தமிழ்மணி

சித்த விகாரக் கலக்கம்!

முனைவர் தெ.ஞானசுந்தரம்

(13.7.2021) ஆனி (29)மகம் ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை

"திருக்கோத்தும்பி' என்பது திருவாசகத்தின் ஒரு பகுதி. இப்பகுதியில் மாணிக்கவாசகர், சிவபெருமான் பெருமையையும் அவன் தமக்கு அருளியதையும் கூறி, அவன் திருவடி மலர்களில் சென்று ஆனந்தத்தேன் ஊதுமாறு அரச வண்டினை (கோத்தும்பி) வேண்டிக் கொள்கிறார். ""இது முழுவதும், பெரும்பான்மையும் வெண்டளையும், சிறுபான்மை
கலித்தளையும் பெற்று வந்த நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பாக்களான் இயன்றது'' என்பது மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் தந்துள்ள குறிப்பு. இப்பகுதியின் ஆறாம் பாட்டு,

வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

(10: 6)


என்பது. இதில் முதலடியில் "மக்கள்குலம்' என்று தேமாங்கனிச்சீர் வந்துள்ளது. சொற்களாகப் பிரிக்காமல் சீர்களாகப் பிரித்து அச்சிட்டுள்ள பதிப்புகளில் எல்லாம் இவ்வாறே உள்ளது. "மக்கள்குலம்' என்னும் சீர் முன் "கல்வியென்னும்' என்னும் சீர் வரும்போது, ஒன்றாத வஞ்சித்தளையாகும். வஞ்சித்தளை கொச்சகக் கலிப்பாவில் வருதல் இல்லை.

மகாவித்துவான் தம் உரையில் யாப்புச்சிக்கல் தோன்றும் இடங்களுக்குத் தெளிவு தந்துள்ளார். "நானார்என் உள்ளமார்' என்னும் இரண்டாம் பாட்டின் முதலடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளன. அதற்குப் பேராசிரியர் உரையையும், யாப்பருங்கலக் காரிகையையும் மேற்கோள்காட்டிக் கொச்சகக் கலிப்பாவில் "ஐஞ்சீரடி வருவன உள' என்று விளக்கியுள்ளார். ஆனால், இப்பாட்டில் கனிச்சீர் இடம்பெற்றுள்ளது குறித்து யாதும் கூறவில்லை.

அவர் கருத்தினையொட்டி இதனை"வைத்த நிதிபெண்டிர் மக்கள் குலங்கல்வி என்னும்' என்று ஐஞ்சீராகக் கொள்ளலாம் என்றால் "என்னும்' என்பதும், "பித்த' என்பதும் சேரும்போது நேரொன்றாசிரியத்தளையாகி விடுகிறது. நேரொன்றாசிரியத்தளை இத்தகைய பாட்டில் வருவதில்லை. இஃது ஒரு சிக்கல்.

அடுத்து, சித்த விகாரக்கலக்கத்திற்குப் பிறப்பு இறப்பு இரண்டு மட்டும் காரணமா? நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி என்னும் இவையும் காரணமா? என்னும் வினா எழுகிறது. இஃது இரண்டாவது சிக்கல்.

இப்பாட்டின் அமைப்புப்படி பார்த்தால், "அரச வண்டே! நிதி, பெண்டிர், மக்கள், குலம் கல்வி ஆகிய இவையே உறுதிப்பொருள் என்று நம்பி மயங்கும் இவ்வுலகத்தில் பிறப்பு இறப்பு என்கின்ற மனவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தைப் போக்கிய இறைவனிடத்தே போய் ஊதுவாயாக!' என்று பொருள்படும். இப்பொருளில் நிதி முதலியன உலகம் மயங்குவதற்குக் காரணம் என்றும்; பிறப்பு இறப்பு என்னும் இரண்டு மட்டுமே சித்த விகாரக் கலக்கத்திற்குக் காரணம் என்றும் ஆகிறது. ஆனால் ஆளுடை அடிகள், நிதி முதலாக இறப்பு ஈறாக உள்ள ஏழனையும் மனக் கலக்கத்திற்குக் காரணமாகக் கருதியுள்ளார்.

"பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி
நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை'

(கோ.து.10: 17);

"கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனை' (அ.ப.41: 4);
"எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம்
என்னுடைய பந்தம் அறுத்து என்னை
ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்'

(தி.பூ.வ.13:2);

"குலங்களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம்'

(நீ.வி. 6: 29);

"கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்' (தி.பு. 39:3);
"காயப்பிறப்போடு இறப்பு என்னும்
அறம் பாவம் என்றிரண்டு அச்சம்
தவிர்த்தென்னை ஆண்டு கொண்டான்'

(தி.தெள்.11: 8)

என்று வரும் பகுதிகளால் இதனை உணரலாம். மேலும், "மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளை'; "கல்வி எனும் பல்கடல்'; "செல்வம் என்னும் அல்லல்' போன்றவற்றிலிருந்து தாம் தப்பிப் பிழைத்ததைப் போற்றித் திருஅகவலிலும் குறித்துள்ளார்.

இப்படி மனக்கலக்கத்திற்குப் பிறப்பு இறப்பு இரண்டை மட்டுமே காரணமாகக் கொள்ளும்படி செய்வது முதலடியில் உள்ள "என்னும்' என்னும் சீரே ஆகும். இச்சீர் இல்லாவிட்டால், "அரச வண்டே! இப்பித்த உலகில் நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, பிறப்பு, இறப்பு என்னும் இவற்றால் வரும் சித்த மாறுபாடு ஆகிய கலக்கத்தைத் தெளிவித்த இறைவனிடத்தே போய் ஊதுவாயாக!' என்று பொருள்படும். பாட்டும்,

வைத்த நிதிபெண்டிர் மக்கள் குலங்கல்வி
பித்த உலகில் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

என்று தளை தட்டாமல் அடிதோறும் பன்னிரண்டு எழுத்துகளைக் கொண்டதாய் அமையும். முதலடியில் "என்னும்' என்பது மிகையாகத் தோன்றுகிறது. அறிஞர்கள்சிந்திப்பார்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT