தமிழ்மணி

கணவனைப் புகழும் மனைவி

18th Jul 2021 04:42 PM |  -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்

ADVERTISEMENT

 

நற்றிணையின் முதல் பாடலை இயற்றியவர் குறிஞ்சிக் கபிலர். இப்பாடலில், தலைவியிடம் தோழி, "தலைவன் பிரிந்து சென்று பொருளீட்டி வருகிறான் போலத் தெரிகிறது' என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, தலைவனின் அன்புடைமையைக் கூறி "பிரியமாட்டான்' என்று உறுதியாகத் தெரிவிக்கிறாள்.

இதுதான் களம், தலைவி பேசுகிறாள்: "என் கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?' "நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் / என்று மென்தோள் பிரிபறியலரே'. சொன்ன சொல் மாறாத செம்மல் அவர்; எப்படி நோக்கினாலும் இனியராகவே இருக்கிறார். தோற்றம், பேச்சு, நடத்தை என எல்லாவற்றிலுமே இனிமையானவர். என் மென் தோளைப் பிரிந்தறியாதவர்.

அவர் நட்பும் மேன்மை வாய்ந்தது, எதைப்போல? தாமரை மலரில் தேனை எடுத்து மலைமேல் உள்ள சந்தன மரத்தில் கூடு கட்டிய தேனைப் போன்று தித்திக்கும் நட்பு அவர் நட்பு. "தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் / சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் / புரைய மன்ற புரையோர் கேண்மை' - பெரிய வியப்பு, நீர்இல்லையேல் உலகம் இல்லை என்பது போன்று, அவரில்லையேல் நான் இல்லை என்றிருக்க, அவர் என் மீது பேரன்பைப் பொழிகின்றார். நிலைமை இவ்வாறிருக்க, அவரைப் பிரிந்தால் நான் எப்படித் துன்புறுவேன் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் அவர், என்னைவிட்டுப் பிரிந்து செல்வாரா? இப்பாடலில் கபிலர் இரு உவமைகள் தருகிறார். இரு உவமைகளுமே கணவனின் அன்பை காட்டும் தலைவி கூற்றுதான்.

ADVERTISEMENT

தாமரையில் எடுக்கப்பட்டு சந்தன மரத்தில் கட்டப்பட்ட கூட்டின் தேனைப் போன்ற உயர்வானது அவர் நட்பு என்கிறாள். தாமரைத் தேன் உயர்ந்த சுவையானது. சந்தன மரத்தில் கட்டப்பட்டதால் அதே நீர் உயர்ந்த சுவையுடன் மிகுந்த தரமான நறுமணமும் ஒட்டியிருக்கும். சுவையை அனுபவிப்பவர் மட்டுமே அறிய முடியும். மணத்தை - சந்தனம் பூசி இருந்தால் பிறரும் நுகர்வது போன்று மற்றவர்களும் துய்க்க இயலும். தலைவன் தரும் காதல் இன்பத்தைத் தலைவி மட்டும் அறிவாள். அது அகம் சார்ந்தது.

புற வாழ்வில் அவன் ஆற்றும் நற்பணிகளின் பயனை ஊரில் உள்ள அனைவருமே துய்த்து மகிழ்வர். இந்த உவமை மூலம், கபிலர் தலைவன் அகத்துறை, புறத்துறை இரண்டிலுமே பெருமையோடு வாழ்வதை உணர்த்துகிறார்.

இரண்டாவது உவமையின் வாயிலாக "நீரின்றி உலகம் வாழ இயலாது. உலகம் நீருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அதுபோன்று தலைவனே தனக்கு உயிராக இருக்கிறான். நான் நன்றி செலுத்த வேண்டியிருக்க, அவன் என்னை அன்பால் அரவணைக்கிறான். இது மழை உலகத்துக்கு நன்றி பாராட்டுவது போன்று உள்ளது' என்று குறிப்பால் உணர்த்துகிறாள்.

நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நம்நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உருபவோ செய்பறியலரே!

வீட்டிலும் வெளியிலும் ஒருசேர நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று இப்பாடல் மூலம் ஆடவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Tamilmani Wife praising husband
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT