காத்திருத்தலின் வலி எப்பொழுதும் ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தே இருக்கிறது. காத்திருப்பில் நிகழும் தாமதத்தை ஓரிரு சொற்களால் இட்டு நிரப்பிவிட இயலாது. நேரம் எப்படி விரயமாகுமோ அப்படித்தான் வாழ்வும் கரைந்து போகிறது. ஒருபோதும் திரும்புவதே இல்லை.
அவன் பிரிவால், அவன் வரவை எதிர்நோக்கி மரக்கிளையில் ஏறி தாவித் தாவிப் பார்க்கிறதாம் அவள் மனம். நினைவுகள் புறப்பட்டுப் புறப்பட்டு நைந்து போகுமோ என்று நினைக்கும் தறுவாயில்... அதன் பக்கங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. முற்றத்தில் இருந்த மரத்தில் மட்டும் ஏறிப் பார்த்ததா? தோட்டத்துக்கும் சென்றதா?
கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்று, "மரத்தடியில் காத்திருக்கிறேன் / மரம் ஏறிப் பார்க்கும் மனது' என்கிறது. கவிஞர் கருவாச்சி என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதியிருப்பார். இவ்விரண்டு கவிதைகளுமே குறள் கருத்தைப் பிரதிபலிக்
கின்றன.
நீ வரும் திசையை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்பதை விடவா
அழகான கவிதையை
எழுதிவிடப் போகிறேன்...
என் வாழ்நாளில்
கிளைகள் தோறும்
ஏறிப் பார்க்கிறது மனது!
எனும்போது தலைவியின் நெஞ்சம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது. அவன்தான் வந்துவிடுவானே... பிறகு ஏன் இத்தனை வேதனை, வலி? மரத்தடி நிழலில் சற்று இளைப்பாறினாள். நினைவை அசை போடலாமே... ஒருவேளை மரநிழல் போல் தலைவன் நினைவு பொழுதுக்கு ஏற்றாற்போல் வளர்ந்திருக்குமோ? பூக்களின் மென்மை, பறவைகளின் சப்தம், கேலியாய்ப் பார்த்துச் சிரிக்குமோ...?
அவன் அருகே வருவதற்குள் கிளை ஏறிப் பார்ப்பதற்கான காரணம், இத்தனை காலப் பிரிவைத் தாங்கிக் கொண்டவள் கண்ணுக்கெட்டும் தூரத்தைக் கடப்பது யுகமாய் மாறியதோ? அவன் வருகை என்பதே எத்தனை இனிய செய்தி! அதை இந்த உடல் உறுப்புகளிடம் சொன்னால் எங்கே கேட்டுத் தொலைக்கின்றன? உன் வருகைக்காகக் காத்திருப்பதை விடவா ஆகச்சிறந்த ஒன்று நம் வாழ்வில் இருந்துவிடப் போகிறது...?
"கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு' (குறள்-1264)
என்னோடிருந்தவர்
இன்பத்தை நெய்தவர்தான்
இக்கணம் பிரிவெய்தியிருக்கிறார்
கிளைகள்தோறும் ஏறி அவர் வரவை
திசையெல்லாம் பார்க்கிறது என் மனம்!
என்று அற்புதக் கவிதையாக்கிச் சொல்கிறார் திருவள்ளுவர்!