தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

1st Aug 2021 04:54 PM

ADVERTISEMENT

 

எனக்கு பூர்வஜென்மக் கொடுப்பினை இருக்கும் போலிருக்கிறது. இல்லையென்றால், தமிழாகவே வாழ்ந்த இளங்குமரனாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வாழ்நாள் பேறு கிடைத்திருக்குமா? அவரது பிரிவு துயரம்தான். ஆனால் அவரது அமைதியான மறைவு, தமிழன்னை அவருக்குத் தந்த வரம்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை சந்திக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காகப் போன நான் அப்படியே மதுரைக்கும் சென்றேன். அடுத்த நாள் அதிகாலையில் சென்னை திரும்பியாக வேண்டும்.

ஞாயிறன்று மாலையில், மதுரை அலுவலகத்தில் அமர்ந்து தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தபோது, இளங்குமரனார் அமரரான செய்தி கிடைத்தது. மணியம்மை மழலையர் பள்ளித் தாளாளர் நண்பர் பி.வரதராசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் திருநகர் விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
உடனடியாக அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு இளங்குமரனாருக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பிவிட்டேன். நிருபர்கள் மணிகண்டன், ஜெயபாண்டி, உமாமகேஸ்வரன் ஆகியோரும் உடன் வந்தனர். திருப்பரங்குன்றம் நிருபர் மது ஏற்கெனவே ஐயாவின் வீட்டில் இருந்தார்.

ADVERTISEMENT

தமிழுக்கு இளங்குமரனார் செய்திருக்கும் தொண்டுக்குத் தலைவணங்கி நன்றி
கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். சென்னையில் வாழாமல் மதுரையிலிருந்து இயங்கி வந்ததால், அவரது அருமை பெருமைகளைத் தமிழுலகம் முழுமையாக உணரவில்லை. அவர்மீது விளம்பர வெளிச்சம் விழவில்லை. அவரும் அதை விரும்பவில்லை.

தனது கடன் தமிழுக்குத் தொண்டாற்றுவது என்கிற உணர்வுடன் ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழாகவே உலவிய அந்தப் பெருமகனின் அளப்பரிய பங்களிப்புகள், தமிழ் வாழும் நாள் வாழும். பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, இலக்கிய, இலக்கண ஆய்வாளராக, எல்லாவற்றிற்கும் மேலாக, "குறள்வழி வாழ்வு' என்கிற உயரிய சமூகக் கோட்பாட்டை உருவாக்கிய பெருமகனாக இளங்குமரனார் ஆற்றியிருக்கும் பணிகள் மலைப்பை ஏற்படுத்தும்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, மதுரை திருநகரிலுள்ள அவரது வீட்டுக்குப் போனபோது, மாடி அறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அகவை 90 கடந்தும் கொஞ்சம்கூடத் தடுமாற்றமோ, விரல் நடுக்கமோ இல்லாமல் முத்து முத்தாக அவர் எழுதி முடித்திருக்கும் பக்கங்களைப் பார்த்து வியந்து போனேன். முதுமைகூட அவரது தமிழ்த் தொண்டுக்குத் தடைபோடாமல் உதவியது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, எங்களது திருச்சி நிருபர் வைத்திலிங்கத்துடன் இளங்குமரனார் நடத்திவந்த "திருவள்ளுவர் தவச்சாலை' என்கிற தமிழாராய்ச்சிக் கூடத்துக்குப் போயிருக்கிறேன். கரைபுரண்டோடும் காவிரியாற்றங் கரையில் அமைந்த திருவள்ளுவர் தவச்சாலை, வள்ளுவருக்கு எழுப்பப்பட்ட ஆலயம். அதில் இளங்குமரனார் சேகரித்து வைத்திருந்த அரிய பல நூல்கள் நூற்றுக்கணக்கில். அவற்றை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்துவிட்டார்.

"தமிழ்மணி' பகுதியில் அவர் 28 வாரங்கள் எழுதிய "தமிழ்ச் செல்வங்கள்' (18.9.2016- 23.4.2017) தொடர், ஆய்வு மாணவர்களுக்கான வழிகாட்டி. தவச்சாலைக்குப் போயிருந்தபோது, அவர் எழுதிய புத்தகம் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதில் கையெழுத்திட்டுத் தரும்படி விழைந்தேன். "புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்' என்று எழுதிக் கையொப்பமிட்டார். அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்.

சென்னைப் புத்தகக் காட்சியில் (6.1.2019) அவரது 10 தொகுதிகள் அடங்கிய "செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்' வெளியிடப்பட்டது. அவை, தமிழுக்கு அவர் வழங்கியிருக்கும் அருங்கொடை. இளங்குமரனாரின் கடைசி நிகழ்ச்சி என்று சொன்னால் அது 2020 ஜனவரி 15-ஆம் தேதி சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாதான். நீதிபதி அரங்க. மகாதேவன் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இளங்குமரனார் ஆற்றிய உரை இப்போதும் காதில் ஒலிக்கிறது. அவரது 24 படைப்புகள் அடங்கிய "இளங்குமரனாரின் இலக்கியக்கொடை' தொகுப்பு அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அதைப் பெருவிழாவாக நடத்தி மகிழ்ந்த "தமிழ்மண்' பதிப்பகம் கோ. இளவழகன், இப்போது இல்லை என்கிற சோகமும், ஐயாவின் மறைவு என்கிற துக்கத்தில் இழையோடுகிறது.

இளங்குமரனார் பெற்ற மகன்கள் இளங்கோவும், பாரதியும் என்றால், தனது மகன்களாகவே அவர் கருதிய இருவர் இளவழகனும், பி.வரதராசனும். அவர்கள் மட்டுமல்ல, நானும்...

 

இந்திய வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அத்தியாயமாகத் தொடரும் ஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். கொடூரன் ஜெனரல் டயரின் ஆணவப் பேச்சும், அரக்க குணமும் குறித்து எண்ணிலடங்காச் செய்திகள் நமக்குத் தெரியும். அந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாகில் என்னதான் நடந்தது என்பது குறித்த நேர்முக வர்ணனையைப் பதிவு செய்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் செ.திவான்.
ஜாலியன்வாலா பாக் என்பது ஊர் அல்ல. ஒரு மைதானம். சொல்லப்போனால் குப்பை மேடு. அந்த மைதானத்தின் நான்கு புறங்களிலும் இருந்த வீடுகளின் கொல்லைப்புறச் சுவர்கள் மதில்போல் அடைப்பாக இருந்தன. பின்புற ஜன்னல் வழியாக அந்த வீடுகளிலிருந்து குப்பை வீசி எறியப்படும். அந்தத் திறந்த வெளியில் மூன்று மரங்களும், ஒரு சமாதியும் இருந்தன. இரண்டு ஆலமரங்களுக்கு இடையே ஒரு கிணறும் இருந்தது. ஒரு சந்து வழியாகத்தான் அந்த மைதானத்துக்குள் நுழைய முடியும், வெளியேற முடியும்.

ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பின் பகுதியாகத்தான் ஜாலியன்வாலா பாகில் அந்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டம் நடத்த முடிவானது. அதைத் தடுப்பதற்காக, இரண்டு நாள் முன்னதாகவே தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையெல்லாம் மீறித்தான் சுமார் 5000 பேர் ஜாலியன்வாலா பாகில் கூடினார்கள்.

துப்பாக்கிச் சூடு ஏன், எப்படி நடந்தது; தப்பியோட வழியில்லாமல் ஜெனரல் டயரின் உத்தரவால் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிச் செத்து மடிந்தவர்கள் எத்தனை பேர்; இறந்து கிடந்த பிணத்தைக்கூட அகற்ற முடியாமல் தவித்தவர்கள் எத்தனை; துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து எழுந்த கண்டனத்தை எதிர்கொள்ள நடத்தப்பட்ட விசாரணை எப்படிப்பட்டது - இப்படி ஜாலியன்வாலாபாக் படுகொலை குறித்த அனைத்து விவரங்களையும் தொகுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார் செ.திவான்.

நாடு தழுவிய அளவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் கண்டனத்துக்குரிய ஜெனரல் டயரையும், அவரது ஈவிரக்கமற்ற படுகொலையையும், அன்றைய சென்னை ராஜதானியின் ஆட்சியில் இருந்த பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு கண்டிக்கவில்லை என்பதையும், பிரிட்டிஷாருக்கு சாதகமாக மெளனம் காத்தது என்பதையும்கூட அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆவணப் பதிவு என்று சொன்னால், அதில் விடுபடல்கள் இருக்கக் கூடாதல்லவா?


உருவத்தின் அருவமாக இணைந்திருக்கும் நிழல் ஓர் ஆச்சரியம்.

கவிஞர் செளவி எழுதித் தொகுத்திருக்கும் "கடலைத் தேடிப்போகும் மழைத்துளி' புத்தகத்திலிருந்த

"விடுமுறை' என்கிற கவிதை இது -
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
நகர்ந்துகொண்டிருக்கும் நிழல்
சூரியனை நகர்த்திக்கொண்டிருக்கிறது
கிழக்கிலிருந்து மேற்காக...
விடுமுறை நாளன்றும்
விடுமுறையில்லை நிழலுக்கு!

Tags : tamilmani Kalarasigan this week தமிழ்ச் செல்வங்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT