தமிழ்மணி

சிந்தனைக்கு அரிய சொற்றொடர்!

சிற்பி பாலசுப்பிரமணியம்

"செந்தமிழ் நாடு' என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் பாடிய நான்கு வரிப் பாடல் தமிழர்களின் சிந்தனைக்கு அரிய விருந்தாகும்.
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி-என மேவிய யாறுபல வோடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு!
இப்பாடல் வரிகளில் தமிழ் நாட்டில் பாயும் ஆறுகளைத் தமிழ் நாட்டின் மையப் பகுதியிலிருந்து வடக்குத் திசையில் பாய்கின்ற ஆறுகளை வரிசைப்படுத்திச் சொல்லி விடுகிறார். முதலில் காவிரி பின்னர் சற்றுப் பல மைல் தூரம் வடக்கில் பாயும் தென் பெண்ணை, தென்பெண்ணைக்குச் சற்று வடக்கில் தொண்டை மண்டலத்தில் பாயும் பாலாறு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு இவை மூன்றும் தமிழ் நாட்டின் வளத்துக்குக் காரணமான ஆறுகள். அந்த நதிகள் பாய்ந்து வளப்படுத்துகின்றனவேயன்றி அவற்றுக்கு வேறு சிறப்புகள் ஏதுமில்லை. அதனால் அடைமொழிகளாக பாரதியாரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
மேலும், தமிழ் நாட்டின் மையப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதிகளை அடுத்தடுத்துச் சொல்ல வேண்டும். தெற்கில் குறிப்பிட்டுச் சொல்ல வையை, பொருநை ஆகிய இரு நதிகளே உள்ளன. அந்த ஆறுகளின் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி, பாடலை நிறைவு செய்ய மகாகவி பாரதி விரும்பமில்லை.
முதலில் வையை நதியைக் குறிப்பிட வேண்டும். அது வெறும் ஆறு மட்டுமன்று; மூன்று தமிழ்ச் சங்கம் கண்ட வையை ஆறு அது. இந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் கண்ணுதற் பெருங்கடவுளும், முருகப் பெருமானும், பாண்டிய மன்னர்களும், அகத்தியரும் மற்றும் புலவர்கள் பலரும் இருந்து காலம் காலமாகத் தமிழ் வளர்த்ததை வையை ஆறு கண்டும் கேட்டும் மதுரை நகர் வழியே காலம் காலமாக ஓடிக்கொண்டிருக்கிறதே... தமிழைக் குடித்துக் குடித்து தமிழ் வளம் கண்டதாயிற்றே இந்த வையை! அதற்குத் தெற்கே ஓடும் பொருநை குறுமுனி அகத்தியர் குடியிருந்து தமிழ் வளர்த்த பொதிகை மலையில் அல்லவா தோன்றியது... அதுவும் குறுமுனிவனின் தமிழைக் கண்டதாயிற்றே... கேட்டதாயிற்றே...
அதனால்தான் "தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி' என்று அவற்றுக்கு அடைமொழி கொடுத்து தமிழுக்கும் இவ்விரு நதிகளுக்கும் சிறப்பு செய்து மகாகவி பாரதி பாடலை முடிக்கிறார். மகாகவி பாரதி பாடல்களின் தனிச்சிறப்பு இதுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT