தமிழ்மணி

பூனையா பூசையா?

சே. ஜெயசெல்வன்


"வீறுடை செம்மொழித் தமிழ்மொழி. உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி' என்று தமிழின் பெருமையைப் பாடியுள்ளார் பெருஞ்சித்திரனார். 

உலக மொழிகளுள் சிறப்புடைய மொழி தமிழேயாகும். தமிழில் எண்ணற்ற சொற்கள் எண்ணற்ற பொருள்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சில சொற்கள் காரணப்பெயராக அமைந்து சிறப்புற்றுத் திகழ்கின்றன. அவ்வாறே கம்பர் சொல்லாட்சியில் "பூசை' என்ற சொல் வழங்கப்படும் சிறப்பு அறியத்தக்கது.

உப்பு நீருக்குப் பதிலாக பால் நிரம்பிய பாற்கடலைப் பருகுவதற்காக ஒரு பூனை வருகிறது. அப்பூனையின் ஆசையோ பாற்கடலை முழுவதுமாகப் பருகிவிட வேண்டும் என்பதே. ஆனால் அது இயலாத ஒன்று. 

அதுபோலவே ராமனின் கதை பாற்கடல் போன்றது. கம்பரின் ஆசையும் பூனையின் ஆசை போன்றுதான். ராமனின் கதையை முழுவதும் எழுதிவிட வேண்டும் என்று எண்ணுகிறார் கம்பர். 

பூனையால் எப்படிப் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முடியாதோ? அதுபோல ராமன் கதையை முழுதும் பாட முடியாது என்று அவையடக்கமாக  ( ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு /  பூசை நக்குபு புக்கென- (பாயிரம்) பாடுகின்றார் கம்பர்.

கம்பர் ஏன் "பூனை' என்று குறிப்பிடாமல் "பூசை' என்பதாகக் குறிப்பிட்டார்? பூனை என்ற சொல் எங்கிருந்து பிறந்தது? பூசைதான் பூனையாயிற்றா? என்பதை விளக்கி தேவநேயப் பாவாணர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். 

அக்கட்டுரையில், ""பூனை என்பது பூசை என்னும் சொல்லின் திரிபே. பூனை அடிக்கடி தன் எச்சிலைக் கொண்டு முன்னங்காலால் தொட்டு முகத்தைப் பூசிக்கொள்வதால் அது பூசையெனப் பெயர் பெற்றது. வடமொழியில் உள்ள, "மார்ஜால' என்னும் பூனைப் பெயரும் இக்காரணம் பற்றியதே. ம்ருஜ் - பூசு அல்லது கழுவு. ம்ருஜ் - மார்ஜ் - மார்ஜார - மார்ஜால. பூனையைப் "பூசுபூசு' என்றழைப்பது மகளிர் வழக்கம். பூசை என்னும் சொல்லின் திரிபே பூனை என்பது'' என விளக்கம் அளித்துள்ளார்.

"தனித்தமிழ் மரபு பேணப்பட வேண்டும் என்கிற உணர்வு கம்பரிடம் அதிகம் காணப்படுகிறது' என்று முனைவர் சாரதா நம்பிஆரூரன் (தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் -  நூல்) பதிவு செய்துள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது. 

கம்பராமாயணத்தில் பாயிரப் பகுதியில் தனித்தமிழின் மரபு வழியிலேயே கம்பர், பூனை என்பதைப் "பூசை' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT