தமிழ்மணி

ஒருவரும் காண்கிலர்!

31st Jan 2021 11:58 AM | -வளவ. துரையன்

ADVERTISEMENT

    
கம்பராமாயணத்தில் ராமன் வில்லை முறிக்கும் காட்சி. இதைக் கம்பர் வருணிக்கும் விதத்தைப் பாருங்கள்.  

ராமன் அவ்வில்லை சீதைக்குச் சூட்டும் மாலை போல் எடுத்தான். அவன் வில்லை வளைக்கும் காட்சியைக் காண வேண்டும் என்று எண்ணி அனைவரும் இமைக்காமல் இருந்தனர். 

ஆனால், அவர்களால் ராமன் வில்லை எடுத்ததை மட்டுமே பார்க்க முடிந்தது. வில்லைக் காலில் வைத்ததையும், நாண் பூட்டியதையும், வில் ஒடிந்ததையும் காண முடியவில்லை. வில் ஒடிந்த சப்தத்தை மட்டுமே கேட்டனர்'. ராமன் வில்லை முறித்த விரைவை இதைவிட அருமையாக யாரும் கூற முடியாது. 

"ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதையெ னும்பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலையிது என்ன எடுத்தான்'
"தடுத்திமை யாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!'   
(கார்முகப் படலம் 32-34) 

ADVERTISEMENT

இதைப் போலவே ஒரு காட்சியை வீரமாமுனிவர் இயற்றிய "தேம்பாவணி'யிலும் பார்க்கலாம். இதில் கோலியாத் என்ற அரக்கனை தாவீது என்னும் சிறுவன் கவண் கல்லால் அடித்து வீழ்த்தும் வேகத்தை இவ்வாறு வருணிக்கிறார். 
"கவண் கல்லை வைத்ததையும், கவணைச் சுழற்றியதையும் யாரும் பார்க்க முடியவில்லை. அவர்கள் நேராக இடிக்கும் மேகம் போன்ற கல் மோதி இருள் போன்ற கோலியாத் விழுந்ததை மட்டுமே பார்த்தனர்'. மேற்குறித்த இவ்விரு பாடல்களுக்கும் உள்ள இயைபைப் பாருங்கள்.

"கல்லை ஏற்றலும், கவணினைச் 
      சுழற்றலும், அக்கல் 
ஒல்லை ஓட்டலும் ஒருவரும்
       காண்கிலர்; இடிக்கும் 
செல்லை ஒத்து அன சிலை
       நுதல் பாய்தலும்,  அன்னான் 
எல்லை பாய்ந்து இருள் இரிந்து
       என வீழ்தலும் கண்டார்'


 

ADVERTISEMENT
ADVERTISEMENT