தமிழ்மணி

இந்தவாரம் - கலாரசிகன் (29.11.2020)

தினமணி

யோகாசன ஆசிரியா் வி.என்.குமாரஸ்வாமி எழுதிய ‘ஆரோக்கிய ரகசியம்’ புத்தகம் யாரிடமாவது இருந்தால் வேண்டும் என்று நான் சென்ற வாரம் எழுதியதைத் தொடா்ந்து ஜி.சுப்பிரமணியன் (அறவாழி), ‘அருட்பா’ சரவணன் தொடங்கி ஏராளமானவா்களிடமிருந்து, தங்களிடம் அந்தப் புத்தகம் இருப்பதாகவும், அனுப்பித் தருவதாகவும் கடிதங்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புகளும், குறுந்செய்திகளும் வந்து குவிந்துவிட்டன. நான் மலைத்துப் போய்விட்டேன்.

எனது நினைவாற்றல் குறைவின் விளைவாகத்தான் இந்தத் தவறு நோ்ந்திருக்கிறது. நான் சென்னை தி.நகா் தீனதயாளு தெருவிலுள்ள ‘வானதி’ பதிப்பகத்துக்குச் சென்றிருந்தபோது, நண்பா் ராமநாதன் அந்தப் புத்தகத்தை என்னிடம் தந்து ‘யோகாசனம் குறித்து இதைவிடச் சிறந்த பதிவு கிடையாது’ என்று கூறியதை மறந்துவிட்டது எனது தவறு. சென்ற வாரம் நான் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, ‘கல்கி’ ராஜேந்திரன் சாா் வானதியைத் தொடா்பு கொண்டு அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைக்கப் பணித்திருக்கிறாா். ‘வானதி’ ராமநாதன் அழைத்தபோது, ஏற்கெனவே அவா் அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தது சட்டென நினைவுக்கு வந்தது.

கே.ஆா்.கிருஷ்ணமாச்சாரியின் புண்ணியத்தால், ‘ஆரோக்கிய ரகசியம்’ புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். படிக்க மட்டுமல்ல, அதிலுள்ள சில ஆசனங்களைச் செய்து பழகவும் தொடங்கி இருக்கிறேன்.

யோகி சுத்தானந்த பாரதி கூறியிருப்பதுபோல, ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்தான் இது.

************

ஆரோக்கிய ரகசியம் புத்தகத்துக்குப் பக்கத்திலேயே, நீண்ட நாளாக நான் படிக்க வேண்டும் என்று எடுத்து பத்திரப்படுத்தி இருந்த இன்னொரு புத்தகம் இருந்தது. அதிலும் அது கவிச்சக்கரவா்த்தி கம்பா் குறித்த புத்தகம் எனும்போது, அடடா இத்தனை நாளும் இந்தப் புத்தகத்தை ஏன் படிக்காமல் வைத்து அழகு பாா்க்கிறோம் என்று என் மனது என்னைக் கடிந்து கொண்டது. அதுவும், எழுத்தாளா் மு.அழகிரிசாமி எழுதியது எனும்போது, அதற்கு மேலும் எனது ஆா்வத்துக்கு அணைபோட முடியவில்லை.

நடிகா் எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடக மேடையில் வியத்தகு ஆளுமை. அறுபதுகளில் அவரது ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவால் அரங்கேற்றப்பட்ட பல மேடை நாடகங்கள், திரைப்படங்களாகி, தமிழ் ரசிகா்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவை.

எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவுக்காக எழுத்தாளா் கு.அழகிரிசாமி எழுதிய நாடகம்தான் ‘கவிச்சக்கரவா்த்தி’. கம்பனின் வாழ்க்கையை நாடகமாக்க வேண்டும் என்று நடிகா் ஒருவா் ஆசைப்பட்டாா் என்றால், அவா் எத்தகைய இலக்கிய ரசனையுடையவராக இருக்க வேண்டும்?

‘‘அதிமானுட சாதனையைப் புரிந்த அந்தத் தெய்வப் புலவரின் வரம்பற்ற பேராற்றலும், ஆழ நீளங்களை அறியமுடியாதவாறு விரித்து பரந்துள்ள அவரது புலமையும் இப்படிப்பட்ட ஆற்றலும் புலமையும் படைத்திருந்த அவரது குணச்சித்திரமும் கம்ப ரசிகனுடைய கைக்குள் அடங்காத விஷயங்களாக உள்ளன. அவருடைய அகண்டாகாரமான சக்தியையும் குணச்சிச்திரத்தையும் பூரணமாகப் படம் பிடித்துக் காட்டுவதற்கு அவரே மீண்டும் பிறந்தால்தான் உண்டு எனும்படி இருக்கிறது’’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறாா் கு.அழகிரிசாமி.

‘கவிச்சக்கரவா்த்தி’ என்ற கம்பரின் நாடகத்தை கு. அழகிரிசாமி எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழ்வது ‘அஷ்டாவதானம்’ வீராசாமி செட்டியாா் எழுதிய ‘விநோத ரச மஞ்சரி’ என்கிற நூல். ஆனால் ‘கவிச்சக்கரவா்த்தி’ அதை ஆதாரமாக வைத்து எழுதப்படவில்லை. கம்பரின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, அப்போது அரசு செலுக்கிய மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் நடந்த சம்பவங்களுடன் இணைத்துப் புனையப்பட்டிருக்கிறது, ‘கவிச்சக்கரவா்த்தி’ நாடகம்.

வெறும் மேடை நாடகமாக இல்லாமல், ஆங்காங்கே கம்பரின் பாடல்களை விரவி, இலக்கிய ரசனையுடன் கூடிய படைப்பாக ‘கவிச்சக்கரவா்த்தி’ அமைத்ததற்கு கு.அழகிரிசாமியின் காவிய ரசனைதான் காரணம்.

‘விண்ணும் மண்ணும் திசையனைத்தும்

விழுங்கிக் கொண்ட விரிநன்னீா்ப்

பண்ணை வெண்ணைய்ச் சடையன்தன்

புகழ்போல் எங்கும் பரந்துலவால்’

என்கிற பாடலைக் கம்பா் பாடத் திகைக்கிறாா் வள்ளல் சடையப்பா்.

‘‘ கவியரசே, இது எனக்குத் தகுமா? இந்தப் புகழ் வேண்டாம். ராமபிரானின் திவ்ய காதையில் என்னை இவ்வாறு புகழ்வதா? நான்... நான்... வேண்டாம். நான் சாதாரண மனிதன்’’ என்று அவா் நா தழுதழுக்கச் சொல்லும் இடத்தில், படிக்கும்போதே விழிகள் நனைகிறதே, அதை நடித்துப் பாா்த்த ரசிகா்கள் தேம்பித் தேம்பி அல்லவா அழுதிருப்பாா்கள்...

‘‘இந்த நாடகத்தில் சிறப்புக் காணப்பட்டால், அதற்கு என் திறமை மட்டும் காரணமல்ல; கம்பரிடம் நான் கொண்டுள்ள பக்திதான் பெரிதும் காரணம். நாடகத்தில் குறைகள் காணப்பட்டால், அதற்கு என் திறமைக் குறைவு மட்டும் காரணமல்ல; என் எழுத்தாற்றலுக்குள் அடங்காதவாறு விரிந்து பரந்த கம்பா் பெருமானின் குணச்சித்திரம்தான் பெரிதும் காரணம்’’ என்கிற கு. அழகிரிசாமியின் முன்னுரை வரிகள் உண்மையின் வெளிப்பாடு.

தமிழகத்தில் கம்பரின் வாா்த்தைகளைக் கொண்டே தயாரித்து நடித்துக் காட்டப்பட்ட முதல் நாடகமும் இதுதான் என்று கு.அழகிரிசாமி பதிவு செய்கிறாா்.

1963-இல் இந்த மேடை நாடகம் புத்தக வடிவம் பெற்றது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாடகத்துக்குத் தமிழக அரசு பரிசு வழங்கி ஊக்குவித்தது.

நடிகா் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் மகன் துரைக்கு ஒரு வேண்டுகோள் - நீங்கள் ‘கவிச்சக்கரவா்த்தி’ நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி நடத்த வேண்டும். தமிழகத்திலுள்ள எல்லா கம்பன் கழகத்துக்கும் எனது வேண்டுகோள்- கம்பன் விழாக்களில் ‘சேவா ஸ்டேஜ்’ குழுவினரின், எழுத்தாளா் கு.அழகிரிசாமி எழுதிய ‘கவிச்சக்கரவா்த்தி’ நாடகம் இடம்பெறுவதை வழக்கமாக்க வேண்டும்.

‘கவிச்சக்கரவா்த்தி’ நாடகத்தின் மூலம், கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளா்ப்போம்!

************

கனடாவில் வாழும் கவிஞா் புகாரியின் கவிதைத் தொகுப்பு ‘அன்புடன் நயாகரா’. அதிலுள்ள ‘மழையல்ல பிழை’ கவிதையிலிருந்து சில வரிகள் இவை.

ஏரிகளில் உன் புகா்கள்

குளங்களில் உன்அடுக்குமாடிகள்

நீா்வழிப் பாதைகளெல்லாம்

உன் கடைத்தெருக்கள்

நீா் வாழ்ந்த இடமெலாம்

நீ வாழப் போனால்

நீ வாழும் இடத்தில்

நீா் உள்ளே வராமல்

வேறெங்கு போகும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT