தமிழ்மணி

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

28th Feb 2021 10:26 AM

ADVERTISEMENT

 பறவைகள் இன்று நேற்றல்ல, ஆதிகாலம் தொட்டே மனிதனைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. மனிதர்களின் கற்பனையை விரிவு செய்து, மனிதனை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. அதனால், அவற்றைக் கூர்ந்து கவனித்திருக்கிறான் - பழகியிருக்கிறான் - நேசம் கொண்டிருக்கிறான். தமிழ் இலக்கியங்கள் காட்டும் சில பறவைகள் குறித்த செய்திகள் வியப்பைத் தருகின்றன.
 முதலாவதாக, இவ்வாறெல்லாம் பறவைகள் இருந்தனவே என்றும், இரண்டாவதாக, இவற்றையெல்லாம் நம் முன்னோர்கள் கண்டு, பதிவு செய்திருக்கின்றனரே என்பதும்தான் பெருவியப்பு.
 பாலையில் வாழ்ந்த ஒரு பறவையினம், சிறு கற்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்ததாம். "தூது உண் அம்புறா' என்று பட்டினப்பாலை கூறுகிறது.
 இன்னொரு பறவையினம், மழை நீரினையும், மேகத்தின் துகள்களையும் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததாம்! அது வானம்பாடி வகையைச் சார்ந்தது என்பர். அதுகுறித்த "துளிநசை வேட்கையான் நசைபாடும் புள்' என்ற வரி சங்கப் பாடலில் உள்ளது.
 மகன்றில் என்ற வகை நீர்ப்பறவை ஒன்று. ஆணும் பெண்ணும் இணைந்து, பிரியாது வாழும் இயல்புடையது. அவற்றுள் ஒன்று இறந்தால், மற்றொன்றும் தனது உயிரைத் துறந்துவிடும் தன்மை உடையது.
 தன் துணையுடன் நீரில் இருக்கும்போது, இவ்விரு பறவைகளுக்கிடையில் நீர்ப்பூ ஒன்று வந்துவிடுகிறது. அச்சிறுபொழுது, ஒன்றிடமிருந்து இன்னொன்று பிரிந்து இருக்கிறதாம். ஓரிரு நொடிகளே ஆனாலும், அச்சிறு பொழுதுகூட, ஓராண்டு கழிந்தது போன்ற உணர்வினை அந்தப் பறவைக்குத் தருமாம். அதுபோல, தன் தலைவனின் பிரிவைத் தாங்காதவளாக இருக்கிறாளாம் தலைவி" (குறுந்-57).
 காதலன் பொருள் சேர்க்கும் காரணமாகப் பிரிந்து வேற்றூர் சென்றுவிட்டான். அப்பிரிவினைத் தாங்க இயலவில்லை. புலம்புகிறாள் தலைவி! யாரிடம்? தோழியிடமா? இல்லை! தன் பூந்தோட்டத்தில் உள்ள அரும்புகளிடமும், அன்னப்பறவைகளிடமும்! கல் மனது கொண்டவர் அவர். என்னை மட்டுமா.... உன்னையும் அல்லவா மறந்துவிட்டார். ஆனால், நாம் அவ்வாறல்லவே! நம்மை அவர் மறந்தார் என்ற காரணத்தால் நாம் அவரை மறக்க மாட்டோமே? - என்கிறாள்.
 "அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
 நமை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்'
 (சிலம்பு)
 பறவைகள் தம் குறை கேட்கும் தோழிகளாக இருக்கலாம், ஆனால், சில சமயம், சில பறவைகளை விரட்ட வேண்டிய அவசியமும் பெண்டிருக்கு ஏற்படத்தானே செய்கிறது?
 இதோ, புகாரின் புறஞ்சேரியில் ஒரு சிற்றில், காவிரியின் கருணையாலும் உழவர்தம் கடும் உழைப்பாலும் விளைந்த நெல் அச்சிற்றில் முன் காய வைக்கப்பட்டிருக்கிறது.
 காவல் வேண்டாம்தான், யார் வந்து அள்ளிக்கொண்டுப் போய்விடுவார்கள்? ஆனாலும், அந்த இல்லத்தின் குறும்புக்காரப் பெண்ணுக்கு ஏதேனும் பணி தர வேண்டுமென்பதற்காகவே அவளை நெல்லுக்குக் காவல் வைக்கிறாள் தாய். கொத்தித் தின்னக் கோழிகளும் ஏனைய சில பறவைகளும் வருகின்றனவாம். அப்பெண்மணி அவற்றினை விரட்ட, கல்லெறிய மனம் ஒப்பவில்லை. சிறுதடி எடுத்து வீசவும் துணியவில்லை. உடனே, தனது காதில் இருக்கும் கனத்த பொற்குழை ஒன்றினை எடுத்து வீசி, அக்
 கோழியை விரட்டிவிட்டாளாம் .
 அகல் நகர் வியன் முற்றத்துச்
 சுடர் நுதல் மட நோக்கின்
 நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
 கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
 புகார் நகரமும் சோழநாடும் அவ்வளவு செல்வம் மிக்கதாக விளங்கியதாம்.
 தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் பறவையின் மூலமாகத் தூது விடுவதும், செய்தி அனுப்புவதும் கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால், பறவையிடமே புலவர் ஒருவர் ஒரு செய்தியைச் சொல்கிறார்...
 வடக்கிலிருந்து தென்குமரி வந்து, கூடுகட்டி, குஞ்சு பொரித்து தன் பெட்டையுடனும், குஞ்சுடனும் மீண்டும் வடக்கு நோக்கிப் பயணிக்கும் அன்னச்சேவல் என்னும் பறவைக்கு புலவர் ஒரு செய்தி சொல்லுகிறார்.
 "செல்லும் வழியில், சோழ நன்னாட்டு கோப்பெருஞ்சோழனின் மாளிகை தெரிந்தால், அதனுள் சென்று, மன்னனிடம் உனக்கு பிசிர் என்னும் புலவனைத் தெரியும் என்று சொல்வாயானால், அவன் உனது அன்பான பெண் துணைக்குப் பொன்னாபரணங்கள் தந்து அனுப்புவான்.
 அன்னச்சேவல் ! அன்னச்சேவல் !
 .... .. ... ...... .... ...... ....
 பெரும்துறை அயிரை மாந்தி
 வடமலைப் பெயற்குவை ஆயின், இடையது
 சோழநன்னாட்டுப் படினே கோழி
 உயர்நிலை மாடத்து குறும்பறை அசைஇ
 வாயில்விடாது கோயில் புக்கு, எம்
 பெருங்கோ கிள்ளி கேட்க, இரும்பிசிர்
 ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
 இன்புறு பேடை அணியத், தன்
 அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே!
 (புறநா-67)
 பண்டைத் தமிழ்ச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தது என்பதற்கு இதுபோல நூற்றுக்கணக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
 -இரா. கதிரவன்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT