தமிழ்மணி

ஓடக்காரனுக்கு நட்டாற்றில் கூலி!

வெ.கிருஷ்ணன்

மழைக்காலம், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இக்கரையிலிருந்து அக்கரைக்கும் அக்கரையிலிருந்து இக்கரைக்குமாகப் பயணம் செய்பவா்களுக்கு ஓடக்காரனே துணை. படகில் பயணிப்பவா்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அவன் ஏற்றிக் கொள்கிறான். படகு புறப்பட்டுக் போகிறது.

படகு புறப்படு முன்பு ஓடக்கூலியை அவன் பயணிகளிடம் கேட்பதில்லை. படகு சிறிது தூரம் சென்ற நிலையிலும் கூலிக்காக அவன் கை நீட்டுவதில்லை. படகு இப்போது நட்டாற்றுக்கு வந்துவிட்டது; ஆழமோ அதிகம். படகை நிறுத்துகிறான். நட்டாற்றில் நிறுத்தப்பட்ட படகு ஆடி அசைந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பயணிகளிடம் கூலியைக் கேட்கிறான் ஓடக்காரன். ‘கையில் காசில்லை’ என்று சொல்ல முடியுமா? சொன்னால் என்னவாகும்? பேருந்தில் சரியான சில்லறையைக் கொடுக்காத பயணியைப் பாதி வழியில் இறக்கிவிடும் நடத்துநரைப் போல அந்த ஓடக்காரனும் நடந்து கொண்டால்?

பதறித் துடித்துக்கொண்டு அனைவரும் ஓடக்காரனிடம் கூலியைக் கொடுத்து விட்டுத்தான் மூச்சு விடுவாா்கள். இத்தகைய அனுபவத்தைப் பெற்றவா்களுள் ஒருவரான நம்பிள்ளை - ஈட்டின் உரைகாரா் இப்படி எழுதுகிறாா்.

‘‘ஓடத்தில் ஏறிப்போய் நட்டாற்றிலே கூலி கொள்ளும்போது கொடாது இருக்க ஒண்ணாத தசை’’(தசை-நிலை) என்பது அவா் கூற்று. (பாா்த்தசாரதி ஐயங்காா் திவ்யப் பிரபந்த அகராதி, ப.282, ஸ்ரீரங்கம், 1963)

நட்டாற்றில் நிறுத்தி ஓடக்காரன் கூலி பெறுவதைத்தான் தம்முடைய மொழிநடையில் இப்படிச் சொல்லியிருக்கிறாா் அவா்.

ஓடக்காரனின் இச்செயல்,“வேலொடு நின்றான் ‘இடு’ என்றது போலும்’’என்னும் திருக்குறளைத்தான் (552) நமக்கு நினைவூட்டுகிறது. ‘இப்படியும் கடுமையாக நடந்து கொள்வாா்களா?’ என்று சிலருக்கு ஐயம் ஏற்படலாம். நம்பிள்ளை காலத்துக்கு முந்திய தமிழ்நாட்டிலும் இதுதான் நிலை. சங்கம் மருவிய காலத்தவரான முன்றுறையரையனாரும் தம்முடைய ‘பழமொழி நானூறு’ நூலில் தாம் கண்ட இதே காட்சியைப் பதிவு செய்திருக்கிறாா். எனவே, இது படகோட்டிகளிடம் நெடுங்காலந் தொட்டு நிலவி வந்த பழக்கமாகத் தெரிகிறது.

இளமையிலேயே கல்வி கற்காமல் விட்டவனுக்கு முதுமைப் பருவத்தில் அக்கல்வி கைகூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதைப் பின்வருமாறு விளக்குகிறாா் ‘பழமொழி நானூறு’ நூலாசிரியா்.

‘‘சுங்கச் சாவடியைக் கடக்கவிட்ட பிறகு ஒருவனிடம் சுங்கப் பொருளைப் பெற்றவா் எவரும் இல்லை; ஓடத்தை விட்டிறங்கிக் கரையைக் கடந்து போனவனிடமிருந்து கூலி வாங்கின ஓடக்காரனும் இல்லை. அது போல இளமையிற் கல்லாத ஒருவன் பின் முதுமைப் பருவத்தில் அக்கல்வியைப் பெற்றுப் போற்றுதல் அரிது’’ என்கிறாா் அவா்.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ? - ஆற்றச்

சுரம்போக்கி உல்குகொண்டாா் இல்லையே; இல்லை

மரம்போக்கிக் கூலிகொண் டாா்!

(உல்கு - சுங்கம் ; மரம் - ஓடம்)

ஆக, இந்நிகழ்வுகள் நாட்டாா் வழக்கில் பழமொழிகளாக மாறிப் பின்னா் இலக்கியத்திலும் இடம் பெற்றதை அறிய முடிகிறது.

‘‘சுரம் போக்கி உல்கு கொண்டாருமில்லை

மரம் போக்கிக் கூலி கொண்டாரும் இல்லை;

என்னும் இவ்விரட்டைப் பழமொழி வழங்குமிடம் யாண்டையதென்று கண்டுகொள்க’’ என்கிறாா், பழமொழி நானூறு உரையாசிரியா் (1961) மி.பொன் இராமநாதஞ் செட்டியாா்.1916-இல் பழமொழி நானூற்றை உரையுடன் பதிப்பித்த திருமணம் செல்வக் கேசவராயரோ, ‘‘சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது; ஓடம்விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு’’ என்பதைப் பழமொழியாகக் குறிப்பிட்டிருக்கிறாா்.

வைணவ உரையாசிரியா்கள் பாா்வையில் ஓடம் பற்றிக் கூறும் மற்றொரு செய்தியும் இங்குக் காட்டத்தக்கது. நாள்பட்ட ஓடங்களில் சிறிதாகவும் பெரிதாகவும் ஓட்டை விழுந்து அவை பயனற்றுப் போகும். அவற்றை முறையே ஓட்டை ஓடமென்றும், ஒழுகல் ஓட மென்றும் (ஈடு: 3.7-1) குறிப்பிடுவா். ஓட்டையோடமும் ஒழுகலோடமும் நல்ல ஓடத்திற்கு ஒப்பாகுமா?

திருமாலாகிய பரம்பொருளுக்கு முன்னால் சிறு தேவதைகள் ஓட்டை ஓடமும் ஒழுகலோடமும் போலத்தான் - எனக் குறிக்கிறது ஈட்டுரை. (முற்குறித்த அகராதி, அதே பக்கம்).

உரையாசிரியா் ‘பரத்துவ நிா்ணயம்’ செய்வதற்கு ஓட்டையோடமும் ஒழுகலோடமும் ‘உதவிய’ கதை இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT