தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

22nd Aug 2021 05:06 PM

ADVERTISEMENT

 

கையில் கொஞ்சம் பணம் கிடைத்தால், பத்திரிகை தொடங்குவதும், கடுமையான பிரச்னைகளுக்கு இடையில் ஒருசில இதழ்களை வெளிக்கொணர்ந்த பிறகு கடனாளியாகி அதை நிறுத்துவதும் ஒரு காலத்தில் எனக்கு வாடிக்கையாகவே இருந்தது. அதனால், யாராவது சிற்றிதழ்கள் நடத்துகிறார்கள் என்றால், அவர்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. 

முகம் தெரியாத பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் முகவரி வழங்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து வருவது சிற்றிதழ்கள்தான். ஒருசில சிற்றிதழ்களின் கருத்தாக்கத்துடன் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்கூட, அவற்றின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. இளம் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் நாற்றங்காலாய் விளங்கும் சிற்றிதழ்களின் வாயிலாக வெகுஜன இதழியல் நீரோட்டத்தில் இணைந்தவர்கள் ஏராளம். அந்த வகையில், தமிழ் இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் பங்கு அளப்பரியது.

சிற்றிதழோ, பருவ இதழோ, தினசரியோ எதுவாக இருந்தாலும், அச்சுவாகனம் ஏற்றி, தொடர்ச்சியாக வெளிக்கொணர்வது என்பது தவத்துக்கு ஒப்பான கடும் பிரயத்தனம். அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதிலிருக்கும் மன உளைச்சலும், உடற்சோர்வும், பணக்கஷ்டமும். ஓர் இதழை வெளிக்கொணர்வதற்குள் விளம்பரத்துக்காகவும், அச்சிடுவதற்காகவும் எதிர்கொள்ளும் சோதனைகளும் அவமானங்களும் சொல்லி மாளாது. அத்தனையையும் மீறி ஏதோ ஓர் இலக்கிய தாகத்தால் உந்தப்பட்டு, எழுத்துச் சேவை செய்யும் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.

ADVERTISEMENT

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், திருப்பூரிலிருந்து சுப்ரபாரதிமணியன் வெளிக்கொணரும் "கனவு' சிற்றிதழ் ஜூன் மாத இதழுடன் தொடர்ந்து தனது நூறாவது இதழை வெளிக்கொணர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. நூறு நாள் திரைப்படம் ஓடுவதற்கு போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்துகிறார்கள். நூறு நாள் ஆட்சிக்கு ஊடகங்களில் விளம்பரங்கள் தரப்படுகின்றன. எந்த விளம்பரமும் இல்லாமல் அமைதியாகத் தனது நூறாவது இதழ் சாதனையைக் கொண்டாடி, தொடர்ந்து கொண்டிருக்கும் "கனவு' சிற்றிதழுக்கு வாழ்த்துகள். அதைத் தொடர்ந்து வெளிக் கொணரும் சுப்ரபாரதி மணியனுக்குப் பாராட்டுகள்.

நீதிமன்றங்களில் பல வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்பது வழக்கமாக எல்லா தரப்பினரும் வெளிப்படுத்தும் ஆதங்கம். குவிந்து கிடக்கும் வழக்குகளில் பல, சமரசம் மூலம் தீர்வு எட்டக்கூடியவை. அதற்காக ஏற்பட்டவைதான் விரைவுத் தீர்ப்பாய முறை (ஆர்பிட்ரேஷன்), நடுவரங்க முறை (மீடியேஷன்) இரண்டும்.

தேசிய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, "நடுவரங்க முறை' என்பது சமீபகாலமாக வரவேற்புப் பெற்று வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் விவாதம் தொடங்குவதற்கு முன், நடுவரங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே சமரசம் ஏற்படாத நிலையில்தான் அடுத்த கட்டத்திற்கே நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள். 

"நடுவரங்கம்'  என்று சொல்லிவிடுகிறோமே தவிர, வழக்காடும் இரண்டு தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்துவது என்பது ஒரு கலை. அதற்குப் பொறுமை  இருந்தால் மட்டுமே போதாது. உளவியல் ரீதியிலான அணுகுமுறையும், எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதுகுறித்த புரிதலும் இருந்தால் மட்டுமே "நடுவரங்கம்' மூலம் தீர்வுகாண இயலும்.

இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் நடுவரங்க நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் கூடுதல் வழக்குரைஞர் எஸ்.அருணாசலம். கடந்த 30 ஆண்டுகளாக வழக்குரைஞராக தொழிலாளர் நல வழக்குகள் பலவற்றைக் கையாண்ட அனுபவசாலி. மூத்த வழக்குரைஞர் என்.டி.வானமாமலையைத் தனது மானசீக குருவாகக் கொண்டு இயங்குபவர்.  விரைவுத் தீர்ப்பாயராகவும், நடுவரங்க நாயகராகவும், நடுவரங்கப் பயிற்சியாளராகவும் வழக்குரைஞர் எஸ்.அருணாசலம் சமரசப் பேச்சு வார்த்தைகளைக் கையாளும் சாதுர்யத்தை நேரில் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.

வழக்குரைஞர் எஸ்.அருணாசலம் எழுதியிருக்கும் புத்தகம் "நடுவரங்கம்' (மீடியேஷன்). நடுவர் மன்றம் குறித்த சில அடிப்படைகளையும், உத்திகளையும் கட்டுரைகளாக்கி, அவற்றைத் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் அவர். 22 கட்டுரைகள் அடங்கிய "நடுவரங்கம்' என்கிற புத்தகம்  பல்வேறு சம்பவங்கள், தீர்ப்புகள், வழக்குகள், தீர்வுகள் என்று வாசிப்பை சுவாரசியமாக்கி இருக்கிறது.
""மாற்றுமுறைத் தீர்வுகள் எனும் கருத்தாக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்'' என்கிற வழக்குரைஞர்  எஸ்.அருணாசலத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கான தீர்வு அதுவாகத்தான் இருக்கும். வழக்காட நினைப்பவர்களும், வழக்குரைஞர்களும், நடுவரங்க நாயகர்களும் படித்திருக்க வேண்டிய புத்தகம் "நடுவரங்கம்'.

 


புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது பாவலர் வையவன் எழுதிய "கதவுகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் பலருடனும் முகநூல் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. திரைப்பட இயக்குநர் அகத்தியனின் அணிந்துரை, முகநூலில் வையவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

பல வரிகளை அடிக்கோடிட்டு சிலாகிக்கலாம், இயக்குநர் அகத்தியன் சுட்டிக் காட்டியிருப்பது போல. அவர் சுட்டிக்காட்டாத, ஆனால், என்னைக் கவர்ந்த கிருமினாலஜி என்கிற கவிதையிலிருந்து சில வரிகள் இவை -

 

பூமியை "ஷாப்பிங் மால்' என்றும் சொல்லலாம் உலக அரசுகள் அதிலுள்ள கடைகள் உலக மயம் வணிகத்தால் நடந்து கொண்டிருந்தது இப்போது  வைரசால் நடக்கிறது!

இனி ஆயுதங்களுக்கு வேலையில்லை சர்வம் "கிருமி மயம்'!

Tags : tamilmani
ADVERTISEMENT
ADVERTISEMENT