தமிழ்மணி

பொய் கேளா தசரதன்

1st Aug 2021 04:49 PM | -முனைவர் இரா. மாது

ADVERTISEMENT

 

அன்பு, தொண்டு, உறவு, கருணை, வீரம், நட்பு என்னும் பல்தரப்பட்ட வாழ்க்கையின் விழுமியங்களைப் பாத்திரங்களாக்கி நம் கண்முன் நிறுத்துகின்றார் கம்பர். "வாய்மைக்கு யார்? என்று எண்ணுகின்றபோது, தயரதனை நமக்குக் காட்டுகின்றார். வாய்மை என்றால் அது தயரதன் என்பது கம்பரின் முடிவு. 

தந்தை இறந்ததை அறிந்த ராமன், அந்தோ இனி வாய்மைக்கு யாருளர்? என்று புலம்புகின்றான். தன் முன்னால் வந்துநின்ற ராமனைப் பார்த்த வாலி,  வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தன் நீ 
என்றே பேசுகின்றான்.

முன்னே தந்தாய் இவ்வரம் 
நல்காய் முனி வாயேல்
என்னே மன்னா யாருளர் 
வாய்மை க்கு இனி யென்றாள்!

ADVERTISEMENT

என்று கைகேயி பேசுகின்றாள். தயரதனின் வாய்ச் சொல்லே வாய்மைதான்.

ஆனால்,
அச்சொல் கேளா, ஆவி 
புழுங்கா, அயர் கின்றான்,
பொய்ச் சொல் கேளா 
வாய் மொழி மன்னன்...

என்று யாருமே சிந்திக்கவியலாத ஒரு கோணத்தில் நின்று, தயரதனை மிகவும் உயர்த்திப் பாடுகின்றார் கம்பர். ஒருவன் பொய் பேசாமல் இருந்துவிட முடியும். பொய் கேட்காமல் இருக்க முடியுமா? ஆனால் தயரதனோ பொய்ச் சொல்லைக் கேட்டதில்லை என்று பாடுகின்றார்.

பொய் எப்போது தோன்றும்? ஆசையுள்ள மனம் பொய்யை மிக விரும்பும். தன்னிடமில்லாது பிறரிடம் இருக்கும் பொருள்களை அடைய நினைக்கும் மனம் பொய்ம்மைக்குக் கொள்கலனாகும். ஆனால், அயோத்தியில் எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலால் பிறர் பொருளைக் கள்ளத்தால் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாது போயிற்று. அப்படி யாராவது இரந்து நின்றால், அதனையும் ஈந்தே கடந்தவன் தயரதன். அதனால்தான் "உண்மை இல்லை, பொய்உரை இலாமையால்' என்று அயோத்தியின் சிறப்பைப் பாடுகின்றார்.

பொய்யே என்னவென்று அறியாத சிறு குழந்தை வாய்மையே பேச, அதனை மிரட்டி, அக்குழந்தை தவறு செய்ததாகக் கருதி தண்டனை வழங்குகின்றபோது, அக்குழந்தை அறியாமலேயே அதனிடத்துப் பொய்ம்மையை நாம் விதைக்கின்றோம். வாய்மைக்கு உரிய மரியாதை இல்லாதவிடத்துப் பொய் தோன்றுகின்றது. ஆனால் தயரதனோ! தாய் ஒக்கும் அன்பினனாக இருந்து அனைவரையும் போற்றுகின்ற காரணத்தினால் அவன் முன்னால் யாரும் பொய் பேசுவதில்லை என்பது பெறப்படுகின்றது.

Tags : Tamilmani பொய் கேளா தசரதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT