தமிழ்மணி

பொருந்திய வாழ்க்கை

முனைவா் கி. இராம்கணேஷ்


தலைவன், தன் தலைவியைத் தேடி அவளது ஊருக்கு வருகிறான். தலைவி நெய்தல் நிலத்தில் பிறந்து வளர்ந்தவள். தலைவன் செல்வக்குடியினர் வாழும் மருத நிலத்தில் வளர்ந்தவன். குலம், செல்வம் என்ற இரண்டின் அடிப்படையில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. இதனால் தலைவனின் வரவு பொருத்தமானதாகத் தோன்றவில்லை தோழிக்கு. இச்சூழலில் தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது:

"" இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ?
புலவு நாறுதும்ஃ செல நின்றீமோ!
பெருநீர் வினையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரில் செம்மலும் உடைத்தே!
(நற். பா. 45)

"தலைவனே! எம் தலைவி கடற்கரையிலே உள்ள அழகிய சிற்றூரிலே, சிறுகுடியிலே பிறந்தவள்; நீலநிறம் பொருந்திய பெரிய கடலானது கலங்கும்படி கடற்குள்ளே புகுந்து மீன் பிடித்து வாழும் பரதவர் குலத்துப் பெண். நீயோ, நீண்ட கொடிகள் பறந்து கொண்டிருக்கின்ற பாதுகாப்பமைந்த பழைமையான நகரத்திலே, விரைந்து தேரேறிச் செல்லும் செல்வர் குடியிலே பிறந்தவன். கொழுப்புள்ள சுறா மீனை அறுத்து துண்டுகளாக்கிக் காயவைத்து, அவற்றைத் தின்ன வரும் பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கின்ற தொழிலையுடைய எங்களுக்கு உயர்வு என்ன வேண்டியுள்ளது? எங்களிடம் புலால் நாற்றம் வீசுகிறது. எம் அருகில் நீவிர் வர வேண்டாம். கடல் நீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது, நும்மைப் போன்ற உயர்வுடையதன்று. எமது குடியிலேயே எமது தலைவிக்கேற்ற சிறந்த தலைவன் உண்டு' எனச் சொல்லி தலைவனை இனி இங்கு வரவேண்டாம் என தோழி எச்சரிக்கிறாள்.

தலைவன், தலைவியைக் காண வராது காலம் கடத்தியதால் தோழி இவ்வாறு கூறியிருக்கக்கூடும் எனக் கருதவும் இடமுண்டு. எனினும் பண்டைக் காலத்திலேயே குலம், செல்வம் முதலிய தகுதிகள் மணவாழ்க்கையில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதையும், இல்லறத்திலே இன்பமும் ஒற்றுமையும் என்றும் இணைந்திருக்கக் கூடிய பொருத்தமுள்ள திருமணம் இன்னதுதான் என எண்ணவும் பாடல் வழிகாட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT