தமிழ்மணி

உழுந்துமா வடகம்

1st Aug 2021 12:00 AM | -முனைவர் ச.சுப்புரெத்தினம்

ADVERTISEMENT

 

அறுசுவை உணவு சமைப்பதிலும் அவற்றைச் சுவைப்பதிலும் மிகு விருப்பு உடையவர்கள் தமிழர்கள். அறுசுவை என்பது, முதன்மை உணவு மற்றும் "தொடுகறிகள்' என்றழைக்கப்படும் துணைக் கறிகளில் நிரம்பியிருக்குமாறு பார்த்துக் கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். துணைக்கறிகளையும் அவற்றுக்குச் சுவைகூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் துவரம் பருப்பு, பாசிப்பயறு, உளுத்தம் பருப்பு எனப்படும் உழுந்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளையும், "கூட்டுமா' எனப்படும் அரிசிமாவு போன்ற மாவு வகைகளையும்  "வியஞ்சனம்' என்று வடமொழியில் குறிப்பதுண்டு.

"அப்பளம்' என்னும் துணை உணவு சமையலில் அறிமுகமாவதற்கு முன்பே "வடகம்' என்பது சங்ககால சமையலில் இடம்பெற்றிருக்கிறது. கோடைக் காலங்களில் சரியான செய்முறையில் அரிசி மாவின் கூழால் மரம் அல்லது உலோக அச்சு கொண்டு வடகம் பிழிந்து உலர்த்தி, அதை சேகரித்து வைத்துக்கொண்டு, பின்பு தேவைப்படும் காலங்களில் அவற்றை சமையலில் பயன்படுத்துவது தற்காலம் வரையுள்ள தமிழர்களின் செயல்பாடாகும். ஆனால்,  சங்ககால மக்கள் உழுந்து மாவைக் கொண்டு வடகம் தயாரித்துள்ளனர். இக்குறிப்பு ஐங்குறுநூறு பாடலொன்றில் (பா.211) காணக்கிடைக்கிறது.

ஏற்கெனவே தன் தலைவியைச் சந்தித்திருந்த தலைவன், பின்னொரு நாளில் தோழியின் வாயிலாக அவளைச் சந்திக்க வருகிறான். அப்பொழுது, தலைவிக்கு அன்புடன் கொடுப்பதற்காக, அக்கால மரபுப்படி கையில் தழையுடன் வருகிறான். தலைவியுடன் இருக்கும் தோழியைத் தனியே அழைத்து, இந்தத் தழை மாலையைத் தலைவி ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்கிற தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறான். இதன் பின்புலமாக வைத்துப் புனையப்பட்ட அப்பாடலின் பொருள் இதுதான். 

ADVERTISEMENT

தலைவியிடம் தோழி கூறுகிறாள்: "தோழியே! நெய் கலந்து பிசைந்த உழுந்து மாவைத் திரித்து நூற்ற நூலைப் போன்று (திரித்துப் பரப்பிப் போடப்பட்ட வடகம்) படர்ந்துள்ள வயலைக் கொடிகளை உடைய மலையைச் சார்ந்தவனாகிய தலைவன், தன் மலையின் உச்சியிலுள்ள அழகிய அசோக மரத்தின் தழையைக் கொண்டு வந்திருக்கிறான். "இதை நீ ஏற்றுக்கொள்ள மறுத்தால், இது வாடிவிடும். அதனால், நீ இதை ஏற்று, அணிந்துகொண்டு தலைவனுக்குக் கருணை காட்டு!' என்கிறாள். கபிலர் இயற்றிய குறிஞ்சித் திணைப் பாடல் இது.

நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்!
(ஐங்.3:2, அன்னாய்ப் பத்து)

உழுந்தங் கூழினை இட்டுப் பிழிய முற்காலத்தில் அச்சுக்கருவி இல்லையாதலால், அது கையினாலேயே பிசைந்து திரிக்கப்பட்டு வடகம் போல் தயாரிக்கப்பட்டது என்பதும்; சிவப்பு, வெள்ளை என்ற இருவேறு வயலைக் கொடிகள் இருப்பினும், நெய்கலந்து பிசைந்து செய்யப்படும் உழுந்துமா வடகம் உவமைப்படுத்தப்பட்டுள்ளதால், இப்பாடலில் கபிலர் குறிப்பிடுவது வெண்ணிற வயலைக் கொடி என்பதும் இப்பாடலுக்கான பொ.வே.சோமசுந்தரனாரின் உரைக் குறிப்பிலிருந்து பெறப்படும் கருத்துகளாகும்.

Tags : Tamilmani உழுந்துமா வடகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT