச்சியைத் தமிழுலகில் உருவாக்க வேண்டும்' என்கிற முனைவர் ய. மணிகண்டனின் அறைகூவல், என்னை மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பாரதி அன்பர்களைத் தட்டி எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும்கூட சுறுசுறுப்பில்லாமல் இருந்தால் எப்படி?

நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாளம் மகாகவி பாரதி. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், தோழர் ஜீவாவும் தலைமேல் வைத்துக் கொண்டாடிய யுகபுருஷன் பாரதியார். அவரது நினைவு நூற்றாண்டைக் கொண்டாடாமல் போனால் அது நமது தலைமுறைக்கே களங்கமாகிவிடும். உலகம் போற்றும் அந்த உன்னதக் கவிஞனின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடி, நமது தமிழ் உணர்வைத் தமிழ்நாடு அரசு நிலைநிறுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளை, தமிழ்கூறு நல்லுலகத்தின் சார்பில் முன்வைக்கிறேன்.

உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 12 ஆகிய இரண்டு நாள்களையும் அமரர் பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடி, அந்த அமர கவிஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 

எனக்கு முகநூலில் கணக்கு இருக்கிறது என்றாலும், முகநூலில் இயங்குபவன் அல்ல நான். புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது ஜெ. பாஸ்கரன் எழுதிய "படித்தேன்... ரசித்தேன்...'. அதனால், "வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' என்றொரு முகநூல் குழு இருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியும்.

தான் வாசிக்கிற புத்தகங்கள் குறித்த அறிமுகப் பதிவுகளை அந்த முகநூல் குழுவில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார் ஜெ.பாஸ்கரன். இப்போது அதைத் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார். ஒரு வித்தியாசமான புத்தக விமர்சனம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஜெ.பாஸ்கரன் தொழில்முறையில் பிரபல சருமம் / நரம்பியல் மருத்துவர். இதுவரையில் மருத்துவம் குறித்த மூன்று நூல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். எழுதுவதற்கும் படிப்பதற்கும் மருத்துவரான அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்பதுகூட வியப்பல்ல, தான் படிக்கும் புத்தகங்களை ரசித்துப் படிக்க முடிகிறது என்பது அதைவிட வியப்பு.

பிரபல மருத்துவர்கள் பலரும் இதுபோல இலக்கிய ஆர்வமுள்ளவர்களாகவும், வேறு சிலர் இசை, கலை, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பதற்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. தொழில்முறை அழுத்தத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் கையாளும் உத்தியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்தப் புத்தகத்தில் ஜெ.பாஸ்கரன் செய்திருக்கும் பதிவுகள் அனைத்துமே ஆழமானவை; தேர்ந்து, தெளிந்த ஒரு வாசகனின் பார்வையில் அமைந்த விமர்சனங்கள். எந்தவொரு நூலையும் நுனிப்புல் மேயாமல், ரசித்துப் படித்ததை அந்தப் பதிவுகள் வெளிச்சம் போடுகின்றன.

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தியில் தொடங்கி ஜெயமோகன், சுதாங்கன் வரை அதில் ஐம்பது புத்தகங்களிலிருந்து, வண்டு தேனை சேகரிப்பது போல ரசித்து, கிரகித்துத் தொகுத்திருக்கும் "படித்தேன்... ரசித்தேன்...' தொகுப்பை நானும் படித்தேன்... ரசித்தேன்...


கவிஞர் "ஜோ' நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். அவரது புதிய கவிதைத் தொகுப்பு "ஈர வெயில்'. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சும் விதத்தில் என் முன்னே போட்டி போட்டுக்கொண்டு காத்திருந்தன. மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு நான் தேர்ந்தெடுத்த கவிதை "கிறிஸ்துமஸ் தாத்தா'.

அந்தோணியாக மாறிய
ஆறுமுகமாகத்தான் இருக்க வேண்டும்
அந்த கிறிஸ்துமஸ் தாத்தா,
வேறெவன் கொடுப்பான்,
இந்தக் கீழ்வீட்டுக் கருப்பசாமிக்கு
இவ்வளவு சாக்லெட்டுகளை!

Tags : Tamilmani கலாரசிகன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT