தமிழ்மணி

மல்லர்க் கடந்தானும் ஆழிமழைக் கண்ணனும்!

கி.சிவா

"பதினெண்கீழ்க்கணக்கு' எனும் தொகுதியில் மாறன் பொறையனாரால் இயற்றப்பட்ட "ஐந்திணை ஐம்பது', மதுரைக் கண்ணங்கூத்தனாரால் இயற்றப்பட்ட "கார் நாற்பது' ஆகிய நூல்கள் உள்ளன. 

ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார், இந்நூல்கள் இயற்றப்பட்ட காலத்தைப் பொது ஆண்டு (கி.பி.) நான்காம் நூற்றாண்டு என்கிறார் (தமிழ்  இலக்கிய வரலாறு - கி.பி.250-கி.பி.600, மு.ப.1955). 

"ஆண்டாள் நாச்சியார், நள வருடம் ஆடி மாதம் சுக்கில சதுர்த்தசியும் செவ்வாய்க்கிழமையுங் கூடின பூர நட்சத்திரமன்று பிறந்தார்' என்று வைணவ குரு பரம்பரைச் செய்தி கூறுகிறது.

இதை அடிப்படையாகக்கொண்டு ஆண்டாளின் பிறந்த நாள் 25.6.776-ஆம் ஆண்டென்று லூ.டா. (எல்.டி.) சாமிக்கண்ணு பிள்ளை கணித்திருக்கிறார். அதை மறுத்து, மு.இராகவையங்கார் ஆடி மாதம் 716-ஆம் ஆண்டு ஆண்டாள் பிறந்தாளென்றும், திருப்பாவையில் வரும் வெள்ளி, வியாழன் கோள்களைப் பற்றிய குறிப்புகளைக்கொண்டு அவருடைய பதினைந்தாம் அகவையில் (731ஆம் ஆண்டு) திருப்பாவை இயற்றப்பட்டதென்றும் கூறியுள்ளார் (ஆழ்வார்களின் காலம் - முதல் தொகுதி, 1929). 

இதே காலக்கணிப்பை வை.மு.சடகோப ராமாநுஜாச்சாரியாரும் (ஆழ்வார்கள் சரித்திரம், 1898) கா.ர.கோவிந்தராச முதலியாரும் (ஆழ்வார்கள் வரலாறு - முதல் தொகுதி, 1948) தருகின்றனர். எனவே, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதை நாச்சியார் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது ஆகிய இலக்கியங்களைப் படித்திருக்கலாம் என்பதற்கான சான்று இந்தப் பாடல். 

மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டுஎழுந்து, 
செல்வக் கடம்புஅமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்!
இயங்கு எயில்எய்தவன் தார்பூப்ப, ஈதோ 
மயங்கி வலன்ஏரும் கார்! 

(ஐந்திணை ஐம்பது, பா.1) 

இப்பாடலின் பொருள்: நற்பண்புகளை உடைய தலைவியே! தம்மை எதிர்த்த வீரர்களை வென்ற கண்ணனின் நிறத்தைப்போன்று மேகங்கள் இருண்டு எழுகின்றன. கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் வேலைப்போன்று மின்னல்கள் மின்னுகின்றன. முப்(திரி)புரங்களின் கோட்டைகளை அம்பெய்தி அழித்த சிவன் சூடியிருக்கும் மாலைக்கு உதவும் சரக்கொன்றைப் பூக்கள் மலர, வலப்புறமாகச் சுழன்று, நான்கு திசைகளையும் வளைத்துக்கொண்டு மேலே எழுந்துள்ளன மேகங்கள். அவை சரஞ்சரமாய்ப் பொழியக் காத்திருக்கின்றன. எனவே "கார்காலம்' வந்துவிட்டதனால், உன் தலைவனும் விரைவில் வருவான்' என்று தோழி, தலைவிக்குச் சொல்வதாக  இப்பாடல் உள்ளது.

இப்பாடலை ஆண்டாள் நாச்சியார் படித்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதன் தாக்கம் "ஆழிமழைக் கண்ணா' (திருப்-4) எனும் பாசுரத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இப்பாட்டிலுள்ளவாறே கண்ணனின் உருவம்போல் (ஊழி முதல்வன் உருவம்போல்) மேகம் தன்னுடைய மெய் கருத்ததாக ஆண்டாள் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் முருகன் கையிலுள்ள வேலைப்போல மின்னல் மின்னியது என்று கூறப்பட்டிருக்க, ஆண்டாளோ பத்மநாபன் கையிலுள்ள சக்கரத்தைப்போல மின்னல் மின்னியதாகப் பாடியிருக்கிறார்.

இப்பாட்டில் சிவனின் சரக்கொன்றை போல் மழைச்சரங்கள் பெய்யக் காத்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்க, ஆண்டாளோ திருமாலின் சார்ங்கத்திலிருந்து (வில்) புறப்பட்ட அம்பைப்போல மழைச்சரங்கள் விழுந்ததாகப் பாடியுள்ளார். 

அதைப் படித்ததால் எழுதப்பட்டது என்று கூறிவிட முடியாது என்றாலும், அதே கருத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடியிருக்கிறார் என்று கருதலாம்.

"கரையை மோதும் கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்திருக்கும் பூமாலையைப் போல (இடையீடின்றித் தொடர்ந்து) மழைச்சரங்கள் விழுகின்றன' என்று கார் நாற்பது (பொருகடல் வண்ணன் புனை மார்பில் தார்போல், பா.1) 

குறிப்பிட்டுள்ளது. 

ஆண்டாள் நாச்சியாரின் பாடல்களை அவருக்குப் பின்வந்த பெரும்பாலான புலவர்களும், கவிஞர்களும் எடுத்தாண்டிருக்கிறார்கள். அவற்றுடன் ஆண்டாள் நாச்சியாரின் பாடல்களில் காணப்படும் உவமைகளை ஒப்பிட முடியாது. பக்திப் பரவசத்தில் உணர்வுபூர்வமாக வெளிப்பட்ட கோதை நாச்சியாரின் பாடல் வரிகள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பீரிட்டு எழுந்தவை. அவருக்குப் பின்னால் வந்தவர்களின் வரிகள், அவர்களது நினைவிலிருந்து கிளர்ந்தவை. இதுதான் வேறுபாடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT