தமிழ்மணி

"தமிழை' சுவாசிப்போம்; நேசிப்போம்!

21st Feb 2021 09:41 PM | -முனைவர் அ.சிவபெருமான்

ADVERTISEMENT


இன்று (21.2.2021)
உலகத் தாய்மொழி தினம்

"யுனெஸ்கோ' நிறுவனம் பிப்ரவரி 21-ஆம் நாளைப் பன்னாட்டுத் தாய்மொழி நாளாக 1999-ஆம் ஆண்டு நவம்பர் 17-இல் அறிவித்துள்ளது.  இந்நாளில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகளை அந்நிறுவனம் குறித்துள்ளது. அதன்படி, முதலில் தாய் மொழியை மதிக்க வேண்டும். அடுத்து, அயல் மொழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு மொழிபெயர்ப்பு மூலம் உலகில் அமைதியை உருவாக்க வேண்டும். 

மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையில் தம் வாழ்வில் கேட்டும் பேசியும் வரும் மொழியே தாய்மொழியாகும். ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களை உரையாடல் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வெளிப்படுத்துவதற்குத் தாய்மொழி மிகச்சிறந்த கருவியாகும். தாய்மொழி வாயிலாகக் கல்வி பயின்றால்தான் எதையும் எளிதாகப் புரிந்துகொண்டு விரைவாக, தெளிவாகப் புலப்படுத்த முடியும்.

"மக்களின் பண்பாட்டோடு கூடிய உயர்வாழ்க்கைக்கு அவர்தம் தாய்மொழி இன்றியமையாதது. தாய்மொழியின் செயல்திறன் மிகுந்த ஆற்றலுடையது' என்பர் அறிஞர். 

ADVERTISEMENT

""மக்களைவிட்டு மொழியும் மொழியைவிட்டு மக்களும் உயிர்வாழ்தல் சிறிதும் பொருந்தாது'' என்பது மறைமலையடிகள் கருத்தாகும். மொழியியல் அறிஞர் நோம்சாம்ஸ்கி என்பார், ""குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல தாய்மொழியை எளிமையாகக் கற்றுக் கொள்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஒருமொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் மக்களின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தொடர்புடையதாகும். 

எவ்வாறெனில், மொழி வளர்ந்தால், மொழியின் வாழ்வு வளர்ந்தால் அம்மொழியைப் பேசும் மக்களின் வாழ்வும் வளர்ச்சியும் வளரும். ஆதலால்தான் மொழியியல் வல்லுநர்கள் தாய் மொழியே பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல வளர்ச்சிகளுக்கு அடிப்படையாகின்றது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்' மொழிக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அச்சிறப்புகளெல்லாம் உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.  உலகில் மிகப்பழைமையான மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மொழியியல் அறிஞர் கபில்சுவலபில் சங்க இலக்கியங்களை ஆராய்ந்த பிறகு இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பெற்ற இலக்கியங்கள் அந்தக் காலகட்டத்தில் வேறெந்த மொழியிலும் இல்லையென உறுதிபடக் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புலவர்கள் "புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் துணைவேந்தர் முனைவர்.வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-ஆம் நாளில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும்சிறப்பு அழைப்பாளர்களாக  வந்திருந்தனர்.

அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய். ஆற்றிய உரை வருமாறு:  ""பெயர்பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரபிள்ளை உருசியாவிற்குச் சென்றபோது உருசிய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றைத் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.

மலையாள இலக்கியமனைத்தும் சமஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே? என்பது உருசியரின் கேள்வி.

அதற்கு தகழி சிவசங்கரபிள்ளை ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துகள் என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தான். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத் தேவை.''

கி.பி.1838-ஆம் ஆண்டில் சமயத் தொண்டுக்காக தமிழகம் வந்த அயர்லாந்து அறிஞர் டாக்டர் கால்டுவெல், "வடமொழியின் துணையின்றித் தமிழ்மொழி இயங்காது என்னும் பிழையான கொள்கையை நீக்கினார். மேலும், "எம்மொழியின் துணையுமின்றித் தமிழ்மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையது' என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் இவர்தான். 

தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்தும் வளைந்தும் போகாமல் தலைநிமிர்ந்து தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது அறிஞர் கால்டுவெல்லின் முடிந்த முடிவாகும்.

உ.வே.சாமிநாதையர் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தையார், ""இதோ பாருப்பா நீ ஒண்ணு இங்கிலிஷ் படி அல்லது சமஸ்கிருதம்படி: இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்தில் சௌக்கியமா இருக்கலாம். சமஸ்கிருதம் படிச்சா அந்த லோகத்தில் சௌக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற?'' என்று கேட்டாராம். 

சிறுவனாகிய உ.வே.சா., ""இங்கிலீஷ் படிச்சா இங்க நன்னா இருக்கலாம். சமஸ்கிருதம் படிச்சா அங்க நன்னா இருக்கலாம். ஆனால், தமிழ் படிச்சா ரெண்டு இடத்திலேயும் நன்னா இருக்கலாம்'' என்று பளிச்சென்று பதில் சொன்னாராம். 

""ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதற்குப் பெரும்படைபலம் தேவையில்லை. முதலில் அந்நாட்டின் தாய்மொழியைச் சிதைக்கத் தொடங்கினாலே போதும்'' என்பது ஐரிஷ் நாட்டறிஞர் டிவோலராவின் கருத்தாகும்.

அதனால், அவரவர் தாய்மொழியை அவரவர் போற்றிப் பாதுகாப்பதே முதன்மையான பணியாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT