தமிழ்மணி

பிள்ளைத்தமிழ் 

10th Jan 2021 07:22 PM | முனைவர் ஒளவை நடராசன்

ADVERTISEMENT

 

"பிள்ளைத்தமிழ்' குறித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஒüவை நடராசன், ஓர் அணிந்துரையில் எழுதியிருப்பது இங்கே சிறு கட்டுரையாகத் தரப்பட்டிருக்கிறது.

- ஆசிரியர்

பிள்ளைக்கவி, பிள்ளைப்பாட்டு எனப் போற்றப்பெறும் பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கியச் செல்வமாகும். பாட்டுடைத் தலைவரையோ, தலைவியரையோ தாம் பெற்ற மகவாகக் கருதித் தாய்மனம் ததும்ப, காப்பு முதலிய பத்துப் பருவங்கட்குரிய செயல்களைச் சிறப்பித்துப் புலவர் பெருமக்களால் பாடப்பெறும் பனுவலாகும்.

ADVERTISEMENT

கடவுளர், தலைவர், வள்ளல், புலவர், தொண்டர்களைப் பாட்டுடைத் தலைவராகப் பாடுதல் வழக்கு. கடவுளர் என்றால் திருமால், உமாதேவியார், திருமுருகன், விநாயகர் மேல் பாடிய பிள்ளைக்கவி பலவுள; ஆசிரியரைப் பற்றியது அம்பலவாணர் பிள்ளைத்தமிழ்; சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் வள்ளல் பற்றியது; புலவர் பற்றியது சேக்கிழார் பிள்ளைத்தமிழ்; காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் தலைவர் பற்றியது.

இச்சிற்றிலக்கியம் பற்றி, ""குழவி மருங்கினும் கிழவ தாகும்'' எனத் தொல்காப்பியப் புறத்திணை (நூ.24) பேசுகிறது. இவ்விலக்கியத்திற்கு வித்து சங்க இலக்கியமெனலாம். "குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை' என மழலையர் தரும் கொள்ளை இன்பத்தைக் கோவேந்தன் பாண்டியன் பாடியது அனைவரும் அறிந்தது. இப்பிரபந்த ஊற்றாகப் பிறங்குவது பெரியாழ்வாரின்  திருவாய் மொழியாம்.

பாடற் தலைவனது மூன்றாம் மாதம் தொடங்கி இருபத்தொன்றாம் மாதம் வரையிலுள்ள ஒற்றித்த பத்து மாதங்களைப் பத்துப் பருவங்களாகக்கொண்டு, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்து விருத்தங்கள் பாடுவது முறை. இந்நூல் ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி வரை ஏழு பருவங்களும் இரண்டுக்கும் உரியன;  இவற்றோடு சிற்றில், சிறுபறை, சிறுதேர் சேர, ஆண்பாற் பிள்ளைத் தமிழாகும். கழங்கு, அம்மானை, ஊசல் இணைய பெண்பாற் பிள்ளைத் தமிழாம். 

சிலர் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பதினாறு ஆண்டுவரையும், பெண்பாற் பிள்ளைத் தமிழென்றால் பூப்பு நிகழும் வரையிலும் பாட வேண்டுமென்பர். அரசன் முடிகவித்த பின் இச்சிற்றிலக்கியம் பாடப்பெறாது என்பாருமுளர்.

பிள்ளைத் தமிழில் கிடைக்கும் முதல் நூல் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழே; ஒட்டக்கூத்தர் பாடியது. இதன் சந்த அமைப்பைப் பின்பற்றியே பிற ஆசிரியர்கள் பிள்ளைத்தமிழ் பாடினர். பிள்ளைத்தமிழில் சிறந்தவை: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ், குமரகுருபர அடிகள் அருளியவை.

சிவஞான சுவாமிகளின் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ், இசுலாமியப் புலவர்களின் பிள்ளைத்தமிழ், ஆண்டவர் பிள்ளைத்தமிழ் எனப் பிரபந்தங்கள் பல உள்ளன.

பெரியார் பிள்ளைத்தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ், காமராசர் பிள்ளைத்தமிழ், அண்ணா பிள்ளைத்தமிழ், கலைஞர் பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் அண்மைக் காலத்தவை.

பிள்ளைத்தமிழ் நூல்களுள் பழனிப் பிள்ளைத்தமிழ் ஒவ்வொரு பருவத்துக்கும் மும்மூன்று பாடல்களைக் கொண்டு திகழ்கிறது. மாசிலாமணி தேசிகர் இயற்றிய திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழில் காப்புப் பருவத்திலும், வாரானைப் பருவத்திலும் தனித்தனிப் பதினோரு பாடல்கள் உள்ளன. முத்தப் பருவத்திலும், சிறுபறைப் பருவத்திலும் தனித்தனி ஒன்பது பாடல்கள் உள்ளன. ஏனைய பருவங்களில் பத்துப் பாடல்கள் உள்ளன.

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழின் வாரானைப் பருவத்தில் பதினோரு பாடல்களும், தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை பாடிய திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், ஏனைய பருவங்கட்குத் தனித்தனி ஒரு பாடலும் ஆகப் பத்துப் பாடல்களே அமைந்துள்ளன. 

மு.கோ.இராமன் பாடிய அப்பர் பிள்ளைத் 
தமிழில் காப்புச் செய்யுள் மட்டும் மூன்றும், ஏனைய 
பருவம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாடல் அமைந்தது.

திருவள்ளுவர், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் மனத்திற்கொண்ட நிலையில், வள்ளற் பெருமானுக்கு வாய்மணக்கப் பிள்ளைத்தமிழ் பாடி நெஞ்சுருகியவர்களுள் பொன்னேரி சுந்தரம்பிள்ளை முதலிடம் பெறுவார். 

புலவர் காமாட்சிநாதன், வித்துவான் சேதுராமலிங்கம் முதலியோரும் பாடினர். பொன்னேரி பெரும்புலவர் சுந்தரம்பிள்ளையால் வள்ளற்பிரான் மீது பாடப்பட்டமையின், இது "இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்' எனப்பட்டது. பருவத்துக்குப் பத்து பாடல்களைக் கொண்டது.
 

Tags : தமிழ்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT