தமிழ்மணி

"இல்லை' என்பதே  இனி "இல்லை'!

22nd Aug 2021 04:57 PM | - எதிரொலி  விசுவநாதன்

ADVERTISEMENT

 

அவிநாசிப் புலவர் என்பவர் சாயம் காய்ச்சும் தொழிலைச் செய்து வந்தார். இவர் இதிகாச புராணங்களைப் பயின்று கவிபாடும் திறன் நன்கு கைவரப் பெற்றவர். கல்வியிலே எப்பொழுதும் கருத்தூன்றி இருந்ததால் கைத்தொழிலை மறந்தார். அதனால் வறுமை மிகுந்தது. பரிசில் பெறக்கருதி பல இடங்களுக்குச் சென்று 
வந்தார்.

ஒரு முறை சிவகிரியில் அரசு புரிந்திருந்த வரகுணராமன் என்னும் குறுநில மன்னரைக் காணச் சென்றார். அங்கே சர்க்கரையப்பன் என்பவன் தானாதிபதியாக இருந்தான். அவன் பெயரில் இனியவனாயினும் செயலில் இன்னாதவன். அவன் தானும் ஈயாமல் அரசனையும் காண முடியாதபடி இவரை அகற்றி விடுத்தான்.  உடனே அவிநாசிப் புலவர் அவனை இரண்டு வசைப் பாடல்கள் பாடி, தன் கோபத்தைத் தணித்துக் கொண்டார்.

"கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ?
இரப்பவர் சொல்லாடப் போஓம் உயிர்' (1070)

ADVERTISEMENT

என்பது குறப்பா. இல்லை என்று சொல்லாடியவுடனே இரப்பவர் உயிர்போய்விடும். அத்தகைய கொடிய சொல்லை வாய் கூசாது கூறும் புல்லருக்கு உயிர் எங்கு ஒளிந்து நிற்குமோ? என்பது இக்குறட்பாவின் பொருள். அவிநாசிப் புலவர் பாடிய அவ் வசைப் பாடல்கள் பின்வருமாறு:

நற்கவி  ராசருக்கு ஈயாத மட்டி இந் நானிலத்தில்
அக்கரை யான நிதி போய்க் கரிக்கந்தை ஆடைகட்டிக்
கற்கரைந்தாலும் கரையாத சிந்தைக் கசடனுக்குச்
சர்க்கரை யப்பன் என்று ஏன் பேரிட்டான்? பெற்ற தப்பிலியே?
ஒருமற் கடகம் எனச் செத்த நாயென ஓதுகின்ற
எருமைக்கடாப் பயல் சர்க்கரை யப்பனை ஏதுக்கென்றோ
அருமைத் துரை நல்வரகுண ராமன் என்ஐயன் - என்ன
பெருமைக்கு வேண்டி வைத்தானோ?
தன் வாசற் பிரதானி என்றே?

"இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள'

குறள்-223)

எனும் குறட்பாவும்,

"புறத்துத்தன் இன்மைநலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ - ஒருவனை
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்'

எனும் நாலடியார் பாடலும் அவிநாசிப் புலவர் பாடிய பாடல்களோடு ஒப்பு நோக்கத்தக்கவை.

Tags : tamilmani
ADVERTISEMENT
ADVERTISEMENT