தமிழ்மணி

பாரதியின் "வாயே திறவாத மௌனம்'

31st Jan 2021 12:02 PM | -முனைவர் அரிமளம் பத்மநாபன்

ADVERTISEMENT


"வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன் அலனோ' என்பார் வள்ளல் பெருமான். அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர் காலம்தொட்டு இத்தமிழ்த் திருக்கூட்ட மரபுத் தொடர்ச்சியின் மொத்த அடையாளமாகத் திகழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த பத்தாண்டுகள் தமிழருக்கும் தமிழுக்கும் பாரதிக்கும் ஒரு பொற்காலம். சுப்பிரமண்ய பாரதியாகப் புதுவைக்கு வந்த மகாகவி, "உலககவி' என்னும் பெருமையுடன் அங்கிருந்து தமிழகத்திற்குத் திரும்பினார். 

அவருடைய பல உன்னதப் படைப்புகள் புதுச்சேரியில்தான் அரங்கேறின என்பது வரலாறு. அவற்றுள் முதன்மையான ஒன்று புதுவை மணக்குள விநாயகர் மீது அருளிச் செய்த "விநாயகர் நான்மணி மாலை' என்பது. இப்பாடல் தொகுதி தமிழ் இயல், இசை அறிஞர்களின் கவனத்திற்கு வராமல் போனது வருந்துதற்குரியதே. அகவல், கலித்துறை, விருத்தம், வெண்பாவென 40 பாடல்களின் தொகுப்பு "விநாயகர் நான்மணி மாலை'. இதன் இரண்டாவது பாடலில்,

    "நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
    நாயேன் பல பிழைசெய்து களைத்துனை நாடிவந்தேன்
    வாயே திறவாத மௌனத்திருந்துன் மலரடிக்குத்
    தீயே நிகர்த்தொளி வீசுந்தமிழ்க்கவி செய்குவனே!'
என்கிறார். இது என்ன வாயே திறவாத மௌனம்? வாயைத் திறந்து பேசாமலும் வேறு ஒலிகளை எழுப்பாமலிருப்பதும்தானே மௌனம்? அவ்வாறெனில், "வாயே திறவாத மௌனம்' என்பதன் பொருள் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகிறது. இதற்கான மூலத்தை ஆராய வேண்டியுள்ளது. அதற்கு முன் "மௌனம்' பற்றிய பாரதியின் கொள்கை யாதெனப் பார்ப்போம். 

ADVERTISEMENT

மகாகவி தம் புதுவை வாழ்க்கையில் சிலகாலம் அவ்வப்போது மௌன விரதம் அனுஷ்டித்ததைப் பற்றி, "பாரதி நினைவுகள்' என்ற நூலில் அவருடைய வளர்ப்பு மகள் போன்ற யதுகிரி அம்மாள் சில நினைவுகளைப் பதிவு செய்கிறார்:

புதுச்சேரிக்குப் போன சில நாட்களுக்குப் பின் ஒருநாள் பாரதியார் வீட்டுக்குப் போனேன். அன்று அவர் மௌன விரதம் முடிந்திருந்தது. புதிய பாட்டுக்கள் எவ்வளவு பாடியிருக்கிறார் என்று கேட்டேன். 

""புதிய பாட்டுக்களைக் காட்டிலும் விரதம் அதிகமாகிவிட்டது யதுகிரி. எனக்கே சகிக்க முடியவில்லை. வாய் மூடாமல் பாட்டும் பேச்சுமாக இருந்தவர் ஊமைபோலச் சமிக்ஞை செய்வது, எழுதிக் காண்பிப்பது; இந்த வழியை எந்த மண்ணாய்ப் போகிறவன் காட்டினானோ?'' -  இது செல்லம்மா.

பாரதி:  ""யாரும் காட்டவில்லை செல்லம்மா. ஒருநாள் செய்தேன்; எனக்கே "மஜா' பிறந்தது. வாரத்தில் மூன்று நாள் பேசாமல் இருந்தால் எழுத்து வேலை தடங்கல் இல்லாமல் நடக்கிறது; சுதேசமித்திரன் தகராறு இல்லாமல் பணம் அனுப்புகிறது. உனக்கு நல்லதுதானே? நீயும் மௌனமாய் இருந்து பார், செல்லம்மா. அதில் தனி சுகம் இருக்கிறது. இனி மாதத்தில் சில நாள் மௌன விரதம் என்று கிரமம் செய்து விடுகிறேன். புதிய சொல், அதாவது "ஓம்' என்பதைப் போல் தமிழில் ஒரு பதம் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் மௌன விரதம் இருக்கிறேன்''. 

பிறகு "தேவர் வருகவென்று' என்ற பாட்டைப் பாடினார். பின்னர் எனக்குக் கொடுப்பதற்கு என்று வைத்திருந்த "சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்', "ஜயமுண்டு பயமில்லை மனமே', "இயற்கை யென்றுனை உரைப்பார்', "உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி', "காலமாம் வனத்தில்', "பொழுது புலர்ந்தது', "மலரின் மேவு திருவே', "குயில் பாட்டில் ஒரு பகுதி' ஆகியவை அடங்கிய குறிப்புகளைக் கொடுத்தார். நான் அவற்றை எடுத்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தேன். 

பிங்கள வருஷத்தில் அடுத்தடுத்து அநேக சம்பவங்கள் நிகழ்ந்தன. அன்று பாரதியார் பதினைந்து நாள் மௌன விரதம் ஆரம்பித்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் மாடியிலிருந்து அவர் எங்களை அழைத்தார். நாங்கள் போனோம். நான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு. சிவப்பான கண்கள். துர்ப்பலமான உடம்பு. பார்க்க சகிக்கவில்லை. என் மனத்தில் இருப்பதை அறிந்து கொண்டவர்போல, ""நான் புதிய வழியில் யோக சாதனம் செய்கிறேன்; அதனால் உடம்பு இளைத்திருக்கிறது'' என்று அறிவித்தார். (எல்லாவற்றையும் அவர் எழுதிக் காட்டியதாகவே யதுகிரி குறிப்பிடுகிறார்.)

"பாஞ்சாலி சபதம்' துகிலுரியும் சருக்கத்தை அன்று முடித்திருந்தார். அதைப் பாடிக்காட்டினார். மௌன நாட்களில் பேசத்தான் மாட்டார்; கவிதைகளைப் பாடுவார்.

செல்லம்மா அப்போது வருத்தத்துடன் சொன்னார்: ""யதுகிரி, இவர் "எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென் நாவினிலே'என்று பாடிவிட்டு, இப்படி ஊமையைப் போல் அபிநயிப்பதைக் கண்டு என் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறதே!'' 

""நான் மந்திரச் சொல்லைக் கண்டுபிடிக்கப் பேசாமல் இருந்தால் செல்லம்மா கலாட்டா செய்கிறாள்'' என்று எழுதிக் காட்டினார் பாரதியார். செல்லம்மா எவ்வளவு முறையிட்டும் பாரதியார் மௌன விரதத்தை மாதக் கணக்கில் அனுஷ்டித்தார். ஒரு தரம் நாற்பது நாள் விரதம் இருந்து கவிதைகள் செய்தார். அதுதான் "பாரதி அறுபத்தாறு' என்ற பெயரில் இப்போது உலவுகிறது. இன்று அதைப் படித்தால் அன்று அவர் அதைச் செய்ய எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

யதுகிரி அம்மாள், தங்கள் மூவருக்கும் இடையே அவ்வப்போது நிகழ்ந்த மௌனம் பற்றிய உரையாடல்களை இந்நூலில் ஆங்காங்கே பதிவிட்டுள்ளார். இருப்பினும் அக்காலத்தில் தாம் சிறுமியாக இருந்ததால் அதன் மேன்மையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தமக்கு இருக்கவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும் யதுகிரி என்ற சிறுமியின் பங்களிப்பு பாரதியின் வாழ்க்கையிலும் அவரது படைப்புகளிலும் அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

"மோகனப் பாட்டு முடிவு பெறப் பாரெங்கும் ஏகமௌனம் இயன்றது காண்;  
(குயில் பாட்டு); மோனம் போற்று' (புதிய ஆத்திசூடி.84) என்பனவற்றை, பாரதியாரின் மௌன விரதத்தின் விளைவாக உதித்த கவிதை வரிகளாகப் புரிந்துகொள்ள முடியும்.

சரி, "வாயே திறவாத மௌனம்' என்பதற்கான தமிழ்ப் புலமை மரபின் வித்து எங்கிருக்கிறது? இதைத் "தாரணை' என்று திருமூலர் குறிப்பிடுகிறார். தாரணை என்பது மௌனமாய் இருத்தல். திருமந்திரத்தில் அஷ்டாங்க யோகம் பற்றிய மூன்றாவது தந்திரத்தில் "தாரணை' பற்றிய பாடல்  (593) இடம்பெறுகிறது.

"வாய்திறவாத மௌனிகள் சகஸ்ரதளம் என்று சொல்லப்படுகின்ற அறிவு மண்டலத்தில் பிராண வாயுவைச் செலுத்தி ஞானத் தீமூட்டி சோதி ஒளி காண்பார்கள்' என்பது திருமந்திரப் பாடலின் உட்பொருள். இதனையே அருட்பிரகாச வள்ளலார், "இங்கிதமாலை'யில்  "பேசா மௌனம்' (34-36) என்கிறார்.

அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் குருவாக வந்து,  "சும்மாயிரு, சொல்லற' என்று உபதேசித்ததாக அவர் வரலாறு கூறுகிறது.

இவ்வாறாகத் தமிழ் மரபில் "மௌனம்' என்பது தமிழ்ப் புலவர், ஞானியர் மரபுகளில் தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகிறது. உண்மையான துறவை மேற்கொண்ட ஞானிகள் யாவரும் முதலில் மௌனத்தையே பல காலம் கடைப்பிடித்து, இறுதியில் "மௌனகுரு சுவாமிகள்' என அறியப்படும் பாரம்பரியம் இம்மண்ணிற்கு உண்டு. சித்தர் வாழ்வில் மௌனத்திற்கான இடம் மிகப் பெரிது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT