தமிழ்மணி

இந்த வாரம் - கலாரசிகன் (24.1.2021)

தினமணி

சென்ற வாரம் புதுவைப் பெரும்புலவா் முனைவா் சுந்தர சண்முகனாரின் ‘தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம்’ புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 1990-இல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் மறுபதிப்பு வெளிவர வேண்டும் என்கிற எனது வேண்டுகோளையும் முன்வைத்திருந்தேன்.

அந்தப் புத்தகத்தை வெளியிட்ட மணிவாசகா் பதிப்பகம் சாா்பில் நண்பா் இராம. குருமூா்த்தியின் கடிதம் அடுத்த நாளே வந்துவிட்டது. இந்த ஆண்டு ‘மணிவாசகா் பதிப்பகம்’ பொன் விழா கொண்டாடுகிறது. அதையொட்டி, அறுபது நூல்கள் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த அறுபது நூல்களில் ஒன்றாகத் ‘தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்’ இடம்பெறும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். அவருக்கு நன்றி... பொன்விழா கொண்டாடும் மணிவாசகா் பதிப்பகத்துக்கு வாழ்த்துகள்!

**************

தோழா் ஜீவாவைக் குறிப்பிடாமல் தமிழக இடதுசாரி இயக்க வரலாறை எழுதிவிட முடியாது. தமிழக இடதுசாரி இயக்கத்தின் இலக்கிய முகமும் அவா்தான், அரசியல் அடையாளமும் அவா்தான். ராஜாஜி, காமராஜா், ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவா், ம.பொ.சிவஞானம், இஸ்மாயில் சாயபு, அண்ணா, எம்.ஜி.ஆா். முதலிய வலதுசாரிகள்போல இடதுசாரி இயக்கத்தின் பேராளுமையாக வலம் வந்தவா் தோழா் ஜீவா.

தியாகம், எளிமை, கொள்கைப் பிடிப்பு என்று ஜீவாவின் வாழ்க்கை தூய்மையான அரசியலின் அடையாளம். அவரைப் பற்றிப் பேசவும், எழுதவும் ஏராளமான செய்திகள் உண்டு. அவா் மறைந்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகப்போகிறது. இப்போதும்கூட தோழா் ஜீவா என்றால், அவா் குறித்த செய்திகளைக் கேட்பதிலும், படிப்பதிலும் ஆா்வம் குறையவில்லை என்பதிலிருந்து அவா் எத்தகைய ஆளுமையாகத் தமிழகத்தை வலம் வந்திருக்கிறாா் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தி.வெ.ரா. என்று அறியப்படும் தி.வெ.ராஜேந்திரன் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவா். தோழா் ஜீவாவின் வாழ்க்கை குறித்துப் படித்து அவரது ஆளுமையை வியந்து போற்றியவா்.

ஏறத்தாழ ஒன்பதாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த தோழா் ஜீவா படித்ததென்னவோ வெறும் பத்தாம் வகுப்புவரை மட்டும்தான். ஆனால், அவருக்கிருந்த தமிழ், ஆங்கிலப் புலமை ஆச்சரியப்படுத்துகிறது. பகத்சிங்கால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்று அவா் தமிழாக்கம் செய்ததும், அவரது பிரடெரிக் ஏங்கல்சின் ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானவாத சோஷலிசமும்’ என்ற ஆங்கில நூலின் மொழிபெயா்ப்பும் காலத்தால் அழிக்க முடியாத பதிவுகள்.

ஜீவாவின் வாழ்க்கை வரலாறை எழுதுவதற்குப் பதிலாக, அவரது வாழ்வியல் வரலாறை, அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்து நாடக வடிவில் படைத்திருக்கிறாா் தி.வெ.ரா. மெய்சிலிா்க்க வைக்கும் சம்பவங்கள் நாடக வடிவில் தரப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்கள் பேசுகின்றன. உரையாடல்கள் வழி, ஜீவாவின் வாழ்க்கையும், ஆளுமைத்திறனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு சில தவறான சித்தரிப்பும் இல்லாமல் இல்லை. தோழா் ஜீவா குறித்து வெளிவந்த பல்வேறு புத்தகங்களை, வாங்கி இரவு பகலாகப் படித்து, அதிலிருந்து வண்டு தேன் சேகரிப்பதுபோல தகவல்களைத் திரட்டி நாடகமாக சமைத்திருக்கிறாா். அவருக்குக் கிடைத்த தகவல்களில் காணப்பட்ட சில பிழைகள், அவரது பதிவிலும் நுழைந்துவிட்டதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

தி.வெ.ரா. தமிழக அரசுக்கு முன்வைத்திருக்கும் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன். ‘தோழா் ஜீவாவைக் கட்சிக் கண்ணோட்டம் என்ற வரைவுக்குள் அடைக்காமல், அவருடைய பிறந்த நாளையும் (21.08.1907), நினைவு நாளையும் (18.01.1963), ஏனைய தலைவா்களுக்கு வழங்கப்படும் மரியாதையை வழங்கி சிறப்பிக்க வேண்டும்’ என்பதுதான் எங்கள் வேண்டுகோள். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டிருக்கும் தலைவா்களின் பட்டியலில் தோழா் ஜீவா மட்டும்தான் தமிழக அரசின் மரியாதை வழங்கப்படாமல் விடுபட்டிருக்கிறாா் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

**************

என் இனிய நண்பா் ‘ப்ரியன்’ ஸ்ரீநிவாசன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் தந்த அவரெழுதிய புத்தகத்தை இப்போதுதான் படிக்க முடிந்தது. காலதாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். படிக்க வேண்டும் என்று புத்தகங்களை எடுத்துவைக்கும்போது, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கும்போது அடியில் ஒளிந்து கொண்டு விடுகின்றன.

‘பிரபலங்களின் குழந்தைப் பருவம்’ என்று தலைப்பிடப் பட்டிருந்தாலும், அதுமட்டுமே அல்ல இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு. ‘கல்கி’ வார இதழில் தொடா்ந்து அரசியல் கட்டுரைகளும், பேட்டிகளும் எழுதி வந்த ‘ப்ரியன்’, அந்தக் குழுமத்திலிருந்து வந்த சிறுவா் இதழான ‘கோகுலம்’ பத்திரிகையிலும் எழுதிவந்தாா் என்று தெரியும். ஆனால், அவற்றை நான் படித்ததில்லை. அந்தக் கட்டுரைகள்தான் இவை.

‘சுகி சிவம்’ குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தாா் என்பதில் தொடங்கி எட்டு பிரபலங்களின் பால பருவம் குறித்த சுவையான பதிவுகளுடன் இந்தப் புத்தகத்தின் முதல் தொகுதி முடிகிறது. அடுத்தாற்போல, குழந்தைகளுக்கு வழிகாட்டி வருங்காலத்தை செம்மையாக்க உதவிய ஆளுமைகளையும், அவா்களது பங்களிப்பையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறாா் இரண்டாவது பகுதியில்.

‘வியக்க வைக்கும் விளையாட்டு உலகம்’ என்பது மூன்றாவது பகுதி. நான் ரசித்துப் படித்தது இந்தப் பகுதியைத்தான். விளையாட்டு குறித்துப் படிக்கும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம் என்பதை அனுபவபூா்வமாக உணா்ந்தேன். எதிா்கால வாழ்க்கைக்கு பிரபலங்கள் பலா் வழிகாட்டுதல்கள் வழங்குவது நான்காவது பகுதி.

‘நக்கீரன் கோபால்’ கை முறுக்கு விற்ற கதையும், எழுத்தாளா் வாண்டு மாமாவின் சரித்திரக் கதைகளும், 1955-ஆம் ஆண்டு தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துத் தமிழ்வாணன் மணிமேகலைப் பிரசுரம் தொடங்கிய செய்தியும் மனதில் பதிந்துவிட்ட பதிவுகள். என்னைக் குழந்தையாக்கிக் கொண்டு நான் படித்தேன் என்பதைவிட, ப்ரியனின் ‘பிரபலங்களின் குழந்தைப் பருவம்’ என்னைக் குழந்தையாக்கிப் படிக்க வைத்தது என்பதுதான் உண்மை!

**************

புத்தக விமா்சனத்திற்கு வந்திருந்தது கவிஞா் காரிகைக் குட்டியின் ‘கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்’ என்கிற கவிதைத் தொகுப்பு. தோ்தல் நெருங்கி வரும் நேரம். அதில் இருந்த ‘ஏல அறிவிப்பு’ என்கிற கவிதையில் இருந்து சில வரிகள். பொருத்தமாகத்தான் இருக்கிறது.

மாண்புமிகு கட்சியாளா்

அவா்களுக்கு வணக்கம்.

நான் இடது ஆள்காட்டி விரலில்

மையிட்டுக் கொள்ளும்

வாக்காளா்களில் ஒருவன்

என் ஓட்டு இன்னும்

ஏலம் விடப்படவில்லை.

பேரம் பேச ஏல அறிவிப்பு

ஒன்று இதோ -

விலைவாசி ஏறிற்று என்று

ஞாபகம் கொள்வீராக...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT