தமிழ்மணி

கனங்குழையா? கணங்குழையா?

28th Feb 2021 10:23 AM

ADVERTISEMENT

 திருக்குறளின் இயல்களில் இடம்பெறும் அதிகாரங்களிலும், அதிகாரங்களில் இடம்பெறும் குறள்களின் வரிசை முறையிலும் உரையாசிரியர்களிடையே வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் பகுப்பில் ஓர் இயலில் உள்ளது மற்றொருவர் பகுப்பில் பிறிதோர் இயலில் உள்ளது. மணக்குடவர் உரையில் இல்லறவியலில் உள்ள வாய்மை அதிகாரம் பரிமேலழகர் உரையில் துறவறவியலிலும், துறவறவியலில் உள்ள இனியவை கூறல் அதிகாரம் இல்லறவியலிலும் இடம்பெற்றுள்ளன.
 மணக்குடவர், காளிங்கர் உரைகளில் நூலின் இறுதிக்குறள், "புலத்தலின் புத்தேள் நாடுண்டோ' என்பது; பரிமேலழகர் உரையில் "ஊடுதல் காமத்திற் கின்பம்' என்பது. சிற்சில குறள்களுக்குப் பாடவேறுபாடுகளும் காணப்படுகின்றன. இயல்களை வரையறுத்துக் குறட்பாக்களைத் தருக்கமுறையில் அடைவுபடுத்திப் பாடவேறுபாடுகளைத் தெளிவுபடுத்தி உரைவகுத்தவர் பரிமேலழகரே. இன்று வெளிவரும் திருக்குறட் பதிப்புகள் எல்லாம் அவர் வகுத்த இயல், அதிகார, குறள் வரிசைகளையே பின்பற்றி வருகின்றன.
 பரிமேலழகர் பாடவேறுபாடுகளை வரையறுத்துக் கூறும் குறட்பாக்களில் ஒன்று,
 "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
 மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' (1081)
 என்பது. இதில் "கனங்குழை' என்பதற்கு மாறாகக் "கணங்குழை' என்னும் பாடமும் உள்ளது. கணங்குழை என்பதனைக் காளிங்கரும் பரிப்பெருமாளும் பாடமாகக் கொண்டுள்ளனர். "கனங்குழை' என்னும் பாடத்தைப் போற்றும் பரிமேலழகரும் கணங்குழை என்னும் பாடத்தினை மறுக்காமல் பிறிதொரு பாடமாகத் தம் உரையில் காட்டியுள்ளார். இவற்றுள் எது தக்கது?
 கம்பர் தம் காப்பியத்தில், மிதிலைக்குச் செல்லும் வழியில் சந்திரசயில மலையில் அயோத்தி மக்கள் உண்டாடி மகிழ்ந்ததாகப் பாடியுள்ளார். ஒருத்தி, மதுக்கிண்ணத்தில் பிரதிபலிக்கும் மதியினைப் பார்த்து, ""வானத்தில் உன்னைத் தீண்ட வரும் பாம்புக்கு அஞ்சி ஒளிந்திருக்கிறாயா? உனக்கு அடைக்கலம் தந்தேன்; அஞ்சாதே'' என்கிறாள். அவளை, "களித்த கண் மதர்ப்ப ஆங்குஓர் கனங்குழை' (975) என்று குறிப்பிடுகிறார். மற்றொருத்தி வீரன் ஒருவனிடத்துத் தானே விரைந்து சென்றாள்.
 ""இப்படி மரபை மீறிக் காதலனை நோக்கிச் சென்றதற்குக் காரணம் மதுவா? மாலையா? மன்மதனா? வேறு யாரேனுமா? யார் அறிவார்'' என்கிறார். அவளைக் "கனங்குழை மயிலனாள் கடிது போயினாள்' (1004) என்கிறார். இப்படி ஈரிடத்துக் கனங்குழை என்பதனைக் குறித்துள்ளார்.
 திருமணத்திற்கு முன்பு சீதை மணிமண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டாள். அப்போது அவள் ராமனைக் கடைக்கண்ணால் பார்த்தாள்; தன் கண்வழி நுழைந்த கள்வனும் வில்லை வளைத்தவனும் ஒருவனே என்று தெளிந்தாள்; அவள் வருத்தம் நீங்கியது. இதனைத் தெரிவிக்கும்போது,
 "கணங்குழை கருத்தின்உறை
 கள்வன்எனல் ஆனான்
 வணங்குவில் இறுத்தவன்
 எனத்துயர் மறந்தாள். (1155)
 என்கிறார். மற்றொரு நிகழ்ச்சி. இராவணன் சீதையைக் கவர்வதற்குத் துறவுக்கோலம் பூண்டு சென்றான். அவள் பேச்சைக் கேட்டவுடன் எழுந்த ஆத்திரத்தில் தன் இயல்பான அரக்க வடிவத்தோடு நின்று, ""தெய்வப் பெண்களுக்கும் மேலான தெய்வப் பெண்ணே, உன்மீது கொண்ட ஆசையால் வாடிய எனக்கு என் உயிரை அளித்துக் காப்பாய். தெய்வ மகளிர்க்கும் கிடைத்தற்கு அரிய பதவியை ஏற்றுக்கொள்'' என்று தன் ஆசையைச் சொல்லி அவள் அடிகளில் விழுந்து
 கெஞ்சினான் அதனை,
 அணங்கினுக்கு அணங்க னாளே!
 ஆசைநோய் அகத்துப் பொங்க
 உணங்கிய உடம்பி னேனுக்கு
 உயிரினை உதவி, உம்பர்க்
 கணங்குழை மகளிர்க்கு எல்லாம்
 பெரும்பதம் கைக்கொள் என்னா
 வணங்கினான் உலகம் தாங்கும்
 மலையினும் வலிய தோளான். (3388)
 என்கிறார். இவ்வாறு ஈரிடத்தில் கணங்குழை என்பதனைப் பயன்படுத்தியுள்ளார்.
 இராவணன் பேச்சாக அமைந்துள்ள பாட்டு "அணங்கினுக்கு அணங்கனாளே' என்று தொடங்குவது கம்பர் திருவுள்ளத்தில் அப் பாட்டினைப் புனையும்போது "அணங்குகொல்' என்னும் குறள் ஓடியுள்ளது என்பதனைக் காட்டுகிறது. அங்குக் "கனங்குழை' என்னாமல் "கணங்குழை' என்றே பாடுகிறார். இதனால் கம்பர் கருத்துப்படி இக்குறளின் வடிவம்,
 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
 மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (1081)
 என்பதே ஆகும்.
 காளிங்கர், ""கணங்குழை என்றது மகரக்குழை'' என்று பொருள் உரைத்துள்ளார். பரிமேலழகர் அதற்குத் திரண்ட குழை என்று பொருள் கூறுவர் என்கிறார். கனங்குழை என்பதற்குக் கனவிய குழை என்றும், கணங்குழை என்பதற்கு மகரக்குழை, திரண்ட குழை என்றும் பொருள் கூறப்பட்டிருப்பதால், முன்னது வேலைப்பாடற்ற அணி என்றும், பின்னது மீன் வடிவத்தில் அமைந்த வேலைப்பாட்டோடு கூடிய அணி
 என்றும் கொள்ளலாம்.
 பொருட்சிறப்பும் எதுகையழகும் கொண்ட கணங்குழை என்னும் பாடத்தை முதற்பாடமாகப்
 பரிமேலழகர் தழுவிக்கொள்ளாதது வியப்பளிக்கிறது!
 - முனைவர் தெ. ஞானசுந்தரம்
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT