தமிழ்மணி

குடிமக்கள் நலம் பேணும் அறவழி ஆட்சி!

4th Apr 2021 06:18 PM | -முனைவர் வே. குழந்தைசாமி

ADVERTISEMENT

 

தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு அறத்தைப் பேணும் சமுதாயமாக இருந்துள்ளது. சங்க இலக்கியங்கள் தொடங்கி காப்பியங்கள், அற இலக்கியங்கள் மற்றும் பிற்காலப் படைப்புகள் எல்லாவற்றிலும் அறநெறிகள்  முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இலக்கியங்கள் அறம்சார் சமுதாயத்தைக் கட்டமைக்கும் வழிகாட்டிகளாகவும், தூண்டுகோலாகவும் அமைந்துள்ளன.

ஒரு சமுதாயத்தில் அறநெறி கீழிருந்து கட்டமைக்கப்பட வேண்டும். அப்பணியில் குடும்பமும், கல்வி நிறுவனங்களும், சமயக் கோட்பாடுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. அவ்வகையில், அறநெறியை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் சமுதாயத்தில் அறநெறிச் சிந்தை ஊடுருவி எல்லாத் தளங்களிலும், அனைத்து துறைகளிலும் விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆயினும், பட்டாங்கில் அவ்வாறான விரும்பிய மாற்றம் நிகழ்தல் அரிதாகவே உள்ளது.

இவ்வாறு ஒருவழிக் கட்டமைப்புக்கு உறுதுணையாக "அறச்சார்புடைமை' என்பது இருவழியாகக் கட்டமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். அறநெறி வழுவாத சிந்தையும், செயலும் உச்சத்தில் தொடங்கி அருவி வீழ்ச்சிபோல் கீழ்நோக்கிப் பாய்ந்தால் அதன் தாக்கமும், வீச்சும் சமுதாயத்துக்கு நற்பயன் விளைப்பதாய் அமையும்.

ADVERTISEMENT

சங்க இலக்கியங்களில் இந்த அணுகுமுறையே மிகுதியாய் வலியுறுத்தப்படுகின்றது. அறம் சார்ந்த சமுதாயத்தின் மகுடமாக அரசியல் பிழையாத ஆட்சி கருதப்பட்டது. மன்னர்கள் பெற்ற வெற்றிகள், அவர்கள் அளித்த கொடைகளைக் காட்டிலும் அறவழி ஆட்சி செய்தமையே சிறப்பித்துக் கூறப்படுகின்றது. திருவள்ளுவர் இக்கருத்தை, ஒரு குறட்பாவில் ((546) தெளிவுபடக் கூறியுள்ளார்.

கரிகால் பெருவளத்தான், தொண்டைமான் இளந்திரையன் ஆகியோரது ஆட்சியானது முறையே, "அறனொடு புணர்ந்த, திறனறி செங்கோல்' எனவும், "அல்லது கடிந்த, அறம்புரி செங்கோல்' (பத்துப்பாட்டு) எனவும் போற்றப்படுகின்றது. அவ்வாறே பாண்டியன் நெடுஞ்செழியனும்,

"அரசியற் பிழையாது அறநெறி காட்டி / பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது' ஆட்சி செய்ததாகக் கூறப்படுகின்றது. இத்தகைய குடிமக்கள் நலம் பேணும் ஆட்சியையே மக்கள் போற்றுவர்; அடிபற்றித் துணை நிற்பர் என்பதை 544-ஆவது குறளில் திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.

அருளும் அன்பும் இல்லாது, பாவச் செயல்களைச் செய்வாரோடு சேராது, குடிபுரத்தலே மன்னனின் தலையாய கடமை எனவும்; தாய் குழந்தையைக் காப்பதுபோல் மன்னன் மக்களைக் காக்க வேண்டும் எனவும் நரிவெரூவுத்தலையாரின் "அருளும் அன்பும் நீக்கி' (புறநா) என்ற பாடல் பகர்கின்றது.

கம்பர், தயரத மன்னனின் அறவழி ஆட்சியின் பன்முகப் பாங்கினை "தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும்' (பா.கா.171) என்ற பாடலில் கூறுகிறார். அன்பு செலுத்துவதில் தாய் போன்றும், நலம் பயப்பதில் செய்யும் தவம் போன்றும், இறுதிச் சடங்குகள் செய்வதில் பெற்ற மகன் போலவும், நோயுற்றவிடத்து மருந்து போலவும், நூல்களை ஆய்ந்து கற்பதால் பெறும் அறிவு போலவும் மன்னன் குடிமக்களுக்குத் துணை நிற்கிறானாம்.

இவ்வாறு குடி ஓம்பும் மன்னன் குடிமக்கள் அனைவரின் உயிரும் ஒரே உடம்பில் உறைவது போன்று உருக்கொண்டுள்ளான் (பால.கா.177) என்கிறார். அவ்வாறன்றி, அறம் சாராது ஆட்சி செய்கின்ற ஆட்சியாளரின் கீழ் வாழும் குடிமக்கள் துன்பம் உறுதல் இயல்பு.

பாலைக்கலி, தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலையைக் குறிக்குமிடத்தில், "முறை தளர்ந்த மன்னன்கீழ் குடிபோல கலங்கும்' என்று உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் "தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்' என்று கூறியுள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் நெறி சார்ந்து ஆட்சி செய்ய வேண்டுமெனில், சில சீரிய பண்பு நலன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக, ஆட்சியாளர்கள் புகழ்ச்சி - இகழ்ச்சியால் மனம் மாறுபடாதவர்களாக, நீதி வழங்குவதில் நடுநிலை காக்க வேண்டும். இக்கருத்தை, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழன் இளஞ்சேட்சென்னியின் சிறப்பியல்பாக, "வழிபடு வோரை வல்லறி தீயே' என்று உரைக்கிறார்.

அதுபோன்றே, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு கருதாது அனைவரையும் சமமாக எண்ணும் மனநிலை நாடாளும் மன்னனுக்கு இன்றியமையாதது என்பதை "அறநெறி முதற்றே அரசின் கொற்றம் / அதனால் நமரெனக் கோல் கோடாது / பிறர் எனக் குணங் கொல்லாது' என்று புலவர் மருதன் இளநாகனார் கூறியுள்ளார்.

அறநெறி சார்ந்த ஆட்சியின் மறுபக்கமாக எண்ணப்படுவது நீதி நிர்வாகம். ஆகவே, அறநெறி சார்ந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது அறங்கூறு அவையம். அந்த அவையம் துலாக்கோல் போல் நடுநிலை வழுவாததாகவும், நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகவும், சிறந்த கொள்கைகளை உடையதாகவும் இருக்க வேண்டும் என்பதை மதுரைக் காஞ்சி "அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி' என்று குறிப்பிடுகின்றது.

ஆட்சிமுறையும், நீதி நிர்வாகமும் நெறிசார்ந்து செயல்படுவது தலையாயது எனினும், குடிமைச் சமுதாயமும் சான்றோர் தலைமை ஏற்பதற்கு ஏற்ற சூழல் கொண்டதாய், சுயநல வேட்கை அற்றதாய் இருத்தல் இன்றியமையாதது.

அறவழிப்பட்ட ஆட்சியின் மாண்புகள் காலத்தையும், நாட்டின் எல்லையையும் கடந்து என்றும் நிலைத்து நிற்பவை; இவை எவ்வகை (மன்னராட்சி, மக்களாட்சி) ஆட்சி முறைக்கும் பொருந்தக்கூடியவை.

Tags : குடிமக்கள் நலம் பேணும் அறவழி ஆட்சி!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT