தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

11th Apr 2021 08:27 PM

ADVERTISEMENT

 

எந்தவோர் ஆளுமையின் மறைவும் ஈடுசெய்ய முடியாத இழப்புதான். செவ்வாய்க்கிழமை 87-ஆவது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்த தமிழறிஞர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என். ராமச்சந்திரனின் மறைவு ஈடுசெய்யவே முடியாத இழப்புகளில் ஒன்று. நடமாடும் தமிழ் நூலகமாகவே இயங்கிவந்த, "டி.என்.ஆர்.' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் பெரியவர் ஆற்றியிருக்கும் தமிழ்ப் பணிகளுக்கு ஈடு இணையே கிடையாது.

தமிழ் ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அல்லர் டி.என்.ராமச்சந்திரன். தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய டி.என்.ஆர்., திருலோக சீதாராம் போன்ற ஆளுமைகளின் நட்பின் காரணமாக தமிழ் இலக்கியத்துக்குள் ஈர்க்கப்பட்டவர். குறிப்பாக, பாரதியாரின் கவிதைகள் மீதான ஈர்ப்பு அவரை முழு நேர இலக்கியவாதியாக மாற்றிவிட்டது எனலாம்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது, அப்போது திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக இருந்த இரா.சோமசுந்தரமும் நானும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம். சுமார் மூன்று மணி நேரம் அவர் பேசப்பேச நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் ஆற்றொழுக்குப்போல பாரதி குறித்துத் தெரிவித்த தகவல்களைப் பதிவு செய்யாமல் விட்டது எங்களது தவறு. சோமுவிடம் அதுகுறித்த ஏதாவது பதிவு இருக்கிறதா என்று தெரியவில்லை.

 

ADVERTISEMENT

இயக்குநர் ரவிசுப்பிரமணியம் டி.என். ஆர். குறித்து எடுத்துரைக்கும் ஆவணப் படம் ஒரு பொக்கிஷம். திருலோக சீதாராம் குறித்து டி.என்.ஆரிடம் பேச்சை எடுத்தால் போதும். நெகிழ்ச்சியுடன் பல சம்பவங்களை அவர் பகிர்ந்து கொள்வதைக் கேட்கும்போது நாமே திருலோக சீதாராமுடன் உலா வருவது போன்ற உணர்வு மேலெழும். பாரதி, கம்பன், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் என்று ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக்காட்டுகள் அவரிடமிருந்து வந்துவிழும்.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வரையத் தகுதி படைத்தவர்கள் என பாரதியின் சகோதரர் சி.விசுவநாத ஐயரால் எண்ணப்பட்ட இருவர் டி.என்.ஆரும், சீனி விசுவநாதனும் என்று குறிப்பிடுகிறார் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன். டி.என்.ஆருக்கு தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அளப்பரிய மொழி ஆளுமை இருந்தது. பாரதி பாடல்கள், பெரியபுராணம், திருமந்திரம் ஆகியவற்றில் டி.என்.ஆர். மொழிபெயர்ப்புகள் தனித்துவம் பெற்றவை.

தஞ்சை பெருவுடையார் கோயில் வளாகத்தில் மாலை வேளைகளில் டி.என்.ஆரைச் சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்திருக்க, அங்கே நடக்கும் இலக்கிய விவாதங்கள் சுவாரசியமானவை என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். அவருக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனதை துரதிர்ஷ்டமாக அடிக்கடி நினைத்துக் கொள்வேன். என் மீது தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்டிருந்த டி.என்.ஆர்., அவர் ஆக்கிய நூல் எது வெளிவந்தாலும் அதை எனக்கு அனுப்பித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வாழ்நாளில் நான் பெற்ற மிகப்பெரிய பேறு அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை.

உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டிருந்த சைவச் செம்மல் டி.என்.ராமச்சந்திரனின் மறைவு நல்லவேளையாக அடுத்த கொள்ளை நோய்த்தொற்று அலைக்கு முன்பாகவே நிகழ்ந்துவிட்டது. அன்பர்களும் நண்பர்களும் பிரியா விடை கொடுத்து இறுதி மரியாதை செலுத்த முடிந்தது. இறைப் பரம்பொருள் அவரது தமிழ்த் தொண்டுக்குக் கொடுத்த வெகுமானம்!

 

 

அரவிந்த் சுவாமிநாதனை நான் நேரில் சந்தித்ததாக நினைவில்லை. ஆனாலும், "வலம்' மாத இதழ் மூலம் அவர் எனக்கு அறிமுகமானவர். அந்த மாத இதழின் இரண்டு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் அரவிந்த் சுவாமிநாதனும், அரவிந்தன் நீலகண்டனும். ஜனனி ரமேஷ், முனைவர் வ.வே.சு., ஆகியோரின் கட்டுரைகளும் "வலம்' இதழை நான் தொடர்ந்து படிப்பதற்குக் காரணம்.
"வலம்' இதழில் வெளிவந்த அரவிந்த் சுவாமிநாதனின் கட்டுரைகள் "அந்தக் காலப் பக்கங்கள்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அந்தக் கால விளம்பரங்கள், அந்தக் கால திரைப்படங்கள், அந்தக் காலத்து எழுத்தாளர்கள், அந்தக் காலத்து பத்திரிகைகள் என்று முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த காலகட்டத்தை சுவாரசியமாகப் பதிவு செய்திருக்கிறார் அரவிந்த் சுவாமிநாதன்.

இதில் சில கட்டுரைகளை முன்பே நான் படித்திருந்தாலும்கூட, இரண்டாவது முறை படிக்கும்போது சுவாரசியம் மேலும் அதிகரித்தது என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. "ஓலைச்சுவடிகள்' கட்டுரையும், "நாடி ஜோதிடம்' கட்டுரையும் குறிப்பிடத்தக்க இரண்டு கட்டுரைகள். "அந்தக் கால விளம்பரங்கள்' என்கிற கட்டுரையில் படிப்பதற்கும், ரசிப்பதற்கும், சிரிப்பதற்கும் நிறையவே இருக்கின்றன.

இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள் அசைபோடத்தக்க ஆவணம். இப்போது சமையல் கலை, யூ ட்யூப் சேனல்களில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. அந்தக் காலத்தில் மீனாட்சியம்மாள் எழுதிய "சமைத்துப் பார்' புத்தகம் அமோக விற்பனையை எட்டிய வரலாறு இன்று பலருக்கும் தெரியாது. மூன்று தலைமுறை கடந்து அவரது பெயர்த்தி பிரியா ராம்குமார், இன்றைய தலைமுறைக்குப் புரியும்படி "சமைத்துப் பார்' நூலைக் கொண்டு வந்திருப்பதும், அது அமேசானில் கிடைக்கிறது என்பதும் எவ்வளவு ஆச்சரியமான தகவல்.

காலம் நகர்ந்தாலும் அது தன் காலடிச் சுவடுகளை "தடம்' பதித்துச் செல்கிறது.

 

 

கவிஞர் பிருந்தா சாரதியின் "பச்சையம் என்பது பச்சை ரத்தம்' கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது. "மழை எழுதுவதை மனிதனால் எழுத முடியாது' என்று வான் சிறப்புடன் தொடங்குகிறது அந்தத் தொகுப்பு. இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை நறுக்கென்று மூன்று வரிகளில் பசுமை ஹைக்கூக்களாகப் படைத்திருக்கிறார். அதிலிருந்து ஒரு கவிதை,
நெல்லிக்காயை நெல்லிக்கனி ஆக்கியது ஒளவை - அதியமான் நட்பு!

Tags : இந்த வார கலாரசிகன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT