தமிழ்மணி

" பூ' வென மொழிந்த துணைவ!

17th Jan 2021 12:36 PM

ADVERTISEMENT


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுதந்திரப் போராட்ட வீரர், வழக்குரைஞர், விடுதலைத் தியாகி என்பதைத் தாண்டி, தேர்ந்த தமிழ் அறிஞர். இவரது தன் வரலாற்றை "சுயசரிதம்' என்கிற பெயரில் எழுதியுள்ளார். முற்றிலும் அகவற்பாக்களாலான  நூல். 

வ.உ.சி., தொடங்கிய 1. தரும சங்க நெசவு சாலை, 2. சுதேசிய நாவாய்ச் சங்கம், 3. சுதேசியப் பண்டகசாலை இம்மூன்றும் மலர்களாக, "ஏருள இன்பமும் இலாபம் பலவும் நலங்கள் பலவும் நல்கும் கனிதரும் மலர்கள் மூன்று மலர்ந்துள தச்செடி' எனக் குறிப்பிடுகிறார். அதுவே அடுத்தப் பத்தியில் "பூ' என மொழிகிறார். இவர் பயன்படுத்திய "பூ' என்கிற பதம்,  இதற்கு முன்பு வேறு யாரும் பயன்படுத்தாத பொருள் பொதிந்த பதமாகும். 

"பூ' என்பது மலரின் பொதுவான பெயர். "பூ' பல பருவங்களால் ஆனது.  அரும்பு - அரும்பும் பூ,  அரும்பி பனியில் நனைந்த பூ - நனை. மொட்டு - மொக்குவிடும் பூ , முத்தாகும் பூ; முகை - வெடிக்கத் தயாராகும் பூ மொக்குள், நாளுக்கு நாள் விரிந்து கொண்டிருக்கும் பூ;  போது - மணம் வீசும் பூ; முகிழ் - மலர்ந்த பூ;  மலர்- நன்றாக மலர்ந்து மகரந்தம் அரும்பும் பூ;  அலர் - கூட்டமாக மலரும் பூ;  பொதும்பர் - வீழ்கின்ற  பூ;  வீ - உதிர்ந்து கிடக்கும் பூ;  பொம்மல்-  வாடிய பூ - செம்மல்.

வ.உ.சி தொடங்கிய மூன்று சங்கத்தையும் "மலர்' எனச் சுட்டுவதன் மூலம், அது நன்கு மலர்ந்துவிட்ட சங்கம் என்றும்; அச்சூல் விரைவில் சூலகமாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகும் எனவும் கனவு 
காண்கிறார். 

ADVERTISEMENT

பூ என்பதும் மலர் என்பதும் ஒன்றா? 
கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் 99 வகையான பூக்களைப் பாடியுள்ளார். பூ என்கிற பொதுப்பெயரின் ஒரு பருவம் மலர். குறிஞ்சிப் பாட்டில் இரண்டு மலர்களைப் பாடுகையில், "பூ' என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார். "வான்பூங் குடசம், மணிப்பூங் குவளை'. 

"பூ' என்பதற்கு அழகு, பொலிவு, கூர்மை என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய ஒரு சொல் பூவை. பூக்காத மரத்திற்கு பூவை என்று பெயர். பூச்சூடாத கைம்பெண் - பூவை. பூ என்பது சிறிய ஒன்று பெரிதாக மலர்தல். பூ என்பதை  உச்சரிக்கையில், வாய்க்குள் அடைப்பட்ட காற்று கன்னங்கள் உப்பிப் பெரிதாவதைக் காணலாம். பூ என்பதும் அப்படித்தான். ஓர் அரும்பு, மொட்டாகி, மலர்ந்து, பூரித்துப் பெரிதாவது.  

பூரண சந்திரன், பூரட்டாதி, பூரணை. தமிழும் வடமொழியும் இரண்டறக் கலந்த சொற்கள். இங்கு "பூ' என்பது பெரிய அல்லது முழுமையான. பூதம் என்பதை பூ + தம் எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். பூ - பெரிய, தம் - உடல். பெரிய உடலே, பூதம். தம் என்பதற்கு தம் கட்டுதல், அதாவது மூச்சை அடக்குதல் என்றும் கொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு - ஐம்பூதங்கள். பூமிக்குள் அடைப்பட்ட நீர்மம்  வெளியேறுகையில், மிகப்பெரியதாக உருவெடுக்கிறது. ஆகவே நீர் ஒரு பூதம். 

பூவுலகம் - பெரிய உலகம். பூதாரம், சிறியதைக்கொண்டு பெரிய வேலையைச் செய்வது. பூமியைப் பிளக்கும் பன்றிக்கு "பூதாரம்' என்றொரு பெயருண்டு. பூமித்திரம் என்கிற சொல்லின் சுருங்கிய வடிவமே பூமி. பூமித்திரம் என்றால் மலை என்று பொருள். பூமியின் வடிவம் கோளம் என்றாலும் அதிலிருந்து தண்ணீரைப் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மலைகளாலானது. 

வ.உ.சி. தன் பொருள்களை இழந்து மூன்று சங்கங்களை உருவாக்குகிறார். தர்மம் காக்க - நெசவுச்சாலை; நாடு சேர - நாவாய்ச் சங்கம்; பாடு சேர - பண்டகச்சாலை. இம்மூன்று சங்கங்களையும், அவருடைய துணைவர்கள் எப்படியாக விமர்சனம் செய்தார்கள் என்பதை,

"பூ' வென மொழிந்த மூவகைச் சங்கமும் 
மேவிய பற்பல விளம்புதற் கரிய 
இடுக்கணும் களைவும் இச்சிறு குறிப்பில்
தொடுக்கவும் இயலுமோ சொல்லரும் துணைவ!'

எனப் பதிவு செய்துள்ளார். மனத்தைப் பெரிதும் வதைக்கும் வரிகள் இவை. இங்கு "பூ' என்பதற்கு மலர் அல்லது பெரியது எனப் பொருளன்று. பேவாய்மொழி அது. "பூ... இவ்வளவுதானா? இந்தக் காலத்திற்கு உதவுமா? இது தகுமா?' என நகையும் மொழி அது. 

வ.உ.சி., ஆங்கிலேயர்களுக்கு எதிராக மூன்று சங்கங்களைத் தொடங்குகையில், எதிர்ப்பும் நகையும் ஆங்கிலேயர்களிடமிருந்து மட்டுமல்ல, அவருடைய நண்பர்களிடமிருந்தும் வந்திருக்கிறது. 

""மூன்று சங்கத்தையும் உற்றவனின் இடுக்கண் களையவும், நவையறு பலன்கள் பெறவும் தொடங்கினேன். ஆனால், என் துணைவர்கள், இத்தொழில் இந்நாளில் இலாபம் தருமோ, கலாபம் முன்னர்க் காகம் ஆடுவதைப் போன்றது இந்த சுதேசியம். புதுமைப் புதுமையாக நாலாவிதத்திலும் இறக்குமதி செய்கிறான் வெள்ளைக்காரன். "பூ' இவ்வளவுதானா, உன் மூவகைச் சங்கம்'' என நகையாடியதாகக் குறிப்பிடுகிறார். 

பூ என்றால் மலர்தல் அல்லது பெரிது ஆகுதல். பெரிதான ஒன்று என்னவாகும்? வெடித்துச் சுழியம் ஆகும். மலர்வதே பூ என்கிறப் பொருளில் பாடிய புலவர்களில், வ.உ.சி., "பூ' என பேவாய்மொழி மொழிந்துள்ளார்.  

- அண்டனூர் சுரா

ADVERTISEMENT
ADVERTISEMENT