தமிழ்மணி

நாணம் விடுத்து நியாயம் கேட்போம்

11th Apr 2021 08:06 PM | - முனைவர் கி. இராம்கணேஷ்

ADVERTISEMENT


தலைவனும் தலைவியும் நீண்ட காலமாய் களவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். தலைவியின் தோழி இதை நன்கறிவாள். மண வாழ்க்கையை மேற்கொண்டு இல்லறம் நடத்தத் தலைவி விரும்பினாள். பலமுறை தலைவனிடம் எடுத்துக்கூறியும் பலன் இல்லை; அதனால் தோழியிடம் கூறுகிறாள்.

ஒரு நாள் தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருக்கும்போது, தலைவன் அவ்வழியே வருவதை தோழி பார்க்கிறாள். தலைவன் மறைவாக நின்று கொள்கிறான். இச்சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய தோழி, அவன் கேட்கும்படியாக தலைவியிடம் பேசுகிறாள். 

அருங்கடி அன்னை காவல் நீவிப்
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பல்நாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்தோய் மாமலைக் கிழவனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே! 
( நற். பா. 365)

"பல நாள்கள் இடி இடித்து மின்னல் மின்னி அமைந்த மேகம், மழை பொழியாது போயினும் அருவி ஆரவாரித்து ஒழுகுகின்ற நீர் திகழ்கின்ற பக்க மலைகளை உடைய,  உயர்ந்து விளங்கும் பெரிய மலையை உடைய தலைவனை அணுகுவோம். அன்னையின் கடுமையான காவலையும் பெரிய கடைத்தெருவையும் கடந்து பலரும் காணும்படி பகல் நேரத்தில் புறப்படுவோம். எல்லோரும் கேட்கும்படி அவனுடைய ஊர் எதுவெனக் கேட்டு வாய்விட்டுச் சொல்வோம். திருமணம் செய்யாமல் காலம்போக்கும் நீ ஒரு சான்றோனா? எனக் கேட்டு வருவோம்' என்கிறாள். 

ADVERTISEMENT

உயிரினும் சிறந்தது நாணம். ஆனால், தலைவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதால், நாணம் விட்டாவது தலைவனை பலரும் அறியும்படி கேள்வி கேட்க வேண்டும் என்று தோழி எண்ணுவதை  அறிய முடிகிறது. மேலும், இதைக் கேட்கும் தலைவன் வெட்கப்பட்டு, தன் பிழையை உணர்ந்து மணவினைக்கு ஏற்பாடு செய்வான் என்பதே தோழியின் நம்பிக்கை. கிள்ளிமங்கலம்கிழார் மகனார் சேர கோவனார் என்ற புலவர் தோழியின் மனநிலையை இப்பாடலின் வாயிலாகக் காட்டியுள்ளார்.

Tags : நாணம் விடுத்து நியாயம் கேட்போம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT