தமிழ்மணி

அன்னதோர் புன்மை!

முனைவர் ப.பாண்டியராஜா

ஒரு மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்கச் செல்கிறார்கள். பெண் மிக அழகாக இருக்கிறாள். அவர்களுக்குப் பிடித்துபோய் உடனே உறுதி செய்துவிட்டுத் திரும்புகிறார்கள். ஊரிலுள்ளவர்கள் பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா சொல்கிறாள், "அழகுன்னாலும் அழகு, அப்படியொரு அழகு.' அதென்ன "அப்படியொரு அழகு'? "விவரிக்க முடியாத அழகு', "மிக மிக அழகு' என்பதையெல்லாம் குறிக்கக்கூடிய அற்புதமான சொல் வழக்கு இது.

இந்த அருமையான சொல் வழக்குக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டைக் காண்போம். மிகவும் வறுமைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் திடீரென்று செல்வ நிலையை அடைகிறது. இதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ஒருவர் சொல்வார், "போன மாசம் இந்நேரம் அப்படி ஒரு தரித்திரம், இன்றைக்கு வந்த வாழ்வைப் பாரு'.  "அப்படி ஒரு' என்ற இந்த சொல்வழக்கு, இங்கும் "மிக மிக', "சொல்ல முடியாத' என்ற பொருளைத் தருவதைக் காணலாம்.

இன்றைக்குச் சாதாரணமாகப் பொதுமக்களிடையே வழக்கிலிருக்கும் இந்தச் சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்காகவும் இருந்திருக்கிறது என்பது விந்தையான செய்தி!

வறுமையில் வாடிய பொருநன் ஒருவன் தன் குடும்பத்துடன் ஒரு மன்னனைப் பார்க்கச் செல்கிறான். பொருநன் என்பவன் கூத்துப் போடுபவன். பொதுவாக இந்தப் பொருநர்கள் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்திருப்பார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு நீண்ட பயணம் மேற்கொண்ட பொருநன் குடும்பம், இறுதியில் மன்னனின் அரண்மனையை அடைகிறது. மன்னன் ஒரு பெரிய வள்ளல். அதிலும் இசைக் கலைஞர்களைப் பெரிதும் போற்றுபவன். பொருநர்களின் இசையைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த மன்னன், அவர்களின் கிழிந்த ஆடைகளைக் களைந்து பட்டாடைகளை உடுத்துவிக்கிறான். பசியால் வாடிப்போன வயிறுகளைப் பலவித உயர்ந்த உணவு வகைகளால் நிரப்புகிறான். இறுதியில் கள்ளினையும் வேண்டிய அளவு கொடுத்து அரண்மனையில் ஒரு பக்கத்தில் தூங்க வைக்கிறான்.

மறுநாள் காலையில் அரைத் தூக்கத்தில், மயக்கம் முழுக்கத் தீராத நிலையில் எழுந்த பொருநன், சுற்றுமுற்றும் பார்த்துத் திகைத்துப் போகிறான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது பழைய தரித்திர நிலையே இன்னமும் அவனுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிறது. பின்பு தன் பட்டாடைகளைப் பார்த்துப் பரவசமடைகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவன் கூறுகிறான்,
மாலை அன்னதோர் புன்மையும், காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு!  (பொருந. 96-98)

இதன் பொருள்: (முந்திய) மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு சிறுமையும், காலையில் கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு பார்த்தீர்களா! இங்கு வரும் "அன்னதோர் புன்மை' என்ற இந்த அன்றைய இலக்கிய வழக்கு இன்றைக்கும் நாம் பயன்படுத்திவரும் "அப்படி ஒரு வறுமை' என்ற அன்றாட வழக்குக்கு இணையாக இருக்கிறதல்லவா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT