தமிழ்மணி

அவையடக்கமும் தன்னடக்கமும்!

25th Jul 2021 05:23 PM | -முனைவர் பா.சக்திவேல்

ADVERTISEMENT

 

"அறிவது அறிந்தடங்கி, அஞ்சுவது அஞ்சி, உறுவது உலகுவப்பச் செய்வோர் எப்பொழுதும் இன்புற்று வாழ்வார்கள்' என்பது நாலடியார் நல்வாக்கு. அதன்படி தமிழ்ச் சான்றோர் வாழ்ந்து, செழித்த தேசம் நம் தேசம்! அவையடக்கம் குறித்த முறைகள் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் கூறப்பட்டுள்ளன. பிற்காலத்தில் புலவர்கள் பெருஞ்சபைதனில் பெருநிலம் ஆண்ட வேந்தர், சான்றோர் முன்னிலையில் தான் படைத்த கவியை அரங்கேற்றம் செய்துள்ளனர். அப்போது தன்னடக்கத்தோடு தனது காப்பியத்தை, பனுவல்களை மக்கள்பார்வைக்குப் படைத்திருக்கின்றனர்.

இன்று நாம் காணும் புதுக்கவிதை பாடும் கவிஞர்கள் சிலர் உலகமே தனக்கு வசப்பட்டதாய் பெருமை பேசும் விந்தைகளைக் காண்கிறோம். ஆனால், அன்று மரபு வழி தமிழ்ப் பாக்களை சந்தச்சுவை ததும்ப, எக்காலத்திற்கும் பொருந்தும் உவமையையும், கருத்துகளையும் அடுக்கி, அடக்கத்தோடு அள்ளித் தந்துள்ளனர்.

பெருமை சான்ற புலவர்கள் தமிழ் இலக்கியத்தின் சொல்லேர் உழவர்களாய் சுழன்று என்றும் அழியாப் புகழ் கொண்ட படைப்புகளை அளித்து பெரும்பதம் அடைந்துள்ளனர். "ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று' என்கிற கம்பர் பாடல் (கம்பராமாயணம்) குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கோயில் அர்ச்சகராக சேவை செய்து கந்தனின் கருணையினால் "திகடசக்கரம்' என்று அடியெடுத்து கொடுக்கப்பட்டு, அதில் ஒரு சந்தேகம் பிறக்க, அதற்கு விளக்கமாக "வீரசோழியம்' என்ற நூலை மேற்கோள்காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விந்தைகள் புரிந்த பின்னர், கச்சியப்ப சிவாச்சாரியாரால் அரங்கேற்றம் பெற்றதுதான் "கந்தபுராணம்' என்பதுயாவரும் அறிந்தது.

அப்படி "இறையருள் பெற்றிருந்த பொழுதும், முதன்முதலில் பள்ளிக் கல்வி பெறுவோருக்கு எழுத்துப் பயிற்சி அளிப்பதற்காக மணலில் கையைப் பிடித்து எழுத வைப்பர். அத்தகைய பாலகனைப் போன்ற நான் கந்தபுராணம் பாடப் போகிறேன்' என்கிறார் கச்சியப்பர்.

இறைநில மெழுதுமு னிளைய பாலகன்
முறைவரை வேனென முயல்வ தொக்குமால் (க.பு.)

"வேதத்துக்கு நிகர் என விளங்கும் வியாசர் விரித்து வழங்கிய பாரதத்தை, நான் அறிந்து சொல்லுதல் என்பது அண்டவெளியில் ஆதவனின் நீண்ட எல்லையைக் கண் பார்வை இல்லாதவர் கண்டு வாய் பேச இயலாதவர் உரைப்பதைப் போன்றது' என்று தன்னை தாழ்த்தி, வியாசர் எழுதிய பாரதத்தை உயர்த்திச் சொல்கிறார் வில்லிபுத்தூரார் தன்னடக்கத்தோடு.

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண்இலா நெடும் காதையை யான்அறிந்து இயம்பல்
விண்ணில் ஆதவன் விளங்குநீடு எல்லையை ஊமன்
கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும்!

"யானையை தாமரைக் கொடியைக்கொண்டு கட்டிப்போடுவதைப் போன்ற முயற்சிதான் நளன் கதையை நான் பைந் தமிழ்ப் பாடல் தொடையைக்கொண்டு கட்ட முயல்வதென்று' புலவர் புகழேந்தி பணிகிறார் இவ்வாறு:

"வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவதொக்கும்'
(நளவெண்பா)

கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிய " சேக்கிழார் சுவாமிகள் புராணம்' அவையடக்கம் பகுதியில் "பெருங்கடல் போல் விரிந்துகிடக்கும் தமிழ் நூல்களைக் கற்று நவில நான் நினைப்பது, தமிழ்ப் பாற்கடலை ஒரு சிற்றெறும்பு பருகிக் குடிக்க நினைப்பது போன்றதும், நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த மண்ணுலகை நிறுக்க நினைப்பதும் போன்றதாகும்' என்று
உரைக்கிறார்.

ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
பாற்கடலை சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும்
நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்!
(திருத்தொண்டர் புராண வரலாறு)

காலத்தை வென்று நிற்கும் கவிபுனைந்த தமிழ் வேந்தர்கள் தன்னடக்கத்தைக் கடைப்பிடித்து, தாம் இயற்றிய நூல்களில் அதைப் பதிவு செய்த பாங்கு
பெருமைக்கும் போற்றுதற்கும் உரிய தனித்துவம் வாய்ந்த பெருநெறியாகும்.

Tags : Tamilmani அவையடக்கமும்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT