தமிழ்மணி

நிலையான கதி எது?

25th Jul 2021 05:26 PM | - ம. பரஞ்சோதி

ADVERTISEMENT

 

சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர் புலவர் ஒட்டக்கூத்தர்  என்பதை அவர் இயற்றிய பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. 

"திருநெய்த்தானம்' என்கிற திருத்தலத்தில் உறையும் நெய்த்தானப் பெருமானை சென்று வணங்கியபோது பாடியதாக இப்பாடல் கருதப்படுகிறது. இது தனிப்பாடல் திரட்டில் உள்ளது.

இப்பாடலில் வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துரைப்பதுடன், மனிதனுக்கு  நிலையான கதி எது என்பதையும் ஒட்டக்கூத்தர் தெளிவு படுத்துகிறார். 

ADVERTISEMENT

பாடல் படிப்பதற்குப் புதிர் போடுவது போல இருந்தாலும்,  அதில் பயின்று வரும் சொற்களின் சொல்லழகு படிப்பதற்கு இனிமை தருவதுடன், மெய்ஞ்ஞானக் கருத்துகள் மிளிர்வதையும் காணமுடிகிறது. 

அப்பாடல் வருமாறு:
விக்கா வுக்கா வித்தா விப்போய்
விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்கா யத்தா சைப்பா டுற்றே
இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய் தொக்கா டச்சூ
ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நெக்கா டக்கா னத்தா டப்போம்
நெய்த்தா னத்தா னைச்சே வித்தே!

மூப்பினால் விக்கித் தளர்ந்து உயிர் உடலைவிட்டுப் போய்விட்டால், உற்றார் உறவினர் எல்லாம் பிணத்தை எரித்துவிட்டு ஊருக்குள் போய்விடுவார்கள். 

இத்தகைய உடம்பின் மீது பற்றுவைத்து, செல்வத்தைத் தேடி, சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து வைக்கிறீர்களே... தாம்  அணிந்திருக்கும் எலும்பு மாலை அசையவும், பேய்கள் எல்லாம் ஒன்றுகூடிக் கூத்தாடவும், சடையில் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கரங்களில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அந்தச் சுடுகாட்டில் நடனம் செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தானமென்னும் திருத்தலத்தில்  வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக!

ஒட்டக்கூத்தரின் இப்பாடலைப் படிக்கும்போது ஒளவையாரின் நல்வழிப் பாடலை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்- கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்!  (நல்வழி-22) 

Tags : Tamilmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT